அவள் வாழ்க்கை

அவள் வாழ்க்கை
“சுமித்ராவுக்கு” அந்த செய்தி கிடைத்த பொழுது அவள் முக்கியமான ஒரு கருத்தரங்கில், அடுத்து மேடையில் பேசுவதற்கு தயாராக இருந்தாள். ஒரு நிமிடம் அந்த செய்தி அவளை முழுவதுமாய் உணர்வற்ற நிலைக்கு கொண்டு சென்றாலும், மேடம்..அடுத்து நீங்க பேசணும், ஞாபகப்பபடுத்திய காரியதரிசியின் குரல் அவளை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது.
மேடையில் ஏறியவள் ‘என்ன பேசினாள்’ என்பதையே உணரமுடியாதவள் போல் பேசி முடித்து கீழிறங்கினாள்.
அருமையா பேசினாங்க அக்கம்பக்கத்தின் கிசுகிசுப்பு பேச்சு அவள் காதில் விழுந்தது, இந்த வார்த்தைகள் அவளுக்கு இன்னும் துக்கத்தை அதிகப்படுத்தத் தான் செய்தது. எந்த உணர்வுமில்லாமல் பேசியதையயே ‘அருமை’ என்று சொல்லும் அளவுக்கு அவள் தயாரானது எப்படி?
வெறும் பனிரெண்டு வகுப்பு படித்தவள் இன்று ஆங்கிலத்தில் பேசுமளவுக்கும், சமூக நலன் சார்ந்த நான்கைந்து அரசு, மற்றும் தனியார் அமைப்புகளில் ‘ஆலோசகராகவும்’ அவளால் இன்று உட்கார்ந்திருக்கும் அளவுக்கு இவளை மெருகேற்றி விட்டது யார்?
அதை விட “நமது திருமண பந்தம்” என்பது ஒரு உடன்படிக்கை மட்டுமே, இப்படி சொல்ல காரணம் “நான் இன்னும் எத்தனை நாள் இந்த ஆரோக்கி யத்துடன் இருப்பேன் என்று கணிக்கமுடியாது”. இந்த உலகத்தில் பிறந்து விட்டு எந்த பிரயோசனமும் இல்லாமல் இருபத்தி ஐந்து வயதுக்குள் முடங்கி போய் விட என்னால் முடியாது, அதற்குள் பலருக்கு உதவ என்னால் முடியா விட்டாலும் யாராவது ஒருவருக்கு நான் பிரயோசனப்படமுடியும், அதற்காக உன்னை நான் தேர்ந்தெடுத்தேன், ஆனால் எப்படி உன்னை வெளியில் அழைத்து போவது? அதற்காகத்தான் இந்த “திருமணம் என்னும் பந்தம்.
அதனால் இந்த “உடன்படிக்கையின் படி” எப்பொழுது வேண்டுமானாலும் எனது செயல்பாடுகள் முடங்கி படுக்கைதான் என் வாழ்க்கை என்றாகி விடும் அப்போது நீ என்னை விட்டு விலகி கொள்ளலாம், அதற்கு உனக்கு பூரண உரிமையை கொடுக்கிறேன். அன்று இரவு “ரவி” கொடுத்த வாக்குறுதி..
இதோ இன்று அவள் காதில் அவன் மறைந்து விட்டதாக வந்த செய்தி..! கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்தவள் காரியதரிசியிடம் ‘கிளம்புகிறோம் அவசர வேலை’ என்று விழா அமைப்பாளரிடம் சொல்லி விட்டு வா” பதிலை எதிர்பார்க்காமல் விறு விறுவென வெளியே வந்தவள் காரை நோக்கி வேகமாக நடந்தாள்.
அவள் அங்கு போய் சேர்ந்த பொழுது “ரவியின்” இயக்க தோழர்களால் உடல் சவ பெட்டியில் வைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இவள் காரை விட்டிறங்கி வேகமாக அவனது உடல் அருகில் சென்றபோது “பாலன்” அவளை எதிர் கொண்டு அழைத்தான்.
காரணம் மற்ற தோழர்கள் ஒரு வித அசூயையுடன் அவளை கண்டு கொண்டிருந்தார்கள். ‘பாலன்’ இவளையும் அவனையும் நன்கு அறிந்தவன், அதனால் அவளை கை கூப்பி வரவேற்று அவனது உடலை காண அழைத்து சென்றான்.
முகம் மட்டுமே புன்னகையுடன் இருக்க உடல் முழுவதும் சுற்றப் பட்டிருந்தது. கிட்டத்தட்ட நீண்ட கால படுக்கை, செயல்பட முடியாத அங்கங்கள், என்ன செய்ய முடியும்?
அவளுக்கு அவன் முகத்தை காண காண பத்து வருடங்களுக்கு முன்னால் நடு இரவில் அவள் அறையில் அவன் சொன்ன இந்த உடன்படிக்கை ஞாபகம் வந்தது. “ரவி” சவ பெட்டியில் தலை வைத்து கண்ணீரை சிந்தியவள், மெல்ல தலையை நிமிர்த்தி பாலனை பார்த்தாள்.
மேற்கொண்டு ஒரு மணி நேரத்திற்குள் தங்கள் இயக்கம் சார்பாக ரவியை ஊர்வலமாக மயானத்துக்கு எடுத்து கொண்டு செல்ல போவதாக பாலன் கூறினான்.
அவனது உடலை எடுத்து செல்வது வரை ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டு செல்வதாக கூறி அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளை நோக்கி நடந்தாள்.
அப்பொழுது அவளுக்கு பதினாறு அல்லது பதினேழு இருக்கலாம், பனிரெண்டு முடித்து வீட்டில் முட்ங்கியிருந்தாள். வறுமை தாண்டவமாடியது வீட்டுக்குள். இரண்டே அறைகள் கொண்ட வீட்டில் பெற்றோருடன் சேர்த்து ஆறு பேர்.
தினமும் சாராயம் குடித்து விட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா, அதற்கு ஈடு கொடுத்து அவனிடம் மல்லு கட்டும் அம்மா. இவர்கள் இருவரையும் விட வீட்டில் தங்கும் காசை பறித்து அவ்வப்பொழுது ஓடி விடும் அண்ணன்கள். இருவர். கடைசியான இவளுக்கு மேல் இருக்கும் அக்கா புருசனிடம் சண்டையிட்டு இங்கு வந்து உட்கார்ந்து பிறரை அதிகாரம் செய்யும் அவலம்.
இவள் படிக்க போனால் என்ன?போகாவிட்டால் என்ன? யாருக்கும் எதை பற்றியும் அக்கறை இல்லாத குடும்பம், அதில் இவள் அல்லாடிக்கொண்டிருந்த பொழுது..
ரவி… தனக்கென ஒரு லட்சியத்திய மனதில் வைத்து கொண்டு சிறுவயதில் இருந்தே தன் தந்தையின் அடிச்சுவட்டில் ஒரு இயக்கத்தில் இருந்தான். சூழ்நிலையால் இராணுவத்தின் பணியில் சேர்ந்தான். சேர்ந்து இரண்டு மூன்று வருடங்கள் கழிந்திருந்த போது, தீவிரவாத கும்பல் ஒன்றில் மோதும்போது படுகாயமடைந்தான். மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தார்கள். மருத்துவமனையில் அவனது காயங்களை குணப்படுத்திய மருத்துவர்கள் எதிர்காலம் அவனுக்கு பிரகாசமாக இருக்கப்போவதில்லை என பல்வேறு பரிசோதனைகளில் கண்டு பிடித்தார்கள். அதனால் இராணுவ பணியில் இருந்து விடுவித்து, இழப்பீட்டு தொகையுடன் ஊருக்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.
அந்த வயதில் திரும்ப வந்தவன், தனக்கு சொந்தமாக இருந்த துண்டு நிலமும், ஓட்டு வீடும் ஒரே உறவான அம்மாவும் இருக்க, அவன் மனதுக்குள் இருந்த இயக்க உணர்வுகள் மீண்டு எழ அந்த ஊரில் இருந்த ஒரு இயக்கத்தில் தோழன் என மீண்டும் தன்னை உறுப்பினராக்கி கொண்டான்.
அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக இயக்கம் சார்ந்த பணியில் ஆர்வத்தை அதிகப்படுத்தி தலைமை அவனை பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் அளவுக்கு வளர்ந்தான். அவனது பேச்சு திறமையும் செயல்பாடுகளும் அவனை மேலும் பிரபலபடுத்தினாலும், “தலைமையிடம்” தன்னுடைய உடல்நிலையின் எதிர்கால நிலைமையையும் தெரியப்படுத்தவே செய்தான்.
இயக்கம் அதனால் அவனுக்கு அளிக்கும் இயக்க பணிகள் சம்பந்தபட்ட விசயங்களில் கடினமான செயல்களை தவிர்த்து எழுத்து, பிரச்சாரம் போன்றவற்றில் ஈடுபடுத்தியது. இவனும் முழு மூச்சாய் இதில் ஈடுபட்டு கொண்டிருந்தான்.
அன்று இவளின் வீட்டுக்கு தூரத்து சொந்தமென்று அம்மாவால் அங்கு போய் பார்க்க சொன்னதாக வந்தவன் அங்கிருந்த குடும்பத்து சூழ்நிலைகளை புரிந்து கொண்டான்.
பாவம் இவளை முடக்கி வைத்து அறைக்குள்ளேயே அடைபட்டு கிடக்கும் அவளின் நிலை கண்டு சங்கடப்பட்டான்.
இரண்டு மூன்று முறை ‘இயக்கம்’ சம்பந்தமாக வந்து சென்றவன் ஒரு நாள் அவள் வீட்டில் முன் திண்ணையில் படுத்து கொண்டிருந்த பொழுது அவனுள் திடீரென எழுந்த தீர்மானம் நாமே ஏன் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள கூடாது? ஆனாலும் எதிர்காலம் எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை முடக்கி போட்டு விடும் என்னும் மருத்துவர்களின் கணிப்பு இவைகளை கருத்தில் கொண்டவன், அவளிடம் தனித்து பேசவேண்டும் என்று முடிவு செய்தான்.
ஒரு நாளிரவு அவள் தனித்து இருக்கும் நேரம், அதிகாரம் செய்து கொண்டிருக்கும் அக்காவும், அவள் அம்மாவும் எங்கோ வெளியில் சென்றிருக்க, வழக்கம் போல அவள் அப்பா சாராயக்கடைக்கு சென்றிருந்தார். மற்ற ஆண் மக்கள் இருவரையும் காணோம். இவன் துணிச்சலாய் அவளிடம் சென்றான். “இங்கு பாரு பெண்ணே” நமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுவோம், அதாவது “திருமண உடன்படிக்கை” என்று வைத்து கொள், தன்னை பற்றிய எல்லா விவரங்களையும் சொல்லி விட்டு, நீ வீட்டுக்குள் இருந்து சிரமப்படுவதில் இருந்து வெளி வருவதற்கும் உபயோகமாயிருக்கும், என்றாலும் யோசித்து உன் முடிவை எடு, சொல்லி விட்டு மீண்டும் வந்து திண்ணையில் படுத்தவன் உறங்கி விட்டான்.
அவன் கிளம்பி சென்று மறு முறை வந்த போது அவள் தன் சம்மதத்தை தெரிவிக்க அந்த இடத்திலிருந்து வெளிப்பட்டு இயக்க தோழர்களால் திருமணம் நடந்தப்பட்டு நகரில் ஒரு இடத்தில் வாழ்க்கையை தொடங்கினான்.
தான் வாக்கு கொடுத்தபடியே அவளை ஓரு கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தவன் தன் இயக்கம் சாந்த மகளிர் முன்னேற்ற திட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் குழுவிலும் சேர்த்து விட்டான்.
இவளது “கற்பூர புத்தி” பிரகாசமாக இரண்டு மூன்று வருடங்களில் நன்கு கற்று பிறரிடம் பேசவும், பழகவும், ஏன் ஆங்கிலத்தில் பிறருடன் உரையாடவும் கூட கற்று கொண்டாள்.பட்டபடிப்பையும் முடித்து வெளி வந்தாள்.
அதே நேரத்தில் இவளது ‘அம்மாவின் வருகை’ மீண்டும் அவளை அந்த குடும்ப சிக்கலுக்குள் இழுத்து விட முயற்சித்தது, இவன் இவள் இங்கிருந்தால் மீண்டும் அவளது குடும்ப சிக்கலுக்குள் இழுத்து விடுவார்கள் என நினைத்து அவளை தொலை தூரம் அனுப்பி மேல் படிப்புக்காகவும், அதே நேரத்தில் அவனது இயக்க தலைமை அலுவலகத்தில் அவளை உறுப்பினராக்கியும் அனுப்பி வைத்தான்.
இந்த நேரத்தில் அவனது கால்கள் மெல்ல,மெல்ல உணர்விழக்க ஆரம்பித்தது. இதனால் இவனை விட்டு வெளியூர் செல்ல அவள் மறுத்த போது அவன் சொன்னது “எப்பொழுது என் வாழ்க்கை இயலாத கட்டத்துக்கு போகும்” என்று தெரியாது, அதற்குள் “உனக்கு என்று ஒரு வாழ்க்கை”, அது மட்டுமில்லாமல் இந்த சமூகத்தின் பேர் சொல்லும் அளவுக்கு கொண்டு வருவதுதான் எனது லட்சியம்.
அவனது பிடிவாதம் அவளை பெங்களூருக்கு அனுப்பி வைத்தது. அங்கு ஒரு வருடம் இருந்து விட்டு அவள் டெல்லியில் இருந்த போது தகவல் வந்தது. “ரவி” இரண்டு காலும் செயலிழந்து படுக்கையில் விழுந்து விட்டான் என்று.
திரும்பி வந்த அவளை மருத்துவமனையில் பிடிவாதமாக பார்க்க மறுத்து விட்டான். பாலன் அவளிடம் அவனது கோரிக்கையை சொன்னபோது விதிர் விதித்து விட்டாள், பாலன் சொன்னதை ஏற்று கொள்ள மறுத்து அவனை திருப்பி அனுப்பி விட்டாள். மீண்டும் பாலனிடம் சொல்லி அனுப்பி விட்டான் தனது “உடல் நிலையை” காரணம் காட்டி மனபூர்வமாக அவளுக்கு விவாகரத்து வழங்குவதாக சொல்லி அனுப்பி விட்டான்.
திடீரென எழும்பிய ஓசையில் சட்டென உணர்வு வந்து நிமிர்ந்தவள் “ரவியின் உடல்” அவர்கள் இயக்கத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு எடுத்து செல்வதை கண்ணீருடன் பார்த்தாள்.
அவள் வீடு திரும்பி காரை விட்டு இறங்கிய போது “அப்பா அம்மா வந்தாச்சு” கத்தி கொண்டே மூன்று வயது மகள் தன் சின்னஞ்சிறு கால்களால் அம்மாவை நோக்கி ஓடி வந்தாள்.
அவளை அணைத்து எடுத்து மார்போடு இறுக்கியவளின் கண்களில் கடந்த வாழ்க்கையின் கண்ணீர் மிச்சம் இருந்தாலும், அவள் தற்போது இருக்கும் புதிய உலகத்துக்குள் தன்னை நுழைத்து கொள்ள தயாராக இருந்தாள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Jul-24, 1:52 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : aval vaazhkkai
பார்வை : 74

மேலே