உறவுகளோடு உறவாக

உறவுகளோடு உறவாக
டேய் ராஜேசு விசயம் தெரியுமா? பாலு நாளைக்கு ஊருக்கு வரப்போறான்.
அப்படியா ! மகிழ்ச்சி, ஆமா நாம அவனை ஏர் போர்ட் போய் அழைப்போமா?
பார்க்கலாம், வருசா வருசம் செய்யறமாதிரி அவனை ஏர் போர்ட்டுல இருந்து கூட்டிட்டு போயிடலாம், அவன் எப்பவும் தங்கற பாரீஸ் கார்டனுக்கு.
ஓ.கே நண்பர்கள் கிட்ட எல்லாம் இன்பார்ம் பண்ணிடு, நாளைக்கு எத்தனை மணிக்கு பிளைட்?
எப்பவும் போலத்தான், ஏழு இருபதுக்கு, நாம் ஏழு மணிக்கு அங்க நிக்கலாம்.
அப்பா இந்த முறை நாங்களும் உங்களோட வருவோம், இரண்டாவது மகள் அஞ்சனா பாலுவிடம் கேட்டாள்.
வேண்டாம் குட்டி, இரண்டு நாள்தான் பழைய பிரண்ட்ஸை பார்த்துட்டு வந்துடுவேன்.
ஏன் நாங்க வந்தா என்ன? பெரியவள் பிலோமினி அவனிடம் வேகமாய் கேட்டாள்.
இல்லைடா நீங்க வந்தாலும் உங்களை வெளியில கூட்டிட்டு போக முடியாது, வெளியில வெயில் அப்படி இருக்கும்.
பரவாயில்லை, எங்களுக்கும் உங்க ஊரை பத்தி தெரிஞ்சுக்கணுமில்லை
அதுவும் சரிதான், மனம் நினைத்தாலும் இவர்களை எனது ஊருதான் என்று நிருபிக்க எங்கு கூட்டி செல்வேன். நான்கு வருடங்களாக செல்கிறோம், ஆனால் ஒருவர் வீட்டுக்கும் சென்றதில்லை, ஹோட்டலில் ரூம் எடுத்து தங்குகிறோம், நண்பர்களுடன் ஊட்டி கொடைக்கானல் இப்படி எங்காவது கிளம்பி பார்ட்டி, செலவு, கும்மாளம், எல்லாம் முடித்து விட்டு மீண்டும் மூன்றாவது நாளில் அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறோம். இவர்களையும் கூட்டி போய் எதை காட்டுவது?
மனைவி சித்ரா இவனது யோசனை செய்யும் முகத்தை பார்த்துவிட்டு இவங்களை கூட்டிட்டு போனா உங்க பிரண்டுகளோட குடிச்சு கும்மாளம் போட முடியாது, அப்படித்தான யோசிக்கறீங்க
படாரென்று போட்டு உடைத்தாற்போல பேசிவிட்டாள், இந்த நான்கு வருடங்களாக எத்தனை முறை தானும் வருவதாய் கேட்டிருப்பாள், இவள் வந்தால் நண்பர்களுடன் ஜாலியாய் எஞ்சாய் பண்ணமுடியாது என்றுதானே தவிர்த்து வந்தான்.
அவள் முகத்தை உறுத்து பார்த்தான். என்ன முறைக்கறீங்க? உங்க அப்பா அம்மா எல்லாம் சின்ன வயசுலயே அந்த ஊரை விட்டு வந்துட்டாங்கன்னு சொல்றீங்க, இந்த நாலு வருசம் தொடர்ந்து ஊருக்கு போறேன்னு இரண்டு மூணு நாளு ஹோட்டல்ல தங்கிட்டு அவ்வளவு செலவு பண்ணிட்டு வர்றதுல என்ன பிரயோசனம்? உங்களுக்கு தூரத்து சொந்தம் ஒருத்தர் கூடவா உங்களால கண்டு பிடிக்க முடியலை?
நியாயமான கேள்விதானே, ஏன் நண்பனாய் இவனது ஹோட்டல் அறைக்கு வரும் நரேன், சுரேஷ் இவர்கள் எல்லாம் தூரத்து சொந்தங்கள் தானே, ஒரு முறை கூட வீட்டுக்கு வாயேன், என்று ஏன் அழைக்கவில்லை? பார்ட்டி என்றவுடன் உடனே எங்கிருந்துதான் அத்தனை நண்பர்கள் வந்து குவிவார்களோ, ஒருத்தனாவது ஒரு நாள் வீட்டுக்கு வான்னு கூப்பிட்டு போனதில்லையே, நினைக்கும்போதே அவனுக்கு மனது வலித்தது.
ஏர்போர்ட்டில் பாலுவுக்காக காத்திருந்த நண்பர்கள் கூட்டம், அவன் மனைவி குழந்தைகளுடன் இறங்கி வருவதை பார்த்ததும் சற்று சுருதி குறைந்தது போல் உணர்ந்தது.
பாலு சுற்றியுள்ளா நண்பர்களை தனது மனைவியிடமும், குழந்தைகளிடமும் அறிமுகப்படுத்தினான். எப்பொழுதும் அவனுக்காக தன்னுடைய காரை எடுத்து வரும் ரமேஷ் இவன் குடும்பம் ஏறிக்கொண்டதும், வழக்கமா போற ஹோட்டல்தான? என்றான்.
சித்ரா சட்டென்று அது வேண்டாம் வேறொரு பேரை சொன்னாள், அங்க அவங்களே கோயமுத்தூரை சுத்தி இருக்கர எல்லா இடத்தையும் சுத்தி பார்க்க ஏற்பாடு பண்ணி கொடுப்பாங்களாம், கூகுல்ல பார்த்தேன் என்றால்.
ரமேஷ் பாலுவின் முகத்தை பார்த்தான், அவன் எதுவும் பேசவில்லை, அவள் சொன்னதை ஆமோதிப்பது போல பேசாமல் இருந்தான். ரமேஷ் காரை அவர்கள் சொன்ன ஹோட்டலில் கொண்டு போய் நிறுத்தினான்.
சரி நீங்க ரூம் போட்டு ரெஸ்ட் எடுங்க, நான் அப்புறமா வந்து பார்க்கறேன், அவசரமாய் சொல்லி விட்டு காரை எடுத்து சென்று விட்டான். சித்ரா பாலுவின் முகத்தை பார்த்தாள். அவன் போகும் காரை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான், இறங்கி இவன் கூடவே அறைக்கு வந்து கதை பேசிவிட்டு காலை டிபனை எல்லாம் முடித்து விட்டு கிளம்புபவன், இப்படி சட்டென்று கிளம்பி விட்டான். கூட வரும் ஒருத்தரையும் காணோம்.
இவர்கள் குளித்து தயாராகி டிபன் சாப்பிட கீழே வந்தார்கள். ரிசப்சனில் வாடகை கார் ஒன்றை ஏற்பாடு செய்யும்படி சித்ராவே பேசினாள், கோயமுத்தூரை சுற்றி பார்த்து விட்டு மாலை வரை வேண்டும் என்றும் குறிப்பிட்டு கேட்டாள்.
முதலில் எங்கு போகலாம்? ஒவ்வொன்றாய் பட்டியல் போட்டு வைத்திருந்தாள், டிபன் சாப்பிட்டு முடித்து கிளம்பினார்கள்.
காலையில் செல்போன் சத்தம் கேட்டே பாலுவால் கண்ணை விழிக்க முடிந்தது, நேற்று எல்லா இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு வரும்போது இரவு எட்டு மணிக்கு மேலாகி இருந்தது. கார் வாடகை கணக்கு எல்லாம் முடித்து அதற்கு பின் இரவு உணவையும் முடித்து படுக்கைக்கு வரும்போது பத்து மணி ஆகி விட்டது. படுத்ததுதாம் தெரியும் நால்வருக்கும், அடித்து போட்டாற் போல உறக்கம்.
போனில் நரேன், இவனை விசாரித்தான், அவன் மனைவி இவன் மனைவியை பற்றி விசாரித்தாளாம், மதுரையில் இவள் ஊருக்கு அடுத்த ஊர்தானாம், தூரத்து சொந்தமாம், குழந்தைகளுடன் வீட்டுக்கு வர முடியுமா? என்று கேட்டான்.
அதற்கு எழுந்து இவன் முகத்தை பார்த்தபடி இருந்த சித்ராவிடம் நம்மளை நரேன் வீட்டுக்கு கூப்பிடறான், என்றான்.
காலையில பத்து மணிக்கு வர்றோமுன்னு சொல்லுங்க, சைகை மூலம் சொன்னாள், இவன் நரேனிடம் போனில் சொன்னான், காரை அனுப்பட்டுமா? வேண்டாம், நாங்க ஏற்பாடு பண்ணிக்கறோம்.
அன்று நரேன் வீடு மட்டுமல்ல, அவனின் மனைவி இன்னும் இரண்டு மூன்று வீடுகளுக்கு கூட்டி சென்று உறவுக்காரன் என்று அறிமுகப் படுத்தினாள், அது மட்டுமல்ல இவனது மூதாதையர் வாழ்ந்த வீடு என்று கொஞ்சம் பழையதாய் இருந்தாலும் காட்டியபோது உண்மையில் இவன் மனம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தது.
மூன்று நாட்கள் தங்கி எல்லா இடங்களுக்கு சென்று விட்டு கிளம்பும் போது, ஆச்சர்யகரமாய் இவனை வழி அனுப்ப நண்பர்கள் அவரவர்களின் குடும்பத்தோடு இருந்தார்கள்.
இந்த நான்கு வருடங்கள் வந்து சென்று கொண்டிருந்தாலும் முதன் முதலாக, இந்த பயணம் உண்மையிலேயே அவனுக்கு திருப்தியாய் இருந்தது. அது மட்டுமல்ல தனது மூதாதையர் வாழ்ந்த இடத்தில் தனது குடும்பத்திற்கென்று ஒரு வீடு இருக்க வேண்டும், அதில் வருடம் ஒரு முறை வந்து தங்கி செல்ல வேண்டும் என்னும் சிந்தனையும் வந்திருந்தது.
அருகில் இடது வலதாய் உட்கார்ந்திருந்த மனைவியையும், இரு பெண்களையும் கைகளை விரித்து தனக்குள் இறுக்கி கொண்டான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (24-Jun-24, 10:50 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : uravukalodu uravaga
பார்வை : 27

மேலே