வானப்பிரஸ்தம் - அகத்தவம்
தேவதைகள் சுயநலமற்றவை.
அவை கடவுள்களின் ஆணைகளுக்கு உட்பட்டவை.
ஆணைக்காக காத்திருக்கும்.
கடவுளின் ஆணை வரும்போது அவ்விடம் விட்டு சென்றுவிடும்.
ஆளுமைத் தெரிந்தவர்களின்
கட்டுப்பாட்டிற்குள்
எப்போதும் ஜொலித்திருக்கும்.
உங்களைச் சுற்றியேதான் வியாபித்திருக்கும்.
உங்களைப்போலவே
சாதாரணமாக வெகுஜனமாக
வேறு எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கும்.
கொடுக்கத் தெரிந்திருக்கும் தேவதைகளுக்கு
பெறும் தகைமை இல்லை.
தேவதைகள் சிலநேரம் கடவுள்களால்
சபிக்கப்பட்டவையும் கூட .
தேவதைகளுக்கு பாலினம் கிடையாது. தேவதைகளுக்கு
காதல் வரமாக்கப்பட்டவை அல்ல.
தேவதைகளின் வீடு
பட்டாம்பூச்சிகளின் கூடாரம் போல்.
தேவதைகள்
தன் நிலை எண்ணி
புலம்பிக் கொண்டிருப்பதில்லை.
தேவதைகள் தான்தேவைகளுக்கு
அப்பாற்பட்டவை.
தேவதைகளாக இருப்பது
அத்தனை சுலபமில்லை.
பிறரால் பழிக்கப்படுகின்றன
பிறரால் தூற்றியெறியப் படுகின்றன
இன்னபிறரால் காயப்படுகின்றன.
ஆனால் அத்தனையும் சிரித்துக்கொண்டேதான்.
என்றோத் தோன்றிடும்
தேவதைகளின் அணிவகுப்புகள்
அபூர்வமாய் நிகழும்
வானப்பிரஸ்தம்(அகத்தவம்) ஆகும்.
பைராகி