அசைவமும் மனவளக்கலையும்
வேதாத்திரி மகரிஷி அவர்களின் 'மனவளக்கலை' எனும் மனித உடல் மன மற்றும் உயிர் பயிற்சி மிகவும் தனித்துவம் வாய்ந்தது. மகரிஷி மறைந்து 18 ஆண்டுகள் ஆனபின், இன்னமும் இந்த வாழ்வியல் கலை பயிற்சி, இந்தியாவின் பல பகுதிகளில் பயில்விக்கப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இப்பயிற்சி, பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பயிற்சியை வடிவமைப்பு செய்வதற்கு வேதாத்திரி மகரிஷி பல வருடங்கள் அரும்பாடு பட்டார். நாற்பத்தி ஐந்து வயது வரை அசைவ உணவை உண்டுவந்த அவர், வள்ளலாரின் கொல்லாமை மற்றும் ஜீவகாருண்ய நெறிவழியில் ஈர்க்கப்பட்டார். ஒரு நாள் இரவு அவர் அருகில் வள்ளலார் வந்து " அடுத்த பத்து வருடங்கள் நான் உன்னுள் இருந்து செயல்படுவேன்" என்று வாக்களித்துச்சென்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்திலிருந்து அவர் சைவ உணவாளராக மாறி, ஆன்மீக பயிற்சியில் ஆழ்ந்து ஈடுபட்டார்.
இந்த பயிற்சி முறையை அதன் இறுதி கட்டத்திற்கு கொண்டு வர, அவர் நாற்பது ஆண்டுகள் இரவு பகல் பாராது உழைத்தார். வள்ளலாரின் ஜீவகாருண்யம் மற்றும் கொல்லாமை நெறிமுறைகளை மனதில் கொண்டு தான், மகரிஷி இந்த பயிற்சியின் அகத்தாய்வு பிரிவுகளை வடிவமைத்தார்.
மனவளக்கலை பயிற்சி செய்பவர்கள் தினசரி தவம் செய்த பிறகு எடுத்துக் கொள்ளும் உறுதி மொழி ஒன்று உள்ளது. " நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன். துன்பப்படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்" என்பதே அது. இந்த சங்கல்பத்தை தியானம் செய்த ஒருவர் மூன்று முறை சொல்கிறார். இதை இரண்டொழுக்க பண்பாடு என்று மண்வளக்கலையில் குறிப்பிடுவார்கள்.
காயகல்பம் என்ற ஒரு உயிர் சக்தி சார்ந்த மிகவும் தனித்துவமான ஆற்றல் பேருக்கும் பயிற்சியும் மனவளக்கலை பயிற்சியில் அடங்கும். இந்த பயிற்சியை பயில்விக்கையில் சில மனவளக்கலை பயிற்சி ஆசிரியர்கள், உயிர் சக்தி 13-14 வயது வரை மூளையில் வளர்ந்து வருகிறது என்ற கருத்தை விளக்குகையில், ஆட்டின் மூளையை அதனுடன் ஒப்பிட்டு கூறுகின்றனர். அதாவது ஆட்டின் மூளை போல ஒரு சிறு குழந்தையின் தலை உச்சி இருக்கும் என்பதை இப்படி ஒப்பிட்டு குறிப்பிடுகின்றனர். அப்போது இந்த ஆசிரியர்கள் " நீங்கள் எவ்வளவு பேர் ஆட்டு மூளையை சாப்பிட்டிருக்கிறீர்கள்?" என்று கற்கும் மாணவர்களிடம் கேட்கின்றனர். பின்னர் " ஆட்டின் மூளை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்கின்றனர்.
ஆசிரியர்களின் இந்த செயல், எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. ஒரு புறம் மேற்கூறிய இரண்டொழுக்க பண்பாட்டை தினமும் சங்கள்போம் சொல்லிவிட்டு, இன்னொரு புறம் ஆட்டு மூளையை சாப்பிடுவதைப் பற்றி , இந்த பயிற்சியை பயில்விக்கையில் ஆசிரியர்கள் சிலர் பேசுவது, மகரிஷியின் கொள்கைகளுக்கு புறம்பாக இருக்கிறது.
மனவளக்கலையை பரிபூரணமாக உணர்ந்த ஒருவர், அடைய வேண்டிய மனநிலை என்னவென்றால், அவர் சைவ உணவு உண்பவராக மாறவேண்டும் . அப்போது தான், " இந்த பிரபஞ்சம் உருவாகி இயங்க காரணமாக இருக்கும் மூலப்பொருள் (ஆதி சக்தி), இந்த பிரபஞ்சத்தையும் அதனை கடந்து இருக்கும் பெருவெளி (சுத்தவெளி) என்று நம்பப்படும் அருட்பேராற்றல் ஆகும். அந்த நிலையை ஒருவர் உணரும்போது, இங்கும் எங்கும் வியாபித்திருப்பது தூய்மையான அன்பு மட்டுமே என்றும் ஆழ்ந்து அறிகிறார்.
எனவே, எந்த ஒரு உயிருக்கும் தீங்கு இழைக்காமல் இருப்போம் என்ற வேதாத்திரி மகரிஷியின் உயர்ந்த மனித பண்பாட்டை கடைபிடிப்பவராக , எந்த ஒரு மனவளக்கலை அன்பர் உயர்கிறாரோ, அப்போதுதான் அவர் வேதாத்ரியின் ஆன்மீக பயிற்சியில் அவர் ஓரளவுக்கேனும் முதிர்ச்சி பெற்றுள்ளார் என்பதற்கு சான்று.