கல்லறைப் பூக்கள்


பூவில் தவறில்லை
பூத்ததில் பிழையில்லை
பூங்காற்று தழுவத்தான்
போதுமான பொழுதில்லை

பூத்ததும் சருகாக
பூமியில் பிறந்தேனா
மாலைக்குப் போகாமல்
மனதுக்குள் அழுதேனா

கண்ணீரும் ஆறாச்சு
கவலைகள் நூறாச்சு
ஆசைகள் ஒன்றாகி
அச்சிழந்த தேராச்சு

கண்ணீரில் மூழ்கினேன்
கடைத்தேற வழியில்லை
கடலுக்குள் மூழ்கி நான்
கரைசேர நினைத்தேனே

எண்ணம் பொய்யாச்சு
எண்ணியது வீணாச்சு
கண்ணீரில் மூழ்கிவிட்ட
கடலெல்லாம் உப்பாச்சு

எருக்கம் பாலெடுத்து
எனக்குக் கொடுத்திருந்தால்
எப்போதோ போயிருப்பேன்
இப்போது சுமையில்லை

கள்ளிப் பாலெடுத்து
கனிவாயில் இட்டிருந்தால்
கைப்பாடை போதுமே
கண்ணீரும் மிஞ்சுமே

எமனும் கேட்டானோ
என்னிடம் வரதட்சணை
மரண மாலை இட
மறந்தானோ தெரியலையே

ஊர்க்கனக்குப்பார்தவனே
உறவுக்கணக்கை தீர்த்தவனே
என்கணக்குப் பார்க்கமட்டும்
இத்தனைக் காலம் ஏன்

காலம் கடந்தாச்சு
கனவுகள் முடமாச்சு
சோடியில்லாக் குயிலுக்கு
சுடுகாடே சொர்க்கமாச்சு

மலராய் பிறந்தாலும்
மாலைக்கு ஏங்கினேனே
இரவுகள் கிடக்கட்டும்
இறப்பில் நான் உறங்குவேனா?!

எழுதியவர் : வெ.பசுபதி ரெங்கன் (19-Nov-11, 4:49 pm)
சேர்த்தது : vpasupathi rengan
பார்வை : 356

மேலே