யார் பெரியவன்-அத்தியாயம் மூன்று

விவாதம் வேர் கொண்டது!
பிடிவாதம் போர் கொண்டது!
◆ ◆ ◆
ஆணவம் பகடை ஆனது!
அறிவு சகடை ஆனது!
◆ ◆ ◆
நெருடல் முற்றி போனது!
நேரம் வற்றி போனது!
◆ ◆ ◆
நீண்ட தர்க்கம்
நிறைவு பெறுவதாயில்லை!
◆ ◆ ◆
நீதியரசர் ஒருவரை நாடலாம்
நீலக்கோள் நீட்டி முடித்தது!
நல்லதொரு யோசனை
நீலவானம் நயன்றது
◆ ◆ ◆
நீர் என்ன
நினைக்கிறீர் என்று
(நீர்)இடமும் கேட்டது.
◆ ◆ ◆
நீதிமான் வரவுக்கு
நீரும் இசைந்தது.
◆ ◆ ◆
நிரூபணம் செய்வேன்
நீதிபதியை வர சொல்
என்று
(தீ)யும் சுட்டது.
◆ ◆ ◆
கொண்டலும் தயக்கமின்றி
கொண்டு வா என்றது.
◆ ◆ ◆
ஐகாரமும்
ஒரு சேர
ஒன்றாய்
ஒலித்தது!
சரி
யாரை நாடலாம்
◆ ◆ ◆
மீண்டும்
ஐவரின்
சிந்தனை
சிந்து பாட தொடங்கியது
◆ ◆ ◆
நீதி சொல்ல
நடுநிலை தன்மை வேண்டும்!
நா பிறழாமை வேண்டும்!
◆ ◆ ◆
அறம் திரியா
அன்பு நிலை அகமும் வேண்டும்.
◆ ◆ ◆
விருப்பு, வெறுப்பறியா
நெருப்பு எந்தன் குணம் வேண்டும்
நேர்படவே சொன்னது (தீ).
எழுநா சொன்னதில்
ஏதும் தவறில்லை
யவரொருவர் அப்படி இருப்பார் -என்னும்
பெருங்குழப்பம் தீர்ந்தாயில்லை!
◆ ◆ ◆
உலக உயிர்கள் தான்
உண்மை நிலை சொல்ல வேண்டும்
உலகம் மீண்டும் உருண்டு சொன்னது.
◆ ◆ ◆
எதோ உள்நோக்கம் உண்டென்று
உரக்க சொன்னது வானம்.
◆ ◆ ◆
ஏன் அப்படி
எதிர்வாதம் வைத்தது பூமி!
◆ ◆ ◆
உலக உயிர்கள்
உம்மை விட்டு தருமா?
◆ ◆ ◆
தாங்கி பிடிக்கும் உன்னிடம் - உயிர்கள்
ஏங்கும் ஏக்கம் எனக்கு தெரியாதா?
◆ ◆ ◆
அன்னை பூமி என்றும்
உன்னை சாமி என்றும்
கைதொழும் கூட்டம்
உன்னை எப்படி விட்டு விடும்.
◆ ◆ ◆
உடன்பாடு இல்லை
உரக்க சொன்னது ஆகாயம்.
சரி தான் என்பது போல்
சலசலத்தது நீரும்.
◆ ◆ ◆
இல்லை
அப்படி ஏதும் இல்லை
உலக உயிர்கள்
ஐவருக்கும் பொதுவானவைதான்
கருத்து சொன்னது காற்று!
கழுத்தை ஆட்டியது புவனம்.
சரி
உலக உயிர்கள் என்றால்
எந்த ஜீவனிடம் கேட்பது
உலகம் மீண்டும் உலுக்கியது
◆ ◆ ◆
புரை நீக்கி
நீதி சொல்ல
பூமியின் உயிர்கள்
பொருத்தம் என்று
புவனம் சொன்னதால்
உண்மை சொல்லும்
உயிரை கண்டுகொள்ள
உச்சி மாநாடு தொடங்கியது.
◆ ◆ ◆
குரங்கை அழைக்கலாமா?
குரல் கொடுத்தது காற்று!
அலைபாயும் மனது
ஆளுக்கு ஒன்றாய் சொல்வான்.
அலைக்கழித்தல் செய்தது அருவி.
◆ ◆ ◆
யானையை அழைக்கலாமா?
யதார்த்தமாய் கேட்டது தீ.
மதம்பிடித்த விலங்கு
மனுநீதி சொல்லாது
மறுதலித்தது வானம்.
◆ ◆ ◆
நரி?
என்று
பொறி தட்டியது
தென்றல் காற்றுக்கு.
வேண்டவே வேண்டாம்.
தந்திர புத்திக்காரன்
தர்க்கத்துக்கு உதவுவான் அல்ல
தடாலடியாய் தள்ளியது நீர்.
◆ ◆ ◆
சிங்கம், புலி?
சிணுங்கியது மீண்டும் அகிலம்.
கொடுங்கோல் விலங்குகள்
செங்கோல் அறம் சொல்லாது
கோவமாய் பதில் வந்தது
அக்னி குஞ்சிடம்.
◆ ◆ ◆
சரி
பசு என்று
பவ்வியமாய்
வருடியது காற்று
வாயில்லா ஜீவன்
வாய்தா செல்லும்
வழக்கு முடியாது.
◆ ◆ ◆
பறவை இனங்கள்?
பாச பறவைகள்
பகுத்தறிந்து பதில் சொல்லாது.
◆ ◆ ◆
மண்ணின் உயிர்களில்
மனிதன் தான் சிறந்தவன்
நம்
மகத்துவம் அறிந்தவன்
மடை திறந்து சொன்னது நீர்
◆ ◆ ◆
மௌனம் நிலவியது
சில கணங்கள்.
மறுப்பவரும் இல்லை
மறுதலித்தலும் இல்லை
மீண்டும்
அதே மௌனம்.
◆ ◆ ◆
முடிவெடுக்கும்
முக்கிய நிர்வாகிகள்
முடங்கி போனால்
முடிவு என்னவாகும்?
முணுமுணுத்தது வானம்?
◆ ◆ ◆
மணித்துளிகள் சிந்திக்கலாம்
மாற்றுக்கருத்துகளை சந்திக்கலாம்
மகத்தான முடிவுகள் வர
மாமாங்கம் கூட ஆகலாம்.
பொறுமை கொள்!
பொதுவாய் பதில் வந்தது பூமியிடம்.
◆ ◆ ◆
சரி
பகுத்தறிவு' ஜீவன் அவன்
பதில் சொல்ல ஏற்றவன்
வர சொல்
வாஞ்சையாய் சொன்னது வளி
◆ ◆ ◆
மனிதனை அழைப்பதென்று
மாமன்றம் முடிவெடுத்தது.
இன்னும் வ(ள)ரும்.

எழுதியவர் : நா தியாகராஜன் (2-Jul-23, 7:46 am)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 36

மேலே