பொற்கொடி

பொற்கொடி யொத்தெழில் பூத்தது போன்று
பூவிழி யாள்மனம் பூத்திட நின்றாள்
கற்சிலை நிகர்த்தவக் காரிகை யாளின்
கண்ணிமை விசிறிய காற்றினில் வீழ்ந்தேன்
அற்புத மழைவிழ ஆடிய வித்தாய்
அகமது மகிழ்வுற ஆசையின் வித்தை
நற்றமிழ் மொழியென நாடியி லிட்டாள்
நர்த்தகி அதிசய நாட்டிய மிட்டாள்
*
சிற்றிடைக் கொடியொடு செங்கனி காய்த்துச்
சிந்தனை வெளிகளில் சிந்திய வண்ணம்
பற்றிய விபரம் பால்நில வோடே
பைங்கிளி கனிரசப் பாத்திர மானாள்
வற்றிய குளக்கரை வாழ்கிற கொக்கின்
வறுமையை இடையொடு வைத்துள வஞ்சி
வெற்றிலை நிகர்த்துள வெற்றிடந் தன்னில்
வேர்விடும் பயிர்வர வேண்டுதல் வைத்தாள்
*
புற்றுளப் பாம்பென புருவமும் நீண்டு
புதுவிச அம்பெனப் பீச்சிய பார்வை
சற்றுயிர் கொல்கிற சாகசப் போர்வை
சம்மதம் சொல்கிற சாயலில் தீர்வை
நெற்றியில் குங்குமம் நீயிடு வென்று
நேரெதிர் கேட்கிற நேரிழை யன்பை
பெற்றிடும் ஒர்வரம் பெற்றவ னாயே
பித்துற நின்றது பெருங்கன வாமே!
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Jun-24, 2:17 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 60

மேலே