பூரணியின் மனம்

பூரணியின் மனம்
ராஜேசை பார்க்கும்போதெல்லாம் பூரணிக்குள் ஒரு பரவசம், எப்பொழுதும் சிரித்தபடியே இருப்பவன், ஊருக்கு வந்து பத்திருபது நாள் தான் இருக்கும். வந்த உடன் இருந்த ஓலை குடிசையை மாற்றி காரை வீடு கட்ட ஆரம்பித்திருந்தான். ஆளும் பார்க்க கொஞ்சம் சிகப்பாய் இருக்கிறான், இது போதாதா பூரணிக்கு
பூரணி தனக்கு பேசி வைத்திருக்கிற மாப்பிள்ளையை பற்றி கசப்பான எண்ணத்தில் இருந்தாள். காரணம் அவளுக்கு திருமணம் முடிக்க பேசி வைத்திருக்கிற மாப்பிள்ளை செங்காளியப்பன், ஒரு சிடு மூஞ்சி, பேசும்போதே எரிந்து விழுபவன், யாரிடமாவது சண்டையிட்டு கொண்டிருப்பவன்.
இவனைப்போய் அம்மாவும் அப்பாவும் அவளுக்கு இணை வைத்து பேசியது இவளுக்கு வயிற்றில் அமிலத்தை ஊற்றியது போலிருந்தது. போதாக்குறைக்கு தூரத்து உறவுக்காரனான ராஜேஷ் இவர்கள் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டு இருந்தான். இவளிடமாகட்டும், அல்லது இவளின் அப்பா, அம்மா எல்லோரிடமும் எவ்வளவு அன்பாக பேசுகிறான். அவனை பார்த்த பின்னால் செங்காளியப்பனை பற்றி பேச்சு எடுத்தாளே பொங்கி பொறுமுகிறாள்.
ஏறக்குறைய செங்காளியப்பனுக்கும், ராஜேசுக்கும் ஒரே வயசுதான் இருக்கும். செங்காளியப்பன் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தான் பூரணி நமக்குத்தான் என்று. ஆனால் திடீரென ராஜேஷ் மும்பையிலிருந்து வந்து ஊருக்குள் குதிப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.
உண்மையான பெயர் என்னவோ ராசராசன் தான், மும்பைக்கு பிழைக்க போன பின்னால் தன்னுடைய பெயரை “ராஜேஷ்” என சுருக்கி வைத்து கொண்டதால் அந்த பெயரே கூட பூரணிக்கு இனிக்க ஆரம்பித்து விட்டது. போதாகுறைக்கு இவளின் கண் பார்வையில் படும்படி வேறு அவர்கள் வீட்டுக்கு எல்லா உதவிகளையும் எடுத்து கட்டி செய்து கொண்டிருக்கிறான்.
செங்காளியப்பன் சிடுமூஞ்சி மட்டுமல்ல, இந்த மாதிரி வேலைகளை செய்ய சொன்னால் அவ்வளவுதான். கோபம் அப்படி வரும். ஏன் உங்களுக்கு கை கால் இருக்குல்ல, என்று கேட்பான். அவனுக்கு அவன் தோட்டம், ஆடு மாடு கோழி இதை பண்ணையம் பார்ப்பது மட்டும்தான்
பூரணி முரண்டு பிடிக்க ஆரம்பித்து விட்டாள், கட்டுனா ராஜேஷைத்தான் கட்டுவேன், எனக்கு செங்காளியப்பன் வேணாம். பெற்றோர்களுக்கும் மனதுக்குள் செங்காளியப்பனை விட இவன் பரவாயில்லை என்னும் எண்ணம் வந்திருந்தது. ஆனால் செங்காளியப்பன் கோபக்காரனாயிற்றே, பேசி முடித்த பெண்ணை தரமாட்டேன் என்று சொன்னால் அறுவாளை தூக்குவான். ஊரில் அவனை கண்டால் கொஞ்சம் பேருக்கு கிலிதான்.
செங்காளியப்பனுக்கும் இவர்கள் ராஜேஷ் பக்கம் சாய்ந்து கொண்டிருப்பது அரசல் புரசலாக தெரிந்தது, நேராக இவர்கள் வீட்டுக்கு வந்தவன், பூரணியின் பெற்றோர்களை பார்த்து மிரட்டினான்.”வாக்கு சுத்தம் வேணும்யா” ஏதாவது கோல்மால் பண்ணீங்க, அப்புறம் நடக்கறதே வேறே, மிரட்டி விட்டு சென்றான்.
பூரணிக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது, இவனென்னெ சொல்வது? என்னுடைய விருப்பம், யாரை வேண்டுமானாலும் கட்டிக்குவேன், ராஜேஷை பார்த்து நீ என்ன சொல்றே? எனக்கு உன்னைய கட்டிக்கறதுலதான் விருப்பம். முகத்திற்கு நேராகவே சொல்லி விட்டாள்.
மறு நாள் செங்காளியப்பன் நேரடியாகவே ராஜேசை மிரட்டினான், ஒழுங்கா உன்னோட ஊரு போய் சேரு, இல்லையின்னா….! அவனின் மிரட்டலுக்கு ராஜேஷ் அப்பொழுது ஒன்றும் சொல்லாமல் நகர்ந்து சென்று விட்டாலும், சமயம் பார்த்து கொண்டிருந்தான்.
இரண்டு நாட்கள் கழிந்திருக்கும், ஊருக்குள் போலீஸ் நடமாட்டம், செங்காளியப்பனிடம் விசாரணை செய்து கொண்டிருந்தார்கள். அவன் தோட்டத்தில் “கஞ்சா” பயிரிட்டு கொண்டிருந்ததாக தகவல் கிடைத்திருக்கிறதாம்.
செங்காளியப்பன் தோட்டத்திற்கு போலீசை கூட்டி கொண்டு போய் காட்டினான். பயிரிட்டதற்கான அடையாளம் கிடைக்காவிட்டாலும் கிணற்று மோட்டார் செட் போட்டிருந்த இடத்தில் கஞ்சா பொட்டலங்கள் நான்கைந்து கிடந்தன.
அது அங்கு எப்படி வந்தது? என்று அவனால் சரியாக சொல்ல முடியவில்லை, போலீசார் மேலும் விசாரணைக்கு டவுனில் இருக்கும் போலீஸ் ஸ்டேசனுக்கு இவனை அழைத்து சென்றார்கள்.
ராஜேஷ் மகிழ்ச்சியாய் பூரணியின் வீட்டுக்குள் நுழைந்தான். பூரணி பூரணி இனி நாம யாருக்கு பயப்பட வேண்டியதில்லை, செங்காளியப்பனை போலீஸ் பிடிச்சுகிட்டு போயிடுச்சு தெரியுமா?
போலீசா அவனை எதுக்கு புடிச்சுட்டு போகணும்? பூரணியுடன் அவளது பெற்றோர்களும் கேட்டார்கள்.
எல்லாம் “நம்ம ஐடியா” தான். என்னையவே மிரட்டுனா நான் சும்மா விட முடியுமா? நம்ம ஆளுங்க கிட்ட “சரக்கை” கொண்டு வர சொல்லி அவன் தோட்டத்து “கிணத்து செட்ல” போட்டுட்டேன். போலீசுகிட்ட நம்ம ஆளுங்களை வச்சு “இன்பார்ம்” பண்ணி அவங்களை வரவைச்சுட்டேன். மாட்டிகிட்டான், என்னமோ இந்த ஊருல இவன்தான் ரவுடின்னு நினைச்சு என்னை மிரட்டறான், மும்பை வந்து பார்க்க சொல்லு, நான் அங்க எவ்வளவு பெரிய ரவுடின்னு தெரியும் பெருமையாய் தன்னை பற்றி சொல்லி கொண்டிருந்தான்.
இவன் உளறிக்கொட்டிகொண்டிருந்த வார்த்தைகளை கேட்ட பூரணிக்கு அப்படி ஒரு கோபம் வந்து இறங்கியது. “அட சீ” நீ எல்லாம் ஒரு ஆளுன்னு” அவன் கோபக்காரன்தான், சிடு மூஞ்சிதான், ஆனா நல்ல மனுசன், ஒரு ஆளுக்கும் எந்த கெடுதியும் செஞ்சதில்லை. மரியாதையா இந்த இடத்தை விட்டு போயிடு கத்தினாள்.
பூரணிக்கு முதன் முதலாக செங்காளியப்பன் இனிக்க ஆரம்பித்தான்,
ஏன் திடீரென்று பூரணி தன்னை இப்படி திட்டி விரட்டுகிறாள் என்று புரியாமல் அங்கிருந்து சென்றான் ராஜேஷ்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Dec-23, 2:34 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 77

மேலே