விதை நெல்

விதை நெல்
இந்த கதையின் கரு என்னுடையது அல்ல “நெல் வயல்” என்னும் சிறுகதை. எழுதியவர், ஆங்கில வடிவம் பேர்ல்.எஸ்.பக்., தமிழில் மொழி பெயர்ப்பு ஆ.எஸ்.பிரகாசம். பதிப்பு: இளங்கோ பதிப்பகம், வருடம் 1999

விவசாயிகள் அனைவரும் இறுகிய முகத்துடனும், மனதுக்குள் பெரும் அச்சத்துடனும் அவர்கள் எதிரே பேசிக்கொண்டிருந்த இளைஞனை பார்த்தபடி அமர்ந்திருந்தனர். அவனருகில் துப்பாக்கி ஏந்தியபடி இரண்டு பேரும், உட்கார்ந்திருந்த விவசாயிகளை சுற்றி துப்பாக்கி ஏந்திய வீரர்கள், பலரும் விவசாயிகளை குறிவைத்தபடி துப்பாக்கிகளை காட்டிக்கொண்டு நின்றனர்.
அவர்களுக்கு எதிரே நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞனுக்கு இருபத்தி ஐந்து அல்லது ஆறு இருக்கலாம். அவன் பேச்சில் ஒரு தீவிரம் தெரிந்தது, இறுதியும் காணப்பட்டது. அதனால் எந்த சந்தேகங்களையும் ஒரு விவசாயியும் அவனிடம் கேட்கவில்லை. அவனே ஒன்றை சொல்லி அதுதான் இறுதி என்பது போல சொல்பவனிடம் என்ன சந்தேகம் கேட்க?
கேட்டால் பக்கத்தில் இருக்கும் அந்த துப்பாக்கி வீரனிடம் கண்ணை காட்டினால் போதும் அங்கேயே சுட்டு வீழ்த்தப்பட்டு விடுவான். இது போல பக்கத்து ஊரில் நடந்திருக்கிறது என்பதை அந்த விவசாயிகள் அறிந்திருந்தார்கள்
முதலாவது முடிவே அவர்களுக்கு இடி விழுந்தது போலிருந்தது. இனிமேல் வரப்பு என்று எதுவும் கிடையாது, நாளையில் இருந்து அனைத்து விவசாயிகளும் அவர்களது வரப்புக்களை வெட்டி சமப்படுத்தி விட வேண்டும். அடுத்த முடிவு இனிமேல் இந்த விவசாயிகள் நிலம் அவர்களுக்கு சொந்தமில்லை. அனைத்தும் அரசுக்கு சொந்தமாகி விடுகிறது. அனைத்து விவசாயிகளும் அவரவர்களுக்கு என்ன வேலை ஒதுக்கப்பட்டிருக்கிறதோ அதை நிலத்தில் வந்து செய்ய வேண்டும். மூன்றாவது முடிவு மேலிடத்து அரசு என்ன பயிரிட விரும்புகிறதோ அதைத்தான் அங்கு பயிர் செய்ய வேண்டும். அந்த இளைஞன் உறுதியுடனும், தெளிவாகவும் சொல்லிக்கொண்டிருந்தான்.
அந்த கூட்டத்தில் சோணாச்சலம் மட்டும் உள்ளத்துடிப்புடன் எழுந்து அந்த இளைஞனிடம் பேச வேண்டும் என்று நினைத்தபடியே இருந்தார். அந்த இளைஞனை பார்க்கையில் அவருக்கு சக விவசாய மனிதனாக தோன்றினான். அவன் மனமுவந்து இந்த செயல்களை சொல்ல கூடியவனாக இருக்க மாட்டான் என்று நம்பினார். அதனால் எழும்ப முயற்சி செய்வதும் பின்னால், அருகில் இருப்பவர்கள் அவரை இறுக்கி பிடித்து உட்காரவைப்பதுமாக இருந்தனர்.
ஒரு கட்டத்தில் பொறுமை மீறி எழுந்தவர் தம்பி ஒரு நிமிசம்..! அந்த நொடியில் அனைத்து இயக்கங்களும் அமைதியாகி விட்டன. எல்லா துப்பாக்கி முனைகளும் சோணாச்சலத்தை குறிபார்த்து நின்றன.
என்ன? அந்த இளைஞன் கேட்ட கேள்வியில் கடூரம் தெரிந்தது. நான் பேசும்போது குறுக்கே பேசினால்..! எச்சரிக்கையும் தெரிந்தது.
நீங்கள் சொல்லும் பயிரைத்தான் இங்கு விளைவிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ஆனால் மண் ஏற்று கொள்ள வேண்டுமே? எங்களை போன்ற விவசாயிகளுக்குத்தான் தெரியும் எதை போட்டால் இந்த மண் ஏற்று கொண்டு எவ்வளவு விளைச்சல் கொடுக்கும் என்று.
அதைப்பற்றி உமக்கென்ன கவலை? இங்கு அரசு சொல்வதுதான் சட்டம், இந்த மண்ணில் இதுதான் விளைவிக்கவேண்டும் என்று சொன்னால் அதை நடைமுறை படுத்துவது மட்டும்தான் உம்முடைய வேலை. போதும் உட்காரும்..அதிகாரமாய் சொன்னான்.
இருக்கட்டும் தம்பி அரசாங்கத்தை நடத்துபவர்கள் விவசாயிகளா?
எரிச்சலாய் பார்த்தான் அந்த இளைஞன் இது அநாவசியமான கேள்வி, அவர்கள் நன்கு யோசித்துதான் என்ன பயிரிடலாம் என்று சொல்வார்கள்.
இருக்கட்டும், அவர்களுக்கு விவசாயத்தை பற்றியோ அல்லது அதை பற்றிய சிறு விசயமும் அறியாமல் குளிரூட்டப்பட்ட அறைகளில் முடிவு செய்து அதை பயிர் செய்ய விவசாயிகளை வற்புறுத்துவது என்ன நியாயம்?
சட்டென்று அந்த இளைஞன் தனது சட்டைப்பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து நீட்டினான். இதற்கு மேல் உமக்கு என்னிடம் பேச அதிகாரம் கிடையாது. இப்படி எதிர் கேள்விகளை கேட்பவர் மீது சுட்டு விடவம் எனக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள்.
அதற்குள் மற்ற விவசாயிகள் பாய்ந்து வந்து சோணாச்சலத்தை அமுக்கி பிடித்து “முட்டாளே உட்கார்” உன்னால் நாங்கள் எல்லோருமே சுடப்பட்டு விடுவோம், நாங்களும் சாக வேண்டுமா? அவன் என்ன சொல்கிறானோ அதை செய்து விட்டு போய் விடலாம். தயவு செய்து உட்கார்.
சோணாச்சலத்துக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை. ஒரு நிமிடத்தில் அவர் உயிர் பிழைத்திருந்தார். என்றாலும் அவர் மனம் சமாதானமாகவில்லை. இந்த பூமி அவருடையது, அவருடைய முப்பாட்டன், பாட்டன், தாத்தான், அப்பாரு, அனைவரும் உழுது பயிர் செய்த பூமி, இவருக்கும் கற்று கொடுத்து உணவு அளித்து கொண்டிருக்கும் பூமி. அவருக்கு தெரியாத விசயமா? என்னுடைய மண் எதை பெற்று கொள்ளும், நிராகரிக்கும் என்பது எனக்குத்தான் தெரியும். இவர்களுக்கு தெரியுமா? வெறும் துப்பாக்கியில் குண்டை போட்டு என்னை சுட்டு கொன்று விட்டால் மண் இவர்கள் சொன்னபடி கேட்டு விடுமா? மனம் கொந்தளித்தது. ஆனாலும் அவர் மனதுக்குள் அந்த இளைஞனின் மேல் நம்பிக்கை இருந்தது, நான் சொன்னால் கேட்பான்.
என்ன..! பகலில் கேட்டால்தானே மற்றவர்கள் தடுக்கிறார்கள், இரவில் போய் கேட்கலாம். முடிவு செய்தவர் அதே போல் இரவானதும் அந்த இளைஞன் தங்கியிருந்த அறைக்குள் செல்கிறார்.
அந்த நேரத்திலும் அந்த இளைஞன் சிம்னி விளக்கில் ஏதோ எழுதி கொண்டிருக்கிறான்.
தம்பி..
சட்டென்று தலையை தூக்கியவன் இருளில் இவர் முகம் தெரியாமல் யாரது?
தம்பி நான்தான் பகலில் உங்களிடம் சந்தேகம் கேட்டவன்.
முகத்தில் சலிப்பு தோன்ற உமக்கு அப்பொழுதே சொல்லி விட்டேனே, மறுபடி மறுபடி இங்கு வந்து தொல்லை தராதீர்.
தம்பி கோபித்து கொள்ளாதே, யோசித்து பார் இந்த பூமியின் விவசாயிக்கு தெரியாததையா உன் அதிகாரிகளுக்கு தெரிய போகிறது, அது மட்டுமல்ல, நீங்கள் சொல்லும் அமெரிக்க ஐரோப்பா விவசாயிகளை போல நிலத்தை ஆழ உழ சொல்கிறீர்கள். இது நெல் விளையும் பூமி, இதற்கு அவ்வளவு வேர் பிடிப்பு தேவையில்லை, ஆழ உழுவதும் அவசியமில்லை.
அடுத்து விதை நெல் எங்களிடம் பெறப்படாது என்கிறீர்கள், இந்த மண்ணிலிருந்து வந்த விதை நெல்லுக்குத்தான் இந்த மண்ணை பற்றி தெரியும். நீங்கள் எங்கிருந்தோ தருவிக்கும் விதை நெல்களுக்கு இந்த மண்ணின் குணம் தெரியுமா?
அதை பற்றி உமக்கென்ன கவலை, அவர்கள் சொல்வதை ஏற்று கொள்வதுதான் உமது வேலை.
தம்பி உன்னை பார்த்தால் எங்கள் விவாசாயின் மகன் போல தெரிகிறது, தயவு செய்து சொல்லுங்கள், இது ஆக கூடிய காரியமா?
அந்த இளைஞன் பெருமூச்சு விட்டான். சொன்னால் கேட்கமாட்டீர்க்ளா? பக்கத்து ஊரில் இப்படி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டாரென்று கேள்விப்பட்டீர்களா?
கேள்விப்பட்டோம், அதற்காக…
முட்டாளே கொல்லப்பட்டது வேறு யாருமல்ல, என் தந்தைதான். நானும் விவசாயத்தை செய்து படித்து வளர்ந்தவன். இருந்தும் தந்தையிடம் எத்தனையோ முறை சொன்னேன், கேட்காமல் என் கண் முன்னால் சுட்டு கொல்லப்பட்டார். அது மட்டுமல்ல இந்த அரசாங்கத்தால் என்னையே இந்த பணிக்கு செல்லுமாறு நிர்பந்திக்க பட்டு வந்திருக்கிறேன். அந்த இளைஞனின் முகத்தில் கண்ணீர்.
சோணாச்சலத்துக்கு திருப்தியாய் இருந்தது, தம்பி இது போதும் நீயும் விவசாயிதான், என்றாலும் உயிருக்கு பயந்து.. நான் செல்கிறேன்.
மறு நாளில் இருந்து கரைகள் உடைக்கப்பட்டு சமவெளியாக்கப்பட்டு ஆழ டிராக்டர்களை கொண்டு உழப்பட்டது. அதுவரை மாடுகளால் உழுதவர்கள் வியப்பாய் டிராக்டரின் செயல்பாடுகளை பார்த்து கொண்டு நின்றனர்.
ஆனால்..!
அந்த பூமிகளில் நிலத்திற்கு தகுந்தவாறு விளைவித்த பயிர்கள் மாற்றப்பட்டு ஒரே முறையில் நெல் பயிரிட, அதுவும் ஆழ உழப்பட்டதால் அனைத்து நிலங்களுக்கும் அங்கிருந்த ஆற்று நீர் பற்றாக்குறையாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் ஆழ உழுததால் பாய்ச்சப்பட்ட தண்ணீர் முழுவதும் பூமிக்குள்ளே போய் தண்ணீர் சுத்தமாக காணாமல் போய் விட்டது.
நடப்பட்ட நெல் நாற்றுக்கள் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட விதையில் இருந்து தோன்றிய நாற்றுபயிர்கள் என்பதால் புதிய சூழ்நிலைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கருகிப்போக ஆரம்பித்தன.
அன்று இரவு சோணாச்சலம் அந்த இளைஞனை காண போனார். அவன் தலையை பிடித்தவாறு உட்கார்ந்திருந்தான். தம்பி.. வருத்தப்படாதே, இந்த பூமி நம்மை கைவிடாது.
ஆனால் என்னை கைவிட்டு விட்டது, நாளை விசாரனைக்கு வர சொல்லியிருக்கிறார்கள். அங்கு நான் சொல்வது ஏற்கப்படுமா என்று தெரியவில்லை, அதற்கு முன் இதோ துப்பாக்கியை எடுத்து தன் நெற்றிப்பொட்டில் வைத்தவன் “டிரிக்கரை” அழுத்த முயற்சித்தான்.
பாய்ந்து சென்று அவன் கையை கெட்டியாக பிடித்து வேறு பக்கம் திருப்பினார் சோணாச்சலம். அது வேறு எங்கோ படீரென்ற சத்தத்துடன் குண்டை உமிழ்ந்தது.
இங்கு பாருங்கள், நாளை விசாரணை முன் நான் சொன்ன காரியங்களை சொல்லுங்கள். விதை நெல் இந்த மண்ணிலிருந்து விளைவித்தால் நல்லது என்று சொல்லுங்கள், எந்த பயிர் எங்கு விளையும் என்னும் ஆராய்ச்சியை செய்ய சொல்லுங்கள். கண்டிப்பாய் நல்லது நடக்கும். நீங்களும் விவசாயின் மகன், அது மட்டுமல்ல ஒரு விவசாயி கூட.
நாம் நம் மண்ணுடன் போராடுவோம், கூடவே இந்த மனிதர்களுடனும் வாழ்வதற்கு போராடுவோம்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (4-Oct-23, 11:50 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : vaithai nel
பார்வை : 195

மேலே