யாதுமாகி நின்றேன்

எத்தனை எத்தனை நல்லோர்களையும்
சிலர் பார்வைகள்
அப்பாற்பட்டுதான் பார்க்கும்
தீ நாக்குகளால் வஞ்சம் பேசத்தான்
செய்யும்.
ஆதலால்
நாம் வாழும்
எந்த ஒரு அழகான சூழலுக்கான காரணங்களை மட்டுமே
தேடிச்செல்வது சரியாகும்.

காதுகள் கேட்கவேண்டாம்.
வாய் பேசாதிருக்கட்டும்.
கண்களில் கருணை இருக்கட்டும். விஷவார்த்தைகள் வேர்வரை
பாயும். ஆராயும். கதைப்பேசும்.
உன் முந்தைய நிஜம் சொல்லும்.
நாலுப்பேர் முன்பு ஏளனம் செய்யும்.
ஊர்ப்பார்க்கச் சிரிக்கும்.
கர்மமோ ஊழ்வினையோ
உத்தமம் என்றால் ஒப்புக் கொள்.
ஏன் என்றால்
பிழையின் ஆதிக்கத்திலிருந்து
விடைப்பெற்றுப் போகிறாய்.
இந்த அவமானங்கள் எல்லாம்
யார் நினைத்தாலும் ஒருமுறைதான்.
உன்னை அறிந்தவர்கள்
இத்தனைப் பேர்தான்.
இவர்களைவைத்து உலகத்தார்
உன் முகத்தில் உமிழ்வதையும் கடந்துவிட்டால்
இனி ஏதும் இல்லை
அதுதான் ஞானதீட்சை.

திட்டாதது ஒன்றுதான் குறையென்றிருக்கும்.
தெரிந்தோ தெரியாமலோ
யாருக்கோ செய்த துரோகங்களுக்கும்
பாவங்களுக்கும்
அவர்களிடமேச் சென்று
நேருக்குநேர் நின்று
திட்டுவாங்கித் தீர்த்துவிட்டோமேயானால்
அதுதான் பாவ விமோச்சனம்.

நம்மோடு இருந்த யாரோ
நமக்காகவே இருந்திருப்பார்கள்.
நமக்காகவேதான் வாழ்ந்திருப்பார்கள்.
நாம் புன்னகைக்க மகிழ்ந்திருப்பார்கள்.
நமக்கொருக் கஷ்ட்டம் என்றால்
உழன்றிருப்பார்கள்.
ஓடிவந்து உடன் நின்றிருப்பார்கள் .
நாம் எதையும் கண்டுக்கொள்ளமாட்டோம்.
காலம் கடந்துபோகும்
அப்போதும் கண்டுகொள்ள மாட்டோம்.
எப்போதாவது அவர்கள்
நம்மை எதேர்ச்சையாகக் கடக்கிறபோது
"நீ இன்னும் இங்கதான் இருக்கியா?
என்னும் அசட்டுச் சிரிப்பினால்
முகம் முறித்திருப்போம்"

ஒரு நேரம் அவர்களை
முழுமையாய்த் தொலைத்திருப்போம். வாழ்வில் செழித்திருக்கும் சமயம் புதியவர்கள் வந்திருப்பார்கள்.
நினைவு மறந்து, பெயர் மறந்து
முகவரி மறந்து, முகம் மறந்து
கண்கெட்டாதூரம்
காட்சிப்பிழையென
கரும்புள்ளியாய்
அதுநின்றுத் தொடரும்
சொல்லொணாத வாக்கியமுமாய்,
பேரிருண்மையின்
அறை ஒன்றில்
தானுலரும் தண் உணர்வுமாய்
இன்னும் இன்னும் ஏதேதோ என எல்லாமுமாய் ஆகி
மறைந்தே போயிருப்பார்கள்.

பிணி, காலத்தால் ஆனது.
நிகழவிருக்கும் மறுசுழர்ச்சியினால்
உள்ள-அலைகள்‌ சுத்திகரிக்கும்.
ஆர்ப்பரிக்கும்.

இன்னொரு முறைக்காய் காத்திருப்போம்தானே .

பூக்காரன் கவிதைகள் - பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (19-Jul-23, 3:49 am)
Tanglish : yathumaagi nindren
பார்வை : 43

மேலே