முறம்

முறம் ....!
------
மூங்கில் இழைகளால் முடையப்பட்டு
பசுஞ்சாணியால் நன்கு மொழுகப்பட்டு
கைகளுக்கு இதமாய் ஏந்துவதற்கு சுலபமாய்
அன்றாடம் உபயோகித்த ஓர் அருபொருள்
இன்றைய தலைமுறை அறியாத ஒன்றாய்
அருங்காட்சியத்தில் வைத்த அழகு பொருளானதே...
உணவக சுவற்றில் தொங்கும் கலைபொருளானதே..
விஞ்ஞானம் செய்யாத அதிசயத்தை அந்நாளில்
இயந்திரங்கள் இல்லாது தம் கையை தான் நம்பி
தட்டித்தட்டி புடைத்து வீசி எழுப்பி கீழே விழும்
கல் உமி கலந்த தானியத்தை லாவகமாய்
மீண்டும் முறத்தில் பிடித்து களைந்தெடுத்த
கரிசல்காட்டு பெண்கள் செய்த மாயாஜாலத்தை
காண கண் கோடி வேண்டுமே.
மென்மையான அப்பெண்கள் சிலநேரம்
தாக்க வந்த புலியைக்கூட முறம்கொண்டு
புறமுதுகிட்டு ஓட்டிய கதைகளும் உண்டு.
இவை சொல்லும்... இனிதே எச்சரிக்கும்...
வாழ்க்கைத் தத்துவமும் ஒன்று உண்டு.
நல்லதும் கெட்டதும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.
வாழ்க்கையை புடைத்தெடுத்து லாவகமாய்
கெட்டதை களைந்தெடுத்து சமயத்தில்
வீரமாயும் விவேகமாயும் முன்னேறி சென்றுவிட்டால்
யாருக்கும் புறமுதுகு காட்டாமல்
வெற்றிவாகை சூடிடலாமே....!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (27-Jun-23, 9:23 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : MURAM
பார்வை : 31

மேலே