மரங்கள்  பேசினால்

"மரங்கள்  பேசினால்.."

மரங்கள் பேச மனிதன் தாங்கான்
அவமதிப்பு கொடுத்தவன் காதில் வாங்கான்
வீச்சரிவாளாய் பேச்சிருக்கும்
கூர்மைகுத்தி இதயம் கிழிக்கும்

நல்வாழ்வு தந்ததால் தன்வாழ்வு தாழ்ந்த
ரணப்பட்ட கதைசொல்லி கண்ணீர்வடிக்கும்
நல்லது மட்டுமே செய்யும் தனக்கு
கெட்டது மட்டுமே செய்யும் மனிதாவென‌
கத்திக்கூச்சலிட்டு மனிதனை தலைகுனியவைக்கும்

மரத்திற்கு மட்டும் சட்டம் தெரிந்தால்
வெட்டிய ஒதுக்கிய மறந்த மதிக்காத‌
ஒவ்வொரு மனிதனையும் நீதிக்கூண்டில் நிற்கவைக்கும்
ஆயுளுக்கும் வெளியே வரமுடியாதபடி
உள்ளே தள்ளும் மரத்தின் சட்டமே வெல்லும்

மரமாய் பிறந்திருந்தும் உயிராய் இருந்தேன்
நீயோ உயிரோடிருந்தும் மரமான மனிதனென‌
எண்ணி எண்ணி பெருஞ்சொற்பொழிவு ஆற்றும்
எழுதிவைக்காமலே வாழ்க்கை முழுதும் பேசும்

அதைச் சொல்லி முடிக்கும் வரையாவது
மனிதன் கேட்பானா எனத் தெரியாது
அவன் காதுதான் நல்லதையே தாங்காதே
அதனைக் கூட வெட்டிப் போட்டுவிடுவான்

ஏனென்றால் மனிதனுக்கு நல்லதும் பிடிக்காது
நல்லது உரைக்கும் மனிதனும் பிடிக்காது
நல்லது செய்யும் எவையும் பிடிக்காது
மொத்தத்தில் நல்லது என்பதே பிடிக்காது

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (12-Jun-24, 6:46 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 183

மேலே