அப்பாவின் நினைவுகளில்
அப்பாவின் நினைவுகளில்
அனாமிகா தனது பழங்கால நினைவுகளில் இருந்து மீண்டும் சுய நினைவுக்கு வந்தது தனது
குழந்தையின் அழுகையால் தான் . அப்படி அவளை கொண்டு சென்றது அவள் அப்பாவின்
நினைவலைகள்.எவ்வளவு நடந்து விட்டது என நினைக்கையில் கண்ணீர் பெருகி வழிந்தது.
பிரகாஷ் இந்தியாவில் ஒரு மிகப் பிரசித்தி பெற்ற பெரிய கட்டிடங்கள் கட்டும் பணியில் உள்ள
அலுவலகத்தில் சூப்பர்வைசர் பதவியில் வேலை செய்து வந்தான்.கோவையில் தொடங்கிய வேலை
பல ஊர்களுக்கு அவனைக் கட்டிட வேலையைக் கவனிக்கச் செல்லவைத்தது. அவனது
இல்வாழ்க்கையின் இன்பத்தைக் குறிக்கும் வகையில் ஒரு பெண் மகவை அவன் இல்லாள் மைதிலி
கொடுத்தாள். குழந்தைக்கு அனாமிகா எனப் பெயர் சூட்டி அதன் வளர்ச்சிக்கு எல்லா வசதிகளும்
செய்து கொடுத்து தன் அன்பை அவள் மீது
அளவுகடந்த வகையில் செலுத்தினான். அப்பா பிரகாஷ் அம்மா மைதிலி. இருவரும் அவளிடத்தில்
உயிரையே வைத்திருந்தனர். அவளுக்கு வேண்டியவை யாவும் கேட்காமலே கிடைத்தது.குழந்தை
பருவம் மிக மகிழ்ச்சியாக இருந்தது.அப்பாவிற்கு இல்லை என்ற வார்த்தை அவளிடத்தில் வராது. எது
கேட்டாலும் கிடைக்கும். இன்னொரு குழந்தை பிறந்தால் அதற்கு தங்கள் அன்பையும்
கவனிப்பையும் தரவேண்டும் என்ற காரணத்தாலும், அந்தக்குறை அனாமிகாவை பாதிக்கக் கூடாது
என்ற நோக்கத்தோடும் அவர்கள் இரண்டாவது குழந்தைக்கு முயற்சி எடுக்கவில்லை. தங்களது முழு
கவனிப்பையும் அன்பையும் அனாமிகாவிற்கே கொடுத்து அவளை அணைத்து போற்றிப் போற்றி
வளர்த்தனர். அவன் மனைவி மைதிலி சில நேரங்களில் அவனிடம் நீங்கள் அவளுக்கு ரொம்ப
செல்லம் கொடுக்காதீர்கள் என்று சொல்லும் அளவிற்கு அவன் நடத்தை இருந்தது. குழந்தைக்கு இது
நல்லதல்ல என்பது அவள் வாதம். அவளைப்பற்றி கவலை படாதே நம் குழந்தை நன்றாக வளர்ந்து
நமக்குப் பெருமை தருவாள் எனக் கூறி வேலைக்குச் செல்வான்.
அனாமிகா பள்ளியில் சேரும் நாளும் வந்தது. அன்று இருவரும் அவளை பள்ளியில் விட்டு வரும்
பொழுது அவனது கண்கள் கலங்கி இருப்பதைக் கண்டு மைதிலி என்ன வந்தது உங்களுக்கு பள்ளியில்
தானே விட்டு வந்தோம் இதோ மாலையில் வீட்டிற்கு வந்துவிடுவாள் எனக் கூறி அவனை
தேற்றியவாறு பேருந்தில் ஏறினாள்.அவன் தன்வேலைக்கு சென்றான்.நாட்கள் உருண்டோடின
அனாமிகா பள்ளியில் படித்து நாலாம் வகுப்பிற்கு வந்துவிட்டாள். சிறிது பணம் சேர்த்து மைதிலிக்கு
ஒரு இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்து அதில் அவளை பள்ளிக்கு கூட்டிச் செல்ல வைத்தான்.
தனது அலுவலகம் நல்ல லாபத்தை அடைந்ததால் அவனை காரில் அழைத்துச் செல்ல ஆரம்பித்தது
.வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றது.அனாமிகா அப்பாவிடம் மிக நெருக்கமாக இருந்து
வேண்டியவற்றை எல்லாம் பெற்று தனது நாட்களை மகிழ்வோடு கழித்தாள்.
எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில் பிரகாஷின் தம்பி கோவைக்கு வந்து ஒரு நல்ல
வேலையில் சேர்த்தான்.அவன் ப்ரகாஷுடன் தங்கி வேலைக்கு சென்று கொண்டிருந்தான்,
எப்பொழுதும் மிகவும் கலகலப்பாக சிரிப்பும் கிண்டலுமாக வீடு களை கட்டியது. அப்பா வருவதற்கு
முன் வருவான் பல நேரங்களில் அனாமியாவிற்கு பாடம் சொல்லி தருவான். மைதிலிக்கும்
,அனாமிகாவிற்கும் சித்தப்பாவை மிகவும் பிடித்திருந்தது.கோவையில் வேலைக்கு சேர்ந்த ஒரு
வருடத்தில் அவன் ஒரு பெண்ணைப் பார்த்து அவளை பிடித்திருந்ததால் அண்ணாவிடமும்
மன்னியிடமும் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறிட அவர்களும் அவளுடைய
வீட்டிற்கு சென்று பேசி திருமணத்தை முடிவு செய்தனர்.வெகு எளிதாக அவர்கள் திருமணம்
நடந்தேறியது.பிரகாஷ் மைதிலி இருவரும் அவனையும் வந்த பெண்ணையும் ஒரு சிறிய தனி வீட்டில்
தங்க செய்து குடும்பம் நடத்த வைத்தனர் .பிரகாஷ் அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்து
அவர்கள் அந்த வீட்டில் வாழ வசதிகள் செய்தான்.அனாமிகா இப்பொழுது பெரியவளாகி உயர்நிலை
பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தாள்.இப்பள்ளி வீட்டில் இருந்து சில மைல் தள்ளி இருப்பதால் மைதிலி
காலையில் கொண்டு விடுவதும் மாலையில் அவளை கூட்டி வருவதும் வழக்கமாகியது.
பிரகாஷ் வேலை நிமித்தம் வட இந்தியாவில் சில மாதங்கள் தங்க வேண்டிய சூழ்நிலை
வந்தது.அவன் அங்கு இருக்கும் பொழுது ஒரு நாள் தொலைபேசியில் வந்த செய்தி அவனை
உலுக்கியது. என்ன கேட்டோம் என்ன செய்ய போகிறோம் என்று குழம்பிய நிலை. மைதிலி
அனாமிகாவை கூப்பிடச் செல்லும் பொழுது ஒரு பேருந்து அவளது இரு சக்கர வாகனத்தில் மோதி
அவள் கீழே விழுந்து அவள் மேல் பின்னால் வந்த வண்டி இடித்து ஏறிட அங்கு உள்ளவர்கள் அவளை
ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துள்ளார்கள் அவள் நிலைமை மிக சீரியஸ் என்ற செய்தி தான்
அது.அனாமிகாவிற்கு இந்த செய்தி தெரிந்தவுடன் அவளை அவள் ஆசிரியை ஆஸ்பத்திரிக்கு
அழைத்து சென்றாள்.அனாமிகா அவசர சிகிச்சை பிரிவில் அம்மா இருப்பது தெரிவிக்க
பட்டது.கண்ணாடி வழியே அவளை கண்டு கண்ணீர் வடித்தவர் அவள் இரவை
கழித்தாள்.சித்தப்பாவிற்கும் அப்பாவிற்கும் செய்தி சென்றதை அறிந்தாள்.சித்தப்பாவை எதிர் பார்த்து
காத்து கொண்டிருந்தாள். பிரகாஷ் உடனே தனது அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசி அடுத்த
நாள் கோவைக்கு வந்து சேர்த்தான். வந்தவுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று மைதிலியை பற்றி விசாரிக்க
அவர்கள் அவள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் கண்ணாடி வழிதான் பார்க்கமுடியும் எனக்
கூறினார்கள். அங்கு சென்றபொழுது அனாமிகா அப்பாவிடம் ஓடி வந்து அம்மாவின் நிலையைப்
பற்றி கூறி கண்ணீர் விட அவனும் உடைத்து போனான்.இருவரையும் செவிலி அங்கு அழக் கூடாது
சிறிது நேரம் வெளியே சென்று வரும் படி கூறினாள்.இருவரும் வெளியே சென்றனர் பின்னர் வந்து
கண்ணாடி வழியே மைதிலியைப் பார்த்தனர்.ஒரு அசைவும் இல்லாமல் அவள் படுத்திருந்தாள்.
பிரகாஷ் அவளை காணக் காண வருத்தம் அதிகரிப்பதை உணர்ந்தான். அவள் எப்பொழுது அவன்
வெளியூருக்கு சென்று வந்தவுடன் அவள் தன்னைக் கவனிப்பதையும் மகளிடம் அதிக செல்லம்
கொடுத்து பல பொருள்களை வாங்கி வந்திடும் பொழுது கண்டிப்பதையும் எண்ணி சோகத்தில்
ஆழ்ந்தான். அவள் நடமாடும் நேரத்தில் அந்த செய்கைக்கு முக்கியம் கொடுக்காமல் இப்பொழுது
அவள் செயலற்று கிடைக்கும் வேளையில் நினைத்து வருந்துவது ஏன் எனத் தன்னையே கேட்டுக்
கொண்டான். நான்கு நாட்கள் சென்றது மருத்துவர் அவர்களிடம் வந்து மைதிலி பிழைக்க வாய்ப்பு
மிகக் குறைவு அப்படியே பிழைத்தாலும் அவளால் எதையும் அறிந்து கொள்ள முடியாது ஒரு
நடமாடும் பொம்மையாகத் தான் இருப்பாள் அவளது நினைவுகள் பாதிக்கப்பட்டதால் அவளால்
அவர்களை கூட அறிவது கடினம் அவ்வாறு அவளை வைத்து கொண்டு வருத்தப்படுவதை விட
அவளது சில உறுப்புகளைத் தானம் செய்து அவளை நிரந்தரமாக தூங்க வைப்பதே சிறந்தது எனக்
கூற தாங்கமுடியாத வேதனையுடன் மருத்துவர் காட்டிய பேப்பரில் கையெழுதிட்டான் . எல்லாம்
முடிந்தது மைதிலியின் உடல் நெருப்பில் வெந்து சாம்பலும் ஆகியது. இந்த இழப்பின் தாக்கம்
இருவரையும் உலுக்கியதோடு அல்லாமல் வீட்டில் இருக்கும் வேளையிலும் அவ்வப்பொழுது வந்து
நெஞ்சில் கனமாக நின்று கண்ணில் நீரை வரவழைத்தது. பிரகாஷ் இரண்டு வாரங்களுக்குப் பிறகு
வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். அனாமிகாவும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தாள். பிரகாஷின்
அலுவலகத்தில் அவர்களுக்கு வெளிநாட்டில் ஒரு கட்டிட வேலை செய்ய காண்ட்ராக்ட்
கிடைத்தது.அதற்காக பலரை அங்கே அனுப்பி ஒரு மூன்று வருடங்கள் அங்கே தங்க வைக்க வேண்டும்
என்ற ஒரு நிபந்தனையும் இருந்தது. அவன் அலுவலகம் பிரகாஷ் மற்றும் சிலரையும் வெளிநாட்டுக்கு
செல்ல தயாராக இருக்கச் சொல்லியது. அப்பா வேலையின் காரணமாக வெளிநாடு செல்வது
.அனாமிகாவிற்கு மகிழ்வை கொடுத்தாலும் அவரை பிரிந்து இருக்க வேண்டுமே என்ற துக்கத்தையும்
கொடுத்தது. தன் அன்பு மகள் அனாமிகாவை தன் தம்பி வீட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க
எண்ணினான் பிரகாஷ் .
தம்பியிடம் இதை பற்றி கேட்க தம்பியும் அவன் மனைவியும் சரி எனக் கூறினார்கள்.அனாமிகாவும்
அவர்கள் வீட்டில் இருப்பதற்கு ஒப்புக்கொண்டாள்.
அப்பா வெளிநாட்டிற்கு கிளம்பினார் சித்தப்பா சித்தியுடன் அனாமிகா வந்து சிரித்த முகத்துடன் வழி
அனுப்பினாள்.
நாட்கள் செல்ல செல்ல சித்தியின் உண்மை முகம் தெரிந்தது.எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும்
சித்தப்பா சித்தியின் செய்கைகளைக் கண்டு மிரண்டார்.அவளை சிறிது மெல்ல பேசுமாறு அவர் கூற
எனக்கு என் வீட்டில்
பேசக் கூட தடையா என அவரிடம் பதில் உரைத்து எல்லாம் என் தலையில் எழுத்து என்ன
வேளையில் நான் பிறந்தேனோ என சலித்து கொண்டாள்.
அன்று பள்ளியில் இருந்து சித்தப்பா அனாமிகாவை வேலை முடிந்ததும் அழைத்து கொண்டு வந்தார்
அவர்கள் வீட்டிற்குள் நுழையும் வேளையில் ,கதிரவன் மெல்ல சாய்ந்து வானம் சிகப்பாகி
கொண்டிருந்தது. நான் தான் எல்லோருக்கும் வடிச்சுக்கொட்டணும்,எல்லாம் நான் வாங்கி வந்த
வரம்ன்னு சித்தி முனுமுனுக்க சித்தப்பா அனாமிகாவை கைச்செய்கையால் சமாதானப் படுத்தினார்.
நாட்கள் ஓடஓட சித்தியின் வசைபாடுகள் அதிகமாகிக் கொண்டே போக சித்தப்பா செய்வதறியாது
அனாமிகாவை விடுதியில் கொண்டு சேர்த்தார் . அனாமிகா விடுதியில் இருந்து ஒரு சிறிய அறையில்
படிப்பதை சித்தப்பாவால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவளுடைய அப்பா அவருக்கு உதவி
செய்ததை நினைத்து பார்த்து அதற்கு இந்த சிறிய உதவியைக் கூட செய்ய முடியவில்லையே என்ற
குற்றவுணர்வு அவரை வாட்டியது.சித்தியின் வசவுகளில் இருந்து அனாமிகா விடுபட்டிருப்பது ஒரு
புறம் சிறு மகிழ்ச்சியைக் கொடுத்தது. வாரம் ஒரு முறை வீட்டிலிருந்து சாப்பாடு வரும்.ஆனால் சில
நாட்கள் அனாமிகா இன்னைக்கு சித்தி கிட்ட கேட்டேன்டா அவ செஞ்சு தர மாட்டேன்னு
சொல்லிட்டா கடையில் இருந்து அவர் வாங்கி வந்த பார்சலை அவளிடம் கொடுப்பார் அதைப்
பிரிக்கும்போது சாப்பிட மனம் வராமல் அவள் தன் நிலை இவ்வாறு ஆகிவிட்டதே என நினைத்து
உள்ளுக்குள்ளே புழுங்கி அம்மா அப்பாவுடன் வாழ்ந்த நாட்களை எண்ணி அழுதாள்.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொலைபேசி அருகிலேயே அமர்ந்திருப்பாள்.அப்பாவின்
அழைப்பு வந்ததும் அதை எடுத்துஅவர்கள் அவளை கூப்பிட ஓடிப் போய் பேசியவாறே விம்மி
அழுவாள்."எப்பப்பா வருவ நீ"உன்னை பாக்கனும்னு சொல்லும்போதே கண்ணீர் அவளது
கண்களில்.பெருக்கெடுத்து ஓடும் .
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது சென்ற அப்பா அவள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது
வருவதாகச் சொல்லி சென்றது இன்னமும் காதில் ஒளித்து கொண்டிருந்தது.வருடங்கள்
உருண்டோடியது ஒவ்வொரு முறை தொலை பேசியில் பேசும் பொழுதும் இதே கேள்விதான் எப்ப
அப்பா வரப்போரே என்று தான் பேச்சு முடியும். அனாமிகா அப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பில்
படித்து கொண்டிருந்தாள். எங்கப்பா ஊர்ல இருந்து இந்த மாதம் வந்துவிடுவார் என்று ஆனந்த
களிப்பில் படித்து தனது பரீட்ஷைகளை நன்றாக எழுதினாள் .பள்ளி மைதானத்தில் விளையாடிக்
களைப்பு நீங்கியவுடன் தனது நண்பர்களிடம் தான் நாளை முதல் விடுதியில் இருக்க முடியாது என்
அப்பா வந்தவுடன் எங்கள் வீட்டிற்கு சென்று அங்கிருந்து வருவேன்.
அப்பாவும் நானும் அந்த வீட்டில் பல மாற்றங்கள் செய்து புதிதாக்கியபின் உங்களை அழைத்து
போகிறேன் எனக் கூறி மகிழ்ச்சியோடு படுக்க சென்றாள்.
மறுநாள் காலை ஒன்பது மணிக்கு சித்தப்பா விடுதிக்கு வந்தார் அனாமிகாவை அழைக்க வந்த
பணியாளிடம் தான் வீட்டிற்கு செல்வதை கூறி தனது பெட்டியுடன் அனாமிகா விடுதியை விட்டு
இறங்கினாள். எல்லோரும் அவளை சிரித்த முகத்தோடு வழி அனுப்பினார்கள்.
.வீட்டில் வந்து இறங்கிய அனாமிகா வெளியில் கூட்டமாக இருப்பதைக் கண்டு அப்பா
வந்துட்டாருஎன கூவிக் கொண்டு ஓடிபோய் பார்த்தாள்.அப்பாவை அங்கு படுக்க
வைத்திருந்தார்கள்.அப்பா இருந்தார். ஆனால் அவள் கண்ட காட்சி அவளை நிலை குலைய
வைத்தது.சித்தப்பா அவளை கீழே விழாமல் தாங்கிக்கொண்டார். அங்கு உள்ள அப்பாவுடன் வேலை
செய்த ஒருவர் .அவளிடம் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு கிளம்பியவர் விமானம் கேன்சல் என்று
ரூமுக்கு போகும் போது சாலையில் நடந்த ஒரு விபத்தில் அவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு
செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார் எனச் சொல்லி கண்ணீர் விட அனாமிகா கதறி கதறி அழுதாள்.
அப்பா எழுந்திருப்பா உன்னால் எப்படி என்னைத் தனியே விட்டு விட்டுப் போக முடிந்தது எனக்
கூறியவாறு தேம்பித் தேம்பி அழது கொண்டே , நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது பரோட்டா
கேட்டேன். நீ இப்ப இல்லைடா இன்னொரு நாள் வாங்கித் தறேன்னு சொன்னியேப்பா. நான்
பிடிவாதமா கேட்டதும் என்ன அடிச்சியேப்பா. அடிச்சுட்டேன்னு மூணு மாசம் பேசாம
இருந்தேனேப்பா.என்கிட்ட பேசு தாயின்னு நீ கெஞ்சினியேப்பா.வீம்புக்காரியாய் நான் தான் பேசாம
இருந்தேன் அந்த மூணு மாசம்.பேசாததையெல்லாம் சேர்த்து இப்போ பேச வந்துருக்கேன்
எந்திரிப்பான்னு கதறி அழுதவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் இன்னொரு அப்பாவாக
சித்தப்பா.!!
அம்மா! அம்மா! என்று தன் பிள்ளைகளின் குரல் கேட்க மீளா நினைவுகளில் இருந்து மீண்டவளாய்
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு புன்சிரிப்புடன் உள்ளே சென்றாள் தன்
பிள்ளைகளுக்காக..காலங்கள் ஓடினாலும் அப்பா கூட இருந்தும் மூணு மாசம் பேசாம பிடிவாதமா
இருந்தோமே என்ற ஒரு குற்றஉணர்ச்சி இன்றும் அவளை வாட்டி வதைக்கிறது.
இருக்கும் போது புரியாத அன்பு இல்லாத போது புரிந்து தேடப்படுகிறது.பணம் பெரிதென்று
நினைத்தால் வாழ்வின் பல சந்தோஷங்கள் இழக்கப்படுகிறது.இதுவே வாழ்வின் யதார்த்த உண்மை
என்று மனதுக்குள் நினைத்தவளாய் அடுப்பங்கறைக்குள் நுழைந்தாள் தன் குழந்தைக்கு உணவளிக்க.