கேட்டது கிடைத்தது

""" கேட்டது கிடைத்தது!! """
- - - சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.

இல்லுங்கி எங்கிடி புதியதாகக் காதல் வலையில் சிக்கிக் காதல் கடலில் விழுந்து தட்டுத் தடுமாறி
நீந்திக்கொண்டிருந்த காலம் அது. அவனுக்குத் துறைமுகத்தில் சரக்குக் குடோனில் ஓயாத வேலை. ஓய்வு, விடுமுறை, பொழுதுபோக்கு என்பதெல்லாம் அவனுக்கு என்னவென்றே தெரியாது. தெரிந்து கொள்ள ஆடைப்பட்டால் அவனிடத்திற்கு வந்து தொற்றிக் கொள்ள ஆறாயிரம் பேர் விண்ணப்பம் போட்டுக் காத்திருக்கிறார்கள்.
எப்போதாவது புயல் மழைச் சமயத்தில் கப்பல் எதுவும் இறக்குமதிக்கு வராத போது, கொஞ்சம் போது அவனது முதலாளி, "புல்டாக்" பொல்லக்கினான் மனம்வைத்து "இல்லூ! இப்படி ஏனடா இங்கேயே அடைந்து கிடக்கிறாய்? எங்காவது நகரப் பக்கம் படத்திற்குப் போவதுதானே?" என்று தாராளப் பிரபுவாகி அருள்பாலித்தால் ஒரு மூன்று மணிநேரம் கிடைக்கும். அன்று அவருடைய ஆருயிர்க்காதலி இஜுடுபா டம்பூட்டி வருவதாக இருக்கும்!
பெட்டியில் இருந்து எடுத்த புத்தப் புது மொறு மொரறு ருங்க்டோக்களை உண்மையாகவே எண்ணாமல் கொடுப்பார்! அப்படி ஒருநாள் கிடைத்தது. அவசரம் அவசரமாக அலங்கரித்துக் கொண்டு வெளிவந்தான். ஒருவேளை டம்பூட்டி வராமல் போய்விட்டாளானால் முதலாளி அவன் இருக்குமிடம் தேடிவந்து பிடித்து, ஒருபாட்டம் போஸ்ட்வானா தாண்டவம் ஆடிவிடுவார்! அதற்குள் துறைமுகத்தைவிட்டு ஒரு பத்துக் கிலோமீட்டர்களாவது அப்பால் போய்விடுவது உத்தமம்.

அவனது புத்தம் புதுக் காதலி இடீலி பெடுவாயோவை ஃபோனில் கெஞ்சி, கொஞ்சி, புலம்பி, காதல் பாட்டெல்லாம் பாடிக்காட்டி ஒருவழியாக அப்போது வாலண்டினா தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த "குலேபகாவலி" - - - - சிரிக்கக் கூடாது! அந்த ஆப்பிரிக்கக் குக்கிராம ஒற்றை மாடி டாக்கீஸில் அதுமாதிரித்தான் நூறு ருங்க்ட்டோவிற்கு மூன்று என்று கிடைக்கும் அரதல் பழைய படம் வரும்! - சுந்தரத் தெலுங்கில் அந்தரத் தமிழ் பேஷூம் பானுமதிதானே? - அவனுக்குப் படமா முக்கியம் அப்போது? அவன் மனத்தில் "குலேபகாவலி" எல்லாம் ஒன்றும் ஓடவில்லை, பெடுவாயோதான் அவனது மனத்திரையும் மனமேடையும் கீழே அழுந்தும் படியாகப் ஓடி ஆடிப் பாடிக் கொண்டிருந்தாள்! - கொஞ்சம் தாட்டி பூட்டி பெடுவாயோ! அப்போதிருந்த ஜோரில், இல்லு, தியேட்டரில் படமே காட்டாமல் வெற்றுத் திரையைக் காட்டிவிட்டாலும் கவனிக்கும் நிலையில் இல்லை!! - - - - படத்திற்கு வரச் சம்மதிக்க
வைத்தான். எத்தனை கேள்விகள்! எத்தனை சாக்காடுகள்! பெடுவாயோ ஃபோனிலேயே தும்மல் இருமல், ஞொண ஞொணக் குரல் எல்லாம் போட்டுக் காட்டி நழுவப் பார்த்தாள். இல்லூ உண்மையாகவே மண்டியிட்டபடிதான் ஃபோனில் கெஞ்சிக் கொண்டிருந்தான்! ஒரு மணி நேரம் அழுது தொழுது, ஆகாத்தியம் செய்த பிறகு, "ச்சரி! ப்போடா! உனக்காக வருகிறேன்! வாலைச் சுருட்டிக் கொண்டு ஆடாமல் அசையாமல் மூச்சுக் கூட விடாமல் படம் மட்டும் தான் பார்க்கவேண்டும்! என்ன சரியா? ஏழு மணிக்கு வருகிறேன் இல்லூ - ஊ - ஊ!" என்று அவன் காதோரமாகக் கொஞ்சி விட்டுச் சம்மதித்தாள் - இல்லை; இல்லை, அருள்வாக்குத் தந்தாள் இடீலி!

அலுலலக எடுபிடிப் பையன் டிம்மின்னியை அழைத்து, ஒரு கட்டுப் பீடியுடன் எட்டு ருங்க்ட்டோ மொய் வைத்துக் கொடுத்து, "டேய், வாலண்டினாவில் போய் இன்று இரவுக் காட்சிக்கு இரண்டு டிக்கெட் முன்பதிவு செய்து வாங்கி வா! சீட் எப்படி வேண்டும் தெரியுமில்லையா? இடீலி வருகிறாள். யாருடைய தொந்தரவும் இல்லாமல் நாங்கள் படம் பார்க்கவேண்டும் தெரியுமா? அதனால் மேல் மாடியில் கடைசி வரிசையில் மூலையில் இரண்டு டிக்கெட் பதிவு செய்து வா மறந்து தொலைத்துக் கண்ட இடத்தில் சீட் பிடித்து விடாதே!!" என்று விலாவாரியாக விளக்கி வள்ளிசாகப் பணத்தைக் கொடுத்தான். இடீலிக்காக ஒருவாரகாலப் படி சரியாகப் போய்விட்டது. தின்பதற்கும் குடிப்பதற்கும் "வேறு எதுவும்" வேண்டியிருக்கவில்லை.

மாலை ஆறரை மணிக்கெல்லாம் இல்லுவிற்குத் தோட்களில் வெள்ளை இறக்கைகள் முளைத்துக் கையில் யாழுடன் தலையில் புறா இறகுக் கிரீடத்துடன் ஒரு கந்தர்வனாக மிதக்கத் தொடங்கி விட்டான்! மிதந்தபடியே முதலாளியின் முன் போய், "பாஸ், குட் இடீலிங் பாஸ்! பெடுவாயோவிற்குப் போய் வாலண்டினாவைப் பார்த்து குலேபகாவலிக்கு அடுத்த பிறவியில் வருகிறேன்!" என்று எதையோ சம்மந்தம் இல்லாமல் உளறிச் சொல்லி, யாழில் இசைத்து விட்டு மரக்கட்டை உந்து வண்டியில் ஏறி ஒரே உந்து! அவ்வளவுதான்! வண்டி அப்படியே ஒரு புஷ்பக விமானமாகி, அடுத்த நொடியில் இடீலி பெடுவாயோவின் வீட்டிம் முன் இறகு போல இறங்கியது! படத்தில் வரும் எம் ஜி யார் மாதிரி ஒரே
இழுப்பில் பக்கத்தில் நின்ற இடீலியைச் சுழற்றி இழுத்து வண்டியில் போட்டுக் கொண்டு - - - - ஆப்பிரிக்க உந்து வண்டி தெரியுமில்லையா? இருவரும் இரண்டு பக்கமும் ஒட்டிக் கொண்டு மாற்றி மாற்றி உந்தியபடியே போக வேண்டும்! - அடுத்த ஒன்றேகால் நொடியில் வாலண்டினா!!

தலையைச் சுற்றி தங்க ஜிகினாத் துகள்களும் தங்கப் பட்டு ரிப்பன்களும் தங்க நட்சத்திரப் பொடிகளும் தங்கப் பஞ்சுப் பொதி மேகங்களும் இதயவடிவத் தங்க பலூன்களும் வண்ண வண்ணத் தங்கச் சோப்புக் குமிழ்களும் சிட்டும் குருவிகளும் கழுக் மொழுக் தேவதைக் குழந்தைகளும் மிதந்தபடியே அவர்களின் தலையைச் வர இல்லூ இடீலியின் இடைபற்றி, கைபற்றி மெதுவாகத் தியேட்டரின் படிகளின் ஏறினான்!
ஒரே மாதிரி உடையும் - உடையென்ன, வழக்கம் போலச் சினிமாப் பாணியில் மூன்று முக்கோண உடைகள்தானே? - தலையலங்காரங்களும் மிகைப்படுத்தப்பட்ட எல்லாமுமாக ஒரு பத்துக் பதினைந்தௌ "லல்லல்லா இளங்குமரிகள் (யாருக்குத் தெரியும்?) அவர்களின் இரண்டுபக்கத்திலும் வரிசை பிடித்து நின்று பூத்தூவிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஜிகினா மயம்!!

போகிற போக்கில் டிக்கெட்காரனுக்கு மூன்று ருங்க்ட்டோவையும் சேர்த்துக் கொடுத்தான். இருவரும் மிதந்தபடியே உள்ளே போய், மிதந்தபடியே மாடியிலும் ஏறி, மிதந்தபடியே தங்களின் சீட்டுக்களைப்

பார்த்தார்கள்

பார்த்தார்கள்.

பார்த்தார்கள்.

மீண்டும் மீண்டும் பார்த்தார்கள்.

இந்தமூலையில் ஒரு சீட். அவர்களைப் போலவே புத்தம் புதிய காதல் ஜோடிகள் ஒட்டிப் புதைந்து கிடந்த நாற்பத்தாறு சீட்கள் தாண்டி எதிர் மூலையில் இன்னொரு சீட்!!

- - - சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.
18 டிசம்பர 2023 - திங்கட்கிழமை.

எழுதியவர் : சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா (20-Dec-23, 2:52 pm)
பார்வை : 99

மேலே