ஆதிக்க எண்ணம்
ஆதிக்க எண்ணம்
இந்த உலகத்தில் எல்லா உயிரினங்களுக்கும், மனித குலத்திற்கும் ஒத்து போக கூடிய முக்கியமான சில விசயங்களில், இந்த ஆதிக்க மனப்பான்மையும் ஒன்று.
“வலியது” எப்பொழுதும் ஆதிக்க மனப்பான்மையுடன் தான் இருக்கிறது. அதே நேரம் இயற்கை அளித்துள்ள சுற்றுபுற வாழ்வியலில் “வலியது” என்பது எது என்று நிர்மாணிக்க முடியாமல் போய் விடுகிறது. இதை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம்.
“எலிக்கு” வலிய மிருகம் “பூனை” என்றால் பூனை அதனை விட “நாயை” கண்டு மிரளுகிறது. அதே நேரம் நாய் அதனை விட “வலிய மிருகங்களிடம்” அடங்கி போய் விடுகிறது.
இது ஒரு முறை என்றால் மற்றொரு முறை, ஒரு இனத்தில் இருக்கும் விலங்குகளில் வலிமையானது மற்ற வலிமை குறைந்த தனது இனத்தாரை விரட்டி ஆதிக்க மனப்பான்மையை நிறுவி விடுகிறது.
சாதாரண கோழி, சேவல் எடுத்து கொள்ளுங்கள். ஒரு சேவல் மற்றொரு சேவலை அருகே நெருங்க விடுவதில்லை. அதுவும் முக்கியமாக கோழிகளின் அருகில். அப்படி வரும்போது ஒன்றை ஒன்று தாக்கி “யார் பலசாலி” என்பதை நிருபித்து அதன் பின் தன் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது.
இதே கதைதான் எல்லா விலங்குகளுக்கும். ஆனால்..!
மனித குலத்திற்கு மட்டும் நான்கைந்து வகைகளில் ஆதிக்க மனப்பான்மை உண்டு. ஒன்று “புஜ பலம்”, இரண்டு “பண பலம்”.
ஒரு கூட்டத்தில் ஒருவனிடம் இருக்கும் புஜ பலம் கண்டு பலர் அவனை விட்டு ஒதுங்கி நிற்க நினைப்பர். அவனும் அந்த பலத்தின் மூலம் அவர்களை ஆக்ரமிக்க நினைக்கிறான். அதே நேரத்தில் பண பலம் கொண்டவன் தன்னுடைய பணபலத்தால் தனக்கு பாதுகாவலாக பல “புஜ பல” பராக்கிரம்சாலிகளை தன்னுடன் வைத்து பிறரை ஆட்டுவிக்க முயற்சிக்கிறான்.
இந்த இரண்டையும் தவிர்த்து அதிகார பலம் என்று ஒன்றிருக்கிறது. அதிகாரத்தை வைத்து கொண்டு பல இடங்களில் தன்னுடைய பலத்தை காட்டுகிறான்.
இதில் ஆண் பெண் என்ற பேதமெல்லாம் இல்லை. எல்லோரிடமும் இதே மனப்பான்மை இருந்து கொண்டுதான் இருக்கிறது
இன்னொன்று கூட இருக்கிறது. அதாவது “மூளை பலம்” (திறமை). தன்னுடைய புத்தி கூர்மையால் பிறரை அதிகாரம் செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது, என்றாலும் இவர்கள் தன்னுடைய ஆதிக்க எண்ணத்தை வலுப்படுத்த குறைந்த அளவே செலவிடுகிறார்கள். காரணம் இவர்களுக்கு இவர்களை பற்றிய உயர்ந்த எண்ணம், (தற்பெருமை) அதே நேரத்தில் அதை நிருபிக்க, மிகுந்த அளவு உழப்பை கொடுக்கிறார்கள். அதனால் ஆதிக்க மனப்பான்மை காட்டுவதற்கு பதிலாக நம்மிடம் எப்படி புத்திசாலித்தனமாக வேலை வாங்கி கொள்ளலாம் என்பதை திட்டமிட்டு செயல்படுத்தி காட்டுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண் பெண்ணுக்குள்ளும் இந்த ஆதிக்க எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. இது தக்க சமயத்தில் வெளிப்பட்டு தன்னுடைய உண்மையான சொரூபத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
இந்த எண்ணத்தினால் சங்கடம் வருகிறது என்று நினைப்பதை விட இந்த எண்ணம் கொண்டவர்கள்ஏதோவொரு விதத்தில் முன்னேறுகிறார்கள் என்று பாசிட்டிவாக நினைப்போமே. அதாவது இந்த ஆதிக்க எண்ணத்தை பிறரிடம் காட்ட உழைப்பை கொடுக்கிறார்கள். உதாரணமாக ஒருவன் பிரயாசைப்பட்டு சொந்த தொழில் நடத்தி தன்னை ஒரு நிறுவனத்துக்கு உரிமையாளனாக்கி கொண்டு அதன் பின் அவனிடம் சேரும் பணியாட்களை, தன் அதிகாரத்தின் மூலம் முதலாளி-தொழிலாளி என்னும் நோக்கில் ஆதிக்கம் செய்கிறான்.
அதே போலத்தான் கல்வியிலும், நன்கு படித்து முன்னேறி ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஒரு பதவியை கைப்பற்றி அதன் மூலம் தன்னுடைய மனப்பான்மையை தனக்கு கீழ் உள்ளவர்களிடம் காட்டுகிறான். மானேஜர்-சூப்பர்வைசர், சூப்பர்வைசர்-தொழிலாளி,
இங்கும் வேடிக்கை பாருங்கள், கீழ் பதவியில் இருப்பவன் தனக்கு கீழே உள்ளவர்களிடம் காட்டும் மனப்பான்மையை அவனுக்கு மேல் இருக்கும் அதிகாரி இவனிடம் காட்டுகிறான். அவனிடம் அவனை விட மேலிருக்கும் அதிகாரி தன்னுடைய ஆதிக்கத்தை காட்டுகிறான்.
இப்படி ஏறு முகமான சூழ்நிலையிலேயே இந்த ஆதிக்க மனப்பான்மை மனிதர்களிடம் இருந்து கொண்டிருக்கிறது.
அதேதான் மதம் சாதி இவைகள் கூட. ஏதொவொரு மதம் எடுத்துக்கொண்டால் அதில் பல பிரிவினைகள், அதில் நான் பெரிது, நீ சிறிது என்னும் மனப்பான்மை கொண்டு ஒருவர் மற்றொருவரிடம் ஆதிக்கத்தை காட்ட முயற்சிக்கிறோம். அல்லது சாதிகளில் இவர்களாக தங்களை பெரிது, சிறிது என்னும் மனப்பான்மையில் ஒருவரை ஒருவர் ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றனர்.
உலகம் முழுக்க இதே மன நிலைதான். உலக நாடுகளை எடுத்து கொள்ளுங்கள். சிறிய நாட்டின் அருகில் இருக்கும் அதனை விட பெரிய நாடு தன் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சிக்கிறது. ஆனால் அடுத்து இருக்கும் இதை விட பெரிய நாடு இதனை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது.
இப்படித்தான் உலக நாடுகள் தங்களுடைய ஆதிக்க மனப்பான்மையை எதன் மீதாவது திணிக்க முயற்சித்து கொண்டே இருக்கின்றன.
ஆதிக்க எண்ணம் இல்லாதவர்களே இல்லை என்பதுதான் உலக வாழ்வியலில் நிதர்சனம். நம்முடைய உடலையே எடுத்து கொள்ளுங்கள், நம் உடலில் இருக்கும் கிருமிகள் மற்ற கிருமிகளின் மீது ஆதிக்கம் செலுத்தத்தான் முயற்சிக்கிறது. இப்படி இடைவிடாத போராட்டத்தினால்தான் நம்முடைய உடல் ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறது. வெளியில் இருந்து வரும் நோய் கிருமிகளை எதிர்த்து சண்டையிட்டு விரட்டவும் செய்து விடுகிறது. இப்படி தன்னுடைய செயல்களை தொடர்ந்து நடத்தி நம் உடலை காப்பாறுகின்றன.
கடைசியாக இந்த கட்டுரை (நகைச்சுவையாக) சொல்ல வருவது என்னவென்றால் சில நேரங்களில் நம்முடைய மனம் பிறரது ஆதிக்க செயல்களால் மனம் வருத்தப்பட்டு சோகப்பட்டு நிற்கும்போது, தயவு செய்து இதை நினைத்து ஆறுதல் படுத்தி கொள்ளுங்கள். அதாவது பாதிக்கபட்ட நாம் கணவன்-மனைவி (ஆண்-பெண்) அல்லது ஆண்-ஆண், பெண்-பெண், முதலாளி-தொழிலாளி, தொழிலாளி-மானேஜர், உற்றார்-உறவுகள், ஏழை-பணக்காரன், இப்படி ஏதாவது ஒரு காரணிகளால் பாதிக்கப்பட்டிருப்பின் மேற்கூறப்பட்ட “உலகமே ஒரு ஆதிக்க சூழ்நிலை கொண்டதுதான்” என்று நினைத்து மனதை தேற்றி கொள்ள வேண்டும், என்பதுதான்.