உற்றுநோக்கல்
உற்றுநோக்கல்
*****************
விண்ணுற்று நோக்குகையில் வெளிச்சத்தோ டிருளும்
வெண்மேகப் புத்தகத்தின் வேறு பக்கம்
கண்ணுற்று கொள்ளென்னும் கற்பனையி னூற்றுக்
கனவென்னும் பள்ளியாகிக் கற்பித்துப் போகும்
மண்ணுற்று நோக்குகையில் மனிதாபி மானம்
மனிதர்க்குள் இல்லையெனும் மந்திரத்தை ஓதும்
புண்பட்டுக் கொள்ளென்னும் புரியாதப் புதிரை
பொல்லாதார் செய்கைவழிப் போட்டுவிட்டு ஓடும்
*
பெண்ணுற்றுப் பார்த்துவிடின் பேரன்பாய் வீழும்
பீரங்கி நெஞ்சத்தைப் பெயர்த்தெடுத்துப் போடும்
பண்ணுற்றுப் பார்த்துவிடப் பலநூறு வண்ணம்
பரிசளிக்கும் சங்கதிகள் பதுங்கிநின்றி னிக்கும்
தண்ணுற்று நோக்குகையில் தாங்குகின்றப் பூவில்
தன்னெழிலை பிரசவித்து தனித்துவமாய்ச் சூழும்
உண்ணுமுண வதையிங்கு உற்றுப்பார்த் தாலோ
உபத்திரவ மத்தனையும் உருகொண்டு ஆடும்
*
எண்ணுற்று நோக்குகையில் எண்ணற்ற வண்ணம்
எம்முள்ள மதிசயிக்க எதிர்வந்து நிற்கும்
திண்ணுற்றத் தோள்களின்மேல் தேர்வைத்துக் கொண்டு
திருவீதி வருவதுபோல் தெய்வீகந் தோன்றும்
வண்மொழியாம் தமிழுற்று வகைவகையாய் நோக்க
வருகின்ற இன்பத்தேன் வழியோடும் நெஞ்சம்
நுண்ணறிவு டனெதையுமே நோக்குகையில் மட்டும்
நூறுநூறு அர்த்தங்கள் நுழைந்திடுமே என்றும்!
*
மெய்யன் நடராஜ்
15-09-2023