ஏணி

ஏணி
நாள் : 10 / 12 / 2023
வாழ்க்கை ஏணியின் படிகளை நாம்
வாழ்ந்து பார்க்கும் போது எண்ணுவதில்லை.
வாழ்க்கை முடிந்து இறப்பின் மடியில்
வழக்காய் எண்ணுவதில் லாபமும் இல்லை
வாழும் போதே எண்ணிப் பார்ப்போமே
முதல் படியாய்...
உரு கொடுத்த நம் பெற்றோர்
முதல் எழுத்தை கைபிடித்து எழுதி
தலை எழுத்தை மாற்றிய தெய்வப்பிறவிகள்
உதிரத்தோடு உறவையும் அனுபவ அறிவை
உதிர்த்தும் நம்வாழ்வை உயர்த்திய ஆணிவேர்கள்.
இரண்டாம் படியாய்
ஆனா ஆவன்னா சொல்லியும்
மொழி..சரித்திரத்தோடு பூகோளம்
விளையாட்டோடு விஞ்ஞானம்
கலைகளோடு கணிதமும்
சொல்லி..சொல்லி..வாழ்க்கை
கணக்கின் சூத்திரத்தை கற்றுக் கொடுத்த
ஆசிரியர்கள் தன்னலமற்ற தியாகிகள்
மூன்றாம் நிலையில்
நம் உடன்பிறந்தவர்கள் மற்றும்
சொந்தபந்தங்கள் ...
உறவு பரமபதத்தில்
சில சமயம் ஏற்றியும்
பல சமயம் இறக்கியும்
வாழ்க்கை விளையாட்டில் நம்மை
பகடை காய்களாய் உருட்டிய உத்தமர்கள்
அடுத்து ...
நமக்காய்..நம் வெற்றிக்காய் தம் வாழ்வை
அடகுவைக்கும் உயிர் காக்கும் நட்பு.
மான அவமானங்களில் தானாய்
பிரதிபலன் ஒன்றும் எதிர்பார்க்காமல்
உறுதியாய் உடன்நிற்கும் நட்பு
இறுதிவரை கைகோர்க்கும் நட்பு
கர்ணனாய் கரைசேர்க்கும் நட்பு
கைதட்டி உற்சாகத்துக்கு உதவும்
முதுகில் தட்டி முன்னேற தள்ளும்
நேர்மறை பதிவுகள்
கணைதொடுத்து குறைகூறி
ஊக்கத்திற்கு உரமிடும்
எதிர்மறை பட்டயங்கள்
அடுத்த படியில்
மகுடம் வைத்ததுபோல்
நம்மோடு நம் நரம்போடு
உந்தித்தள்ளும் நம்பிக்கை
எந்நாளும் தளராத
விழுந்தாலும் துள்ளி எழும்
தன்னம்பிக்கையெனும் உரம்கொண்டு
எவரெஸ்ட் சிகரமாயினும்
நிலையாய் உறுதியாய்
அடிவைத்து முன்னேறி
வெற்றி கொடிநாட்ட உதவிய
இவ் வேணியை மறக்க முடியுமா?
ஏறி வந்த ஏணியை
எட்டி உதைக்கலாமா?
காரியம் முடிந்தவுடன்
கை விடலாமா?
ஒவ்வொரு படியிலும் நாம் வாங்கிய
ஒவ்வொரு அடியிலும் அது வழங்கிய
ஒவ்வொரு அனுபவத்தையும்
வாழும்போதே எண்ணிப்பார்ப்போம்
மறக்காமல் மகிழ்ந்து போற்றுவோம்.

( சிங்கப்பூர் பொழில் பண்பலையில்
ஒலிபரப்பான கவிதை)

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (11-Dec-23, 7:53 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : yeni
பார்வை : 33

மேலே