எழிலுழும் காளை

எழிலுழும் காளை
*******************
விடிவதற்கே கிழக்கிருக்க
விரட்டிவிட லாமா - அது
விரட்டிவிடப் போமா - மன
விரக்தியுறு மாமோ - தினம்
வெறுத்தொதுக்கிக் கதவடைக்க
வேதனைபடு மாமோ
*
படிப்பதற்கே நூலிருக்கப்
படுத்துறங்க லாமோ - வரும்
பகல்மறக்க லாமோ - வீண்
பழிசுமக்க லாமோ - உன்
பகலதையே இருளெனவே
பாழ்படுத்த லாமோ
*
இடுப்பொடிய உழைப்பவர்கள்
இருக்கின்ற நாடு - இங்கு
இல்லாமை கேடு - அதை
இருத்துன்நெஞ் சோடு - உன்
இல்லாமையு மில்லாதுற
எதிர்த்தேபோ ராடு
*
அடுப்பெரிக்க விறகின்றி
அல்லலுறும் மக்கள் - கொளும்
அன்றாடச் சிக்கல் - மனை
அடக்கிவைக்கும் விக்கல் - அதன்
அவதானமு மிலையேயெனில்
அடைவாயொரு துக்கம்
*
மடிவதற்கே முடிவெடுத்து
மனசுடையும் கோழை - அவன்
மனிதர்களில் ஏழை - புது
மனிதனென நாளை - ஒரு
மறுபிறவி எடுப்பானெனில்
மகிழ்ந்தணிவான் சேலை
*
இடியுடனே மழையடித்தும்
எழுந்துயர்த்தும் தோளை - கொளும்
இளையவனே நாளை - மண்ணின்
எழிலுழுவும் காளை - இவன்
எதிரேவர புதிதாய்தரும்
இளஞ்சோலைகள் மாலை
*
மெய்யன் நடராஜ்
22-09-2023

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Sep-23, 1:54 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 32

மேலே