இரவு உணவு

வேலைமுடிந்த வெறுங்கையோடு
களைந்த அழுக்குத் துணிகளைக்
கல்லில் இரண்டு கும்மி கும்மி
குளித்து வீட்டிற்குள் நுழைகிறாள்
அடுப்பேற்றும் உலைப்பானைக்கு
நெருப்பு வைத்த நொடியிலே
சூடேறிக் கொதிக்கிறது நெஞ்சு
ஐயோ அரிசி இல்லையேயென்று
வீடுவீடாய் ஏறியிறங்கும் மனம்
ஒருவீட்டில் போய் நின்றதும்
நம்பிக்கையுடன் ஓடித் திரும்பி
உலையில் அரிசி போடுகிறாள்
முருங்கையின் போத்தொடித்துப்
பழுப்பற்ற கீரையை உருவியவள்
சிறிது புளியை ஊறவைத்த பின்
கொள்கலங்களை ஆராய்கிறாள்
ஊதா மஞ்சள் சிவப்பென்று
நெகிழி மூடிகளைத் திறந்துமூட
பருப்பு இல்லையென்றானதும்
சாம்பார் குழம்பாய் மாறுகிறது
எப்போதும் போல் ஏமாற்றாமல்
மல்லிமிளகாய்த் துணை நின்று
இரு வெங்காயம் தேங்காயுடன்
மண்சட்டியில் ஒன்று கலக்கிறது
சோறுவடித்துக் குழம்பிறக்கி
ஆவி பறக்க பரிமாறுகையில்
பனியில் நனைந்த மலர்போல்
குளிர்ந்தது சூடேறிய நெஞ்சு.
(உஉ/சா/உ0ருச)
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..