காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 21
நேரம் நல்லிரவு 11.30 கடந்து அந்த நாளின் கடைசி சில நிமிடங்களை கடத்திக்கொண்டு இருந்தது.
காலையில் இருந்து நிகழ்ந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக மனதில் உருவேற்றி சொல்ல இயலாத உணர்வுக்கு ஆட்பட்டிருந்தாள் திலோத்தமா.
இன்று காலை என்றும் போல் தான் அலுவலகம் நோக்கி மனதில் ஆயிரம் கனவுகளுடன் பயணித்தாள், ஆனால் விதி வேறு விதமாக விளையாட்டு காட்டுகிறது அவளிடம்.
உறக்கம் வராமல் விழிகளை கொட்ட கொட்ட விரித்து வானில் உலாவும் வெண்ணிலாவை ஜன்னல் வழியாக பார்த்தவாறு படுத்திருந்தாள் .
பால் நிலவை பார்க்கும் போது இவள் மனதில் அன்றைய நிகழ்வுகளால் எழுந்த அதிர்ச்சி சிறிது சிறிதாக குறைவதை இவளால் உணர முடிந்தது.
யாரும் அற்ற தனிமையில் இருந்து பழக்கம் இல்லாததால் சிறு படபடப்பு எழுவதை உணர்ந்தாள் திலோத்தமா.
பிரியாவும் இவளுடன் இங்கே தங்குவதாக தான் கூறினாள் ஆனால் அவளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு திலோதான் கட்டாயப்படுத்தி அவளை அனுப்பி வைத்தாள்.
அப்பொழுதும் மனதே இல்லாமல் காலையில் வந்து விடுவதாக ஆயிரம் முறை திருப்பித் திருப்பி கூறியவாறு மனதே இல்லாமல் அகன்ற அந்த அற்புதமான புது தோழியை மனதில் நினைத்து புன்னகைத்துக் கொண்டாள்.
இடையில் உறக்கத்தில் சினுங்கிய கண்ணனை லேசாக தொட்டிலை ஆட்டியவாறு வலதுகை கட்டைவிரலை வாயில் வைத்து சப்பியபடி உறங்கும் குழந்தையை விழி அகற்றாமல் பார்த்தபடி தொட்டில் அருகிலேயே நின்றிருந்தாள்.
மாலைப் பொழுதில் இருந்து மனதில் எழும் இனம்புரியாத ஒருவிதமான படபடப்பை அவளால் உணர முடிந்தது ஆனால் ஏன் என்று தான் அறிந்து கொள்ள முடியவில்லை.
ஒரே நாளில் தன் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களே காரணமாக இருக்கும் என்று தனக்குத்தானே சொல்லி கொண்டாள் திலோத்தமா.
தன் பெற்றோரையும், ஆயாம்மாவையும் நினைத்த நொடியில் மளுக்கென்று உடைப்பெடுத்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு மூச்சு சத்தமில்லாமல் அழுது தீர்த்தாள்.
என்னதான் சத்தமில்லாமல் அழுதாலும் அடங்காமல் எழுந்த கேவல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் வயோதிகத்தால் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த யசோதம்மா எழுந்து வந்து இவள் தோளின் மேல் கையை வைக்க, திடீரென இவள் மீதான ஸ்பரிசத்தில் விதிர்த்து இவளை அறியாமல் சத்தமாக கத்தியிருந்தாள் திலோத்தமா.
**********
அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த மருத்துவரை கண்டு பரபரப்பாக எழுந்து அவரிடம் ஓடினார் கஜலெக்க்ஷமி.
அய்யாவும் அம்மாவும் இப்ப எப்படி இருக்காங்க டாக்டர் என்று கண்ணீர் வழிய கேட்டவரை பார்த்து ஆறுதலாக சாருக்கு அதிர்ச்சியில் சின்னதாக நெஞ்சு வலி வந்திருக்கு இப்ப நார்மலா இருக்காரு.
உங்க அம்மாவுக்கு கீழே விழுந்ததால் தலையில் நல்லா அடிபட்டு ரத்தமும் நிறைய போனதால் கிரீடிக்கலான கண்டிஷன்ல இருக்காங்க கொஞ்சம் நேரம் போனால் தான் எதுவும் சொல்ல முடியும் என்றபடி விரைந்து சென்று விட்டார்.
யாரிடம் என்ன கேட்பது என்று ஒன்றும் புரியாத நிலையில் பதைபதைக்க கார் டிரைவரிடம் ஓடினார் கஜலெக்க்ஷமி.
விரைந்து ஓடி வரும் கஜலெக்க்ஷமியை பார்த்தே விஷயம் முதலாளியின் நிலை சரியில்லை என்று உணர்ந்து கொண்ட டிரைவர் சலீம் புதைத்துக் கொண்டு இருந்த சிகரெட்டை காலில் இட்டு நசுக்கியவாறு என்ன ஆச்சு ஆயாம்மா என்றார்.
மூச்சு வாங்க ஆயாம்மா கூறியவற்றை கேட்டு அவருக்குமே மனது வருத்தத்தால் நிறைந்தது.
மூன்று மாதங்களுக்கு முன்பு மனைவியின் பிரசவத்தில் பிரச்சினை என்ற போது ஆபரேஷன் செலவுக்கு மறுபேச்சு இல்லாமல் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்த முதலாளி,
அடுத்த மாதம் சம்பளத்தில் அந்த பணத்தை தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துக் கொள்ளுமாறு கூறிய போதும், அதற்கு மறுப்பு தெரிவித்தவர்,
குழந்தை பிறந்த பிறகு சும்மாவே செலவு அதிகமா இருக்குமே என்று கூறி சம்பளத்தையும் அதிகப்படுத்தி கொடுத்த முதலாளியை யாருக்குத்தான் பிடிக்காது.
இரு வேலையாட்களுமாக கையை பிசைந்து கொண்டு இருந்த நேரத்தில் டிரைவர் சலீம்,
ஆயாம்மா.... ஐய்யாவோட ஃப்ரெண்ட்
கமிஷனர் ஐய்யாவை கூப்பிடலாம் என்று கூறி ஃபோன் நம்பர் இல்லாத காரணத்தால் காரை எடுத்துக் கொண்டு விரைந்தான் டிரைவர் சலீம்.
சலீம் இடமிருந்து செய்தி அறிந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த கமிஷனர் வினோத், டாக்டர் இடம் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு தன் நண்பனின் நிலைப் பற்றி கேட்டறிந்தார்.
நண்பனை விட அவன் மனைவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதை அறிந்து மேற்கொண்டு செய்ய வேண்டியவை பற்றி கேட்டறிந்தார்.
அவங்க விழும் போது தரையில் அவங்க பின் மண்டை நேராக மோதியதில் நரம்பு அறுந்து விட்டன.
இந்தியாவிலேயே ஒன் ஆஃப் தி பெஸ்ட் நியூரோ சர்ஜன் டாக்டர் பாரதிதாசன் அதிர்ஷ்டவசமா இப்ப சென்னையில் தான் இருக்கின்றார்.
அவருக்கு கால் பண்ணிட்டேன், வந்துட்டே இருக்கார் இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துடுவார் என்றார் டாக்டர்.
இந்த நாளின் தொடக்க நிமிடங்களை டிக் டிக் என்ற சத்தத்துடன் மெதுவாக கடத்த தொடங்கி இருந்தன அந்த தனியார் மருத்துவமனையின் சுவர் கடிகாரங்கள்.
அமாவாசையின் மையிருட்டான சாலையில் ஒளியை வாரி இரைத்தபடி விரைந்து கொண்டிருந்தது பாரதிதாசனின் வாகனம்....
மீண்டும் சந்திப்போம்........
கவிபாரதீ ✍️