பூமி நமது சாமி
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
*பூமி நமது சாமி*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
பிரபஞ்சக் கடலில்
பூமி ஒரு நீலமுத்து.....!
தாவரங்களை
உயிர்பிக்கும் மகாவித்து....!
ஜீவன்களை
பிரசவிக்கும்
கர்ப்பப்பை......!
வளிமண்டலத்தின்
சுவாசப்பை......!
நீர் மூன்று பங்கும்
மண் ஒரு பங்கும்
சேர்த்து பிசைந்து
காலக் குயவன் செய்த
மிகப்பெரிய பானை...!
இயற்கை அன்னை
இதில் தான்
செல்வங்களை எல்லாம்
சேர்த்து வைத்து
பாதுகாக்கிறாள்.....!
செத்தால் தான்
சொர்க்கத்துக்கு
போக முடியும் என்பது
உண்மைதான்.....
ஆம்......!!
எங்கோ செத்து
இந்த சொர்க்க பூமிக்கு
நாம் வந்திருக்கிறோம்....!
சொர்க்கமாக
இருந்த இந்த பூமி
மனிதனின்
வருகைக்குப் பிறகு
மெல்ல மெல்ல
நரகமாக மாறி வருகிறது..!
அதைத்தான்
நாம்
கௌரவமாக "நகரம் "என்று
சொல்லிக் கொள்கிறோம்....
"இரண்டு எழுத்துக்களை"
இடமாற்றிக்கொண்டு.....!
"அமுத மழை"
பொழிந்த பூமியில்....
இப்போது
"அமில மழை" மட்டுமே
பொழிகிறது...!
அன்னை மார்பில்
கசியும் "பால்" போல்
இருந்த தண்ணீர்
பாம்பு வாயில் கசியும்
"நஞ்சாகிவிட்டது....."
அன்று
உயிர்"வளி"யாக
இருந்தக் காற்று
இன்றும் இருக்கிறது
உயிர் "வலி"யாக....!!
மனிதா.....!
உன் அறிவு
பூமியை
அழகு படுத்துகிறேன் என்று
சொல்லி
அசிங்கப்படுத்தியதுதான்
மிச்சம்.....
மரங்கள் காடுகள்
பூமி அன்னையின்
"ஆடை" என்பதை அறிந்தும்....
தயங்காமல்
நீ அதை "அவிழ்க்க"
கை நீட்டுகிறாய்.....?
விளைநிலம்
பூமி அன்னையின்
"கர்ப்பப்பை" என்று
தெரிந்தும்......
கணம் கூட யோசிக்காமல்
அதில்
"கத்திர்க்கோலை"
வைக்கிறாய்.......?
ஆறுகள்
பூமி அன்னையின்
உதிரம் என்று உணர்ந்தும்...
உறுத்தல் இல்லாமல்
கழிவு நீரை
அதில் கலக்கச் செய்கிறாய்....
சுற்றுச்சூழல்
பூமி அன்னையின்
வாழிடம் என்று புரிந்தும்....
புரியாதவன் போல்.....
அதை
கழிப்பிடமாக்கிக்
கொண்டிருக்கிறாய்.....!
தானியங்கள்
காய்கறிகள்
பழங்கள் கிழங்குகள்
அன்னை கொடுக்கும்
பிரசாதம் என்பதை
கண்ணால் கண்டும்
அதில்
செயற்கை உரங்களையும்
வேதிப்பொருட்களையும்
கொட்டுகிறாய்....!.
பேராசைப் பித்தத்தில்
பணமென்னும் சுகத்திற்காக
பெற்றெடுத்த
"அன்னையிடமே
பலாத்காரம்" செய்கிறாய்....!!
அடப்பாவி.....!!
உன்னை விட
அருவெறுப்பான
ஈன ஜென்மம்
இவ்வுலகில் ஏதுமில்லை
த்தூ.......!!
போக்குவரத்துக்காக
மரங்களை வெட்டி
பாதை போடுவதாக
கூறுகிறாய்.....
அதுவல்ல உண்மை.....
மனித இனம்
கூடிய சீக்கிரம்
பூமியை விட்டுப்
போவதற்கு
போடப்படும் பாதையது....
அது நாட்டின்
வளர்ச்சிக்காக
விலை நிலங்கள் வழியாக
குழாய்கள் பதிப்பதாக
சொல்கிறாய் ....
அதுவல்ல உண்மை....
மனித இன
வீழ்ச்சிக்காக
அடிகால்
போடுகிறாய் என்பதே
உண்மை......!!
இந்தப் பூமி செய்த
மிகப்பெரிய தவறு
உன்னைப்
பெற்றெடுத்தது தான்....
அதற்கு தண்டனையாக
நாளை
இந்தப் பூமியே !
'சுடுகாடாக
மாறவேண்டி
இருக்குமோ '?என்று
நினைக்கும் போது தான்
மனம்
"ஒரு கோடி சுக்குகளாய்
உடைந்து போகிறது......!"
*கவிதை ரசிகன்*
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎