ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா
கைகள் எதற்காக தட்டப்படுகின்றன என்பதில்தான்
கட்டமைக்கப்படும் எதிர்கால சமூகத்தின் ஓசையுள்ளது.
கழைக்கூத்தாடிகளின் கயிற்றுவித்தைகளுக்கு கைதட்டிவிட்டு
கலைப்படைப்புகள் கண்டுநாளானது என்றே கண்ணீர்விட்டோம்!
கையூட்டு கட்சிக்காரனின் நெய்யூட்டும் பொய்களுக்கு கைதட்டிவிட்டு
கண்ணியத் தலைவர்ககளை காணவில்லையேயென்று கவலைப்பட்டோம்!
ஓடியாடும் பிள்ளைகள் ஓய்வின்றி படிக்கிறார்களென்று கைதட்டிவிட்டு
ஒலிம்பிக் தங்கம் ஒன்றெனும் வருமாயென்று ஒதுங்கிநின்று பார்த்தோம்!
அரசுவேலை லஞ்சத்தில் மகனுக்குக் கிடைத்ததில் ஆர்வமாய் கைதட்டிவிட்டு
அரசாங்கம் சரியில்லையென்று அடிக்கடி நாமும் அலுத்துக்கொண்டோம்!
சாதிஒதுக்கிடு சான்றிதழ் பெற்றது சாமர்த்தியம் என்று கைதட்டிவிட்டு
சமூகநீதி சமுதாயம் சத்தியமாய் மலரவில்லையென்று சலித்துக்கொண்டோம்!
சத்தியவான்கள் நாங்களென்று சங்கீதம் பாடிக்கொண்டு
சவுக்கெடுத்து அடுத்தவர்மேல் தண்டனையும் கொடுத்தோம்!
செய்யும் தவறை சரிசெய்யும் நாள் நம்மில் வராதவரையில்
செவிக்கு ஓசை எந்த கை தட்டினாலும் இல்லவே இல்லை!!