தேடல் முடிந்தது
நான் யார்?
கேள்வியைப் பிடித்துக்கொண்டு
அல்லாடுகிறேன்...அலைபாய்கிறேன்.
நான்
நல்லவனா?...கெட்டவனா?
உத்தமனா?....செத்தவனா?
நான் சொல்வதெல்லாம் சரிதானா?
செய்வதெல்லாம் நியாயம்தானா?
என்னைப் பொறுத்தவரை
ஆம்...
எல்லாம் சரிதான்... நியாயம்தான்
ஆனால் மற்றவர்க்கு...
தெரியவில்லை.
நான் வைத்திருப்பதோ
ராமாயணம்
மற்றவரிடம் இருப்பதோ
மகாபாரதம்.
நான் செய்வது
இலங்கை போரென்றால்
மற்றவர் செய்வது
குருஷேத்ர போர்.
ஆனால் போர்...போர்தான்.
போரின் காயங்கள்
பெரிதாய்தானே இருக்கும்.
என்னால் மற்றவர்க்கும்
மற்றவரால் எனக்கும்
வெளியில் தெரியும்
தெரியாது உள்ளே
புரையோடிப் போகும்
காயங்கள்
பெரியதாய் தானே இருக்கும்.
யானை குதிரைகளால்
நசுக்கப் படுவாய்.
சக மனித வீரர்களின்
வாளால் காயப்படுவாய் - சொல்
அம்புகளால் தைக்கப்படுவாய்.
போர்க்களத்தில் குதித்தபின்
சமாதானத்திற்கு அர்த்தம்
தேடி ஆகப்போவதென்ன?
நஷ்டங்களுக்கும் - வரும்
கஷ்டங்களுக்கும் தயார் படுத்திக் கொள்.
போரிலிருந்து ஓடிவிடலாமா?
என நினைத்து
மயங்குவதோ - புறமுதுகு
காட்டி ஓடுவதோ
போர் தருமமில்லை.
பிடித்தாலும் பிடிக்காமல் போனாலும்
போரிட்டுத்தான் ஆகவேண்டும்.
தப்பிக்க முடியாது.
போர்க்களத்தில் நின்றுகொண்டு
யோசிப்பதில் என்ன பயன்?
கோழையோ இல்லை வீரனோ
எடு உன் வாளை
தொடு உன் அம்பை.
சாகும்வரை போர்களம்தானே...
போராட்டம்தான்..
போராடித்தானே ஆகவேண்டும்.
ஒன்றைமட்டும்
உறுதி படுத்திக்கொள்.
யுத்தம்...தர்ம
யுத்தமாய் இருக்கவேண்டும்.
தேடல் முடிந்தது.
யுத்த அணிகலன்கள்
அணிந்து விட்டேன்.
கையில் வாளை எடுத்துவிட்டேன்.
ஜெய் விஜயீ பவ..
ஜெயகோஷ முழக்கத்தோடு
களத்தில் குதித்து விட்டேன்.