புன்னைமரத்தடியில்
மாநிறமா அல்லது கருமையா ? என்று பட்டிமன்றம் வைத்து வாதிட்டு, நடுவர் என்ன முடிவு சொன்னாலும், அந்த தீர்ப்பு ஒருதலை பட்சமான தீர்ப்பாகத் தோன்றும் இடைப்பட்ட நிறம் அவளுக்கு. நாற்பத்தைந்தை கடந்த வயது என்று சொல்லத் தோணாத தோற்றம். ”மீனாக்ஷி காலேஜ்” என்ற பஸ் கண்டக்டரின் குரல், இவளை சுயநினைவுக்கு இழுந்து வந்தது. அவசர அவசரமாய் பஸ்ஸிலிருந்து இறங்கினாள். உடன் கணவரும், இரண்டு மகன்களும் இறங்கினார்கள். மூத்த மகனுக்கு இருபது வயது இருக்கலாம். இளையவனுக்கு மூத்தவனைவிட இரண்டு அல்லது மூன்று வயதுகள் குறைவாக இருக்கலாம். பஸ் ஸ்டாப்பிலிருந்து கல்லூரிக்கு சிறிது தூரம் நடக்க வேண்டும். அங்கிருந்து பார்த்தாலே கல்லூரியின் பெயர் பலகை பளிச் என்று தெரிந்தது. புதிதாக பெயிண்ட் அடித்திருக்கிறார்கள் போலும். கல்லூரியின் பெயரை பார்த்தவுடன் அம்பிகாவுக்கு ஒரு வித படபடப்பு, குதுகலிப்பு.ஹும்.....படிப்பை முடித்து, கல்லூரியை விட்டு பிரிந்து சென்று இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன அவளுக்கு. கால் நூறாண்டுக்கு பின் இப்போதுதான் மீண்டும் கல்லூரிக்குள் காலடி வைக்கப் போகின்றாள். சகமாணவர்கள் செய்த முயற்சியில், இன்று அனைவரும் “வெள்ளி விழா” கொண்டாடப் போகின்றார்கள்.
கல்லூரி வாழ்க்கையை நினைக்கும் போதெல்லாம், நல்ல சந்தோசமான நிகழ்ச்சிகள், அடித்த லூட்டிகள், கேலி, கிண்டல், விளையாட்டு என்றுதான் எப்பேதும் நினைவுக்கு வரும். இப்போதும் அதே நினைவுகள்தாம் அம்பிகாவுக்கு. கல்லூரியின் நுழைவு வாயிலை நெருங்கிவிட்டார்க்ள். நிறைய மாற்றங்கள். அங்கு இருந்த ஆலமரம் பெரிதாக வளர்ந்து விழுதுகளுடன் பரவியிருந்தது. மரத்திலிருந்து கல்லூரிவரை ரோட்டின் இரண்டு பக்கமும் வளர்ந்து கிடந்த முள்புதர்களை வெட்டி சைக்கிள் ஸ்டாண்டு கட்டியிருந்தார்கள். அதன் அருகில் பழய மாணவர்களை வரவேற்று பெரிய பேனரும், வருகை பதிவேடும் இருந்தன. பதிவேட்டில், அம்பிகா, அவள் மற்றும் குடும்பத்தினரின் விபரங்களை பூர்த்தி செய்தாள். பின்னர், கல்லுரியின் நுழைவாயிலை அடைந்தார்கள். வலது பக்கம் இருக்கும் திறந்த வெளியில் பந்தல், அலங்கார மேடை எல்லாம் போடப்பட்டிருந்தது. நுழைவாயிலிருந்து நேராக சென்றால் கல்லூரி முதல்வரின் அலுவலகமும் அதற்கு முன்பு பேர்ட்டிகோ. அதன் அருகிலேயே, எங்கும் பச்சை பசேல் என்று காட்சியாய் பூங்கா. பூங்காவின் கடைசியில் ஒரு புன்னை மரம். இங்கு இருந்து பார்தாலே தெரிகின்றது, புன்னை மரம் நன்றாக வளர்த்திருப்பது. அது அவளை பார்த்து “எப்படி இருக்கிறாய் அம்பிகா?” அன்று கேட்பதை உணர்ந்தாள். அம்பிகாவுக்கு, அவளைப் போலவே, புன்னை மரத்திற்க்கும் வயதகிவிட்டதாய் தோன்றியது. கடைசியாக, கல்லூரியின் கடைசி நாளில், அம்பிகாவும் அவனும் இந்த மரத்தடியில்தான் வெகுநேரம் பேசி கொண்டிருந்தார்கள். அப்போது, அம்பிகா, புன்னை மரத்திடம் சொன்னாள், “திருமணமானவுடன் உன்னை வந்து பார்ப்போம்” என்று. அவனும், ஆமோதிப்பது போல் தலையாட்டினான்.
அவன், அருண், வேதியல் வகுப்பு மாணவன். இவளின் சகமாணவன். அம்பிகா, அருண் இருவர் பெயரும் அகர வரிசையில் அடுத்தடுத்து வருபவை. வேதியல் கூடத்தில் அடுத்தடுத்த இருக்கைகள். அருண், ரொம்ப கலகல டைப். அம்பிகவுக்கு எதிர்மறை. அவன் பத்து நிமிடம் பேசினால், இவள் பத்து வினாடிதான். அதுவும் அவளாய் சென்று அவனிடம் பேசமாட்டாள். ஆனால், எதாவது சந்தேகம் இருந்தால் அவனிடம் கேட்பாள். அவன் மிகவும் இயல்பாய் பழகினான். இரண்டாவது செமஸ்டரில் ஒருநாள், சோதனை கூடத்தில் நடந்த மாதந்திர தேர்வில், “வேதியல் உப்பை” கண்டு பிடிக்க திணறிக்கொண்டிருந்தான். அருகிலிருந்த அம்பிகாவிடம் கேட்டான். இவனைப் பார்த்து முறைத்துவிட்டு, பதில் சொல்லாமல் திரும்பிக் கொண்டாள். பேசுவதை ஆசிரியை பார்த்துவிவார் என்ற பயம் அவளுக்கு. அருணுக்கு வேதியல் உப்பை கண்டும் பிடிக்கமுடியவில்லை, நேரமும் கடந்து விட்டது. சிறிய துண்டு காகிதத்தில் ஏதோ கிறுக்கினான். அம்பிகாவின் அருகில் வைத்துவிட்டு, கூடத்தைவிட்டு வெளியேறினான். பதட்டத்தோடு அந்த காகிதத்தை எடுத்தாள், அதில்
என்ன உப்பு ?
என்றுதானே கேட்டேன்
உன் பார்வையில்
ஏன் இவ்வளவு காரம் ?
என்று எழுதியிருந்தது. அதிலிருந்த அவனின் கோபத்தைவிட, அவளுக்கு அதன் கவிதை வரிகள் பிடித்திருந்தது. அவள் அதை ரசித்தாள். வகுப்பறையில் பார்த்ததும் கண்ணால் “சாரி” சொன்னாள்.
அவ்வப்போது கவிதை எழுதி காண்பிப்பான். அவனுடைய கவிதைகள் அவள் மனதுக்கு பிடித்துபோயின. மெள்ள, மெள்ள அவனையும் தான். நிறைய பேசினார்கள். பேசப் பேச பிணைப்பும் கூடியது. நிறைய நேரம் சேர்ந்தேயிருந்தார்கள். எல்லாம் இந்த புன்னை மரத்தடியில் இருக்கும் பெஞ்சில்தான். காதலும் புன்னை மரத்தோடு சேர்ந்தே வளர்ந்தது. கல்லூரியின் கடைசி நாளில், இனி கடிதத்தில் தொடர்பு வைத்துகொள்ளவும், அவனுக்கு வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்யவும் முடிவெடுத்தார்கள்.
நாட்கள் நகர்ந்தன. கடிதங்கள் குறுக்கும் நெடுக்குமாய் பரிமறப்பட்டன. இவள் வீட்டில் திருமணத்திற்கான ஏற்ப்பாட்டை ஆரம்பித்து விட்டார்கள். எதாவது காரணம் சொல்லி தட்டிக்கழித்தாள். அவனுக்கும் உடனுக்குடன் தெரியப்படுதினாள். எந்த பதிலும் இல்லை அவனிடமிருந்து. நீண்ட இடைவெளிக்குப் பின் வந்த கடிதத்தை ஆவலாய் பிரித்தாள். வருத்தப்படவா? அழவா? என்று தெரியாத குழப்பம். கடிதத்தில், அவன் தந்தையின் மரணம், குடும்பச்சுமை, மூன்று தங்கைகளின் திருமணம் எனறு பிரச்சனைகளை பட்டியலிட்டிருந்தான். காதலோடு காத்திருப்பதாய் கடிதமிட்டாள். வர வர கடித வரத்தும் குறைந்துவிட்டது.
அன்று பெண்பார்க்கவரும் வரன் குடும்பம் அவர்களுக்கு ஏற்றதும், பையனின் குணமும், வேலையும் ந்ல்லபடி அமைந்துள்ளதாயும் அப்பா சொன்னார். அம்மாவின் சுகவீனமும், வீட்டாரின் நிர்பந்தமும் அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது. சூழ்நிலைக்காக ஒத்து மணம் முடித்தாலும், காதலின் வலியையும் காயத்தையும் ஆழமாய் உணர்த்தாள். காலம் இட்ட மருந்தில் கொஞ்சம் கொஞ்சமாய் சுகமடைந்தாள். வடுமட்டுமே எஞ்சி நின்றது, நினைவாக. நல்ல கணவனும் பிள்ளைகளும் வாய்க்கப்பெற்றதை வரமாய் நினைத்தாள்.
” ஏய்......நீ, அம்பிகதானே? “ என்ற கேள்வி, இவளை நிகழ்காலத்துக்கு இழுத்துவந்தது.
“ஆமா, நீ .....பிரியா?!”
“எப்படி இருக்கிறாய்? ....இவர்தான், என் வீட்டுக்காரர்.......இவர்கள் இரண்டு பேரும் என் மகன்கள். மூத்தவன்..........”
ஒருவரை ஒருவர் குடும்பத்தை அறிமுகம் செய்துகொண்டனர். கொஞ்ச நேரத்தில், பெரிய கூட்டமே சேர்ந்து விட்டது. ஒரே அரட்டை கச்சேரியும், கலாட்டாவாயுமாய் இருந்தது. சிறிது சிறிதாக குடும்பதினர்களும் அரட்டையில் அங்கதினரானார்கள். அம்பிகாவின் கண்கள் அவ்வப்போது தேடின. அருண் வருவதாய்த்தான் சொன்னார்கள். கண்கள் மட்டும் இன்றி மனமும் தேடியது. அவனும் கல்யாணத்திற்க்கு பின் பெங்களுரில் இருப்பதாய், பல வருடங்களுக்கு முன்பு தோழி ஒருத்தி சொன்னது நினைவுக்கு வந்தது. பார்த்தால் என்ன நினைப்பான்?. என்ன பேச அவனிடம் ? கும்பத்தோடு வருவானா? அவன் குடும்பத்தில் எத்தனை பேர்? ......அடுக்கடுக்காய் கேள்விகள். தோழிகள், கல்லூரியின் கடைசி நாளிலிருந்து, கல்யாணம், கணவன், பிள்ளைகள் என்று கடந்த காலம் முதல் நிகழ்காலம் வரை ஒன்றுவிடாமல் நிகழ்ச்சி நிரல் போட்டு அளவாளாவினார்கள்.
அவன்தான் வந்துகொண்டிருந்தான். உடன் அவனது மனைவி மற்றும் மகள். அருகில் வந்ததும் எல்லோருக்கும் ”ஹாய்” சொன்னான். இவளுக்கும்தான். இருபத்தி ஐந்து ஆண்டகளுக்கு பிறகு அப்போதுதான் சந்திகிக்கின்றார்கள். ஒருவித பட படப்பு இவளுக்கு. இயல்பாய் இருக்க முயன்று தோற்றாள். அவனுக்கு காதோரம் முடிகள் நரைத்திருந்தன. சட்டை பாக்கெட்டில் கண்ணாடி இருந்தது. சோர்வாய் இருந்தான். பிரயாணக் களைப்பாக இருக்கலாம். அவன் மனைவியையும் மகளையும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். அருண், சொன்னான், தன் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்று. ஆனாலும், அருணின் மனைவி நன்கு கல கலப்பாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தாள்.
கல்லூரி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. யார் யாரோ பேசினார்கள். இவளுக்கு எதுவுமே காதிலும் விழவில்லை, மனதில் பதியவுமில்லை. அவனைப் பார்த்ததிலிருந்து மனம் இறுக்கமாயும், இதயம் கனமாயும் உணர்ந்தாள்.அவனோடு பேசினால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. ஒரு வழியாக நிகழ்ச்சிகள் முடித்தன. தேனீர் இடைவேளைக்கு பின், பழைய மாணவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்குமான கிரிக்கெட் போட்டி தொடங்குவதாய் அறிவிக்கப்பட்டது. அம்பிகாவின் கணவரும், மகன்களும் கிரிக்கெட் விளையாடச் சென்றுவிட்டார்கள். தனியாக இருந்தாள். வாழ்க்கையின் கடந்த காலநிகழ்ச்சிகள்தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அருண் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான். அங்கு இருந்த சேரில் அமர்ந்தான். மனைவிக்கு தலைவலி என்று காரில் ஓய்வெடுக்க மகளுடன் சென்றுவிட்டதாய் சொன்னான்.
இவளிடம், “எப்படி இருக்கிறது வாழ்க்கை?” என்றான். இவளுக்கு, பதில் சொல்ல முடியவில்லை. அவனும் பதிலை எதிர்பார்க்கவில்லை. ”வா காலேஜை சுற்றிப்பார்கலாம்” என்று அழைத்தான். பதிலே சொல்லாமல் உடன் சென்றாள். மௌனமாய் பேசிகொண்டே நடத்தார்கள். அவர்களின் கால்கள், இருவரையும் பூங்காவின் புன்னை மரத்தை நோக்கியே இழுத்து சென்றது. பழகியதின் நினைவுகள். பழய நினைவுகள் இருவருக்கும்.
மௌனதின் சத்தமே ஓங்கி ஒலித்தது. “ கவிதையெல்லாம் எழுதுகின்றாயா?” என்று அவள் தான் ஆரம்பித்தாள். அவன் சொன்னான்,
நடைமுறை வாழ்கையே
உரைநடையான பின்
கவிதையெல்லாம்
கனவாகிப் போய்விடும்
“அருமையான கவிதை. இன்னும் உன்னுள் அதே கவிஞன் உயிரோடு இருக்கிறான்” என்றாள்.
“ஆம், கவிஞன் இருந்து, காதல் செத்து என்ன பயன்?” இது அவன் பதில்.
மீண்டும் மௌனம், அவர்களிடையே. இப்போது மௌனம் பேசவில்லை, மௌனித்தது. புன்னை மரத்தை வந்தடைந்தார்கள். இருவரும், மரத்தையே பார்த்துகொண்டிருந்தார்கள். புன்னையும் இவர்களை பார்ப்பதாய் உணர்ந்தார்கள். அவனயும் அறியாமல் புன்னை மரத்தை தொட்டு வருட்டினான்.
”காதலை இங்குதானே
விதைத்து
நம் இதயத்தில் அல்லவா
புதைத்தோம்
ஒரு மரணத்திற்க்கு
இரண்டு கல்லரைகளா?”
என்று சொல்லி அவளை நோக்கினான். அவள் கண்கள் குளமாகியிருந்தன. இவனுக்கும் கண்கள் கலங்கின. முகத்தை மரத்தின் பக்கம் திருப்பிக்கொண்டான். புன்னையும் ஆயிரம் கண்களுடன் அழுதுகொண்டிருந்தது.