அந்த ஒரு நொடி

மரகதத்திற்கு 53 வயதிருக்கும். தலை நிறைய பூவும், நெற்றி நிறைய குக்குமமும் சற்றே பருத்திருந்த தேகத்தில் சுற்றிருந்த சேலையும் அவளை மேலும் சிகப்பாக காட்டின.

அதிகாலை கோயிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் மரகதம்.

"பக்தி முத்தி விட்டது போல!" தன் கணவன் ரங்கராஜனின் கேலிப் பேச்சை காதில் வாங்காமல் சென்ற அவள் நடையில் ஒருவித வேகம் தெரிந்தது. நெடுநேரம் கழித்து திரும்பிய மரகதத்திடம் ரங்கராஜனும், மகன் குமாரும்
"இனி வெளியே செல்ல வேண்டாம்" என்று
கட்டளையிட்டுக் கொண்டிருந்தர்கள்.

ராத்திரி மணி எட்டாகி விட்டிருந்தது.
"சுதா, அத்தைக்கு இனுசிலின் ஊசி போட்டு விடும்மா!" மாமனாரின் கட்டளையை ஏற்று குளிர் சாதன பெட்டியிலிருந்து மருந்தை எடுத்து வந்தாள்" மரகதத்தின் மருமகள் சுதா.

இனுசிலின் ஊசி மற்றும் இன்னும் சில மருந்துகளையும் யந்திரத்துடன் உள் வாங்கி கொண்டாள், மரகதம்.

மரகததிற்கு சாப்பாடு எடுத்து வைத்தபடி கணவனிடம் கேட்டாள், சுதா.

ஏங்க, அத்தையை டாக்டரிடம் கூட்டிட்டு போங்க! எனக்கு பயமாக இருக்கிறது!!

"இன்று ஒரு பொழுது போகட்டும். ஸ்பெஷல் டாக்டர் நாளை மாலைதான் வருவார்." கணவனின் பேச்சை கேட்டபடி, தன் குழந்தையை கவனிக்க சென்று விட்டாள், சுதா.

மறுநாள் காலை சாப்பாடிற்கு பின், ரங்கராஜன் எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்தார்.

"டேய்! அம்மாவை பார்த்துக்கொள். நான் கதிரேசன் வீடுவரை போயிட்டு சாயந்தரம் வர்றேன்" என்றபடி நடந்த ரங்கராஜை மறித்தபடி மரகதம் நின்று கொண்டிருந்தாள்.

"உன்னை இன்னொருநாள் கூட்டிட்டு போறேம்மா! இன்னைக்கு நல்லா ஓய்வு எடு, சாயந்தரம் டாக்டரிடம் போகலாம்"

கணவனின் சமாதான பேச்சில் திருப்தி அடையாமல் மரகதத்தின் கண்கள் கண்ணீரில் பணித்தது.

மாலை வேலையும் வந்தது. நேரம் ஆக ஆக மரகதத்தின் தவிப்பு அதிகரித்துக்கொண்டிருந்தது.
கணவனின் பிரிவும், குடும்ப நண்பரின் வீட்டிற்கு செல்ல முடியாத இயலாமையும் அவளை வதைத்தது.

ஏதோ ஒரு சக்தி அவளை இழுக்க, மரகதம் சட்டென்று வெளியே செல்ல எத்தனித்தாள்.

குமார், அம்மாவை தடுத்து "எங்கே போரம்மா? " என்று கையமர்த்தினான்.

"அ-ப்-பா-வை பா-ர்-க்-க-ணு-ம்-டா!" மரகதத்தின் வார்த்தைகள் தெளிவில்லாமல் வந்து விழுந்தன!

"அப்பா வர்ற நேரம்தான்! நீ வெளியே போக வேண்டாம்" என்றபடி குமார், அழுது கொண்டிருந்த தன் குழந்தையை தொட்டியில்லிருந்து தூக்கினான்.

"சுதா! குழந்த எழுந்துட்டான் பார்!!", என்றபடி சமையல் அறை நுழைந்து குழந்தையை சுதாவிடம் கொடுத்துவிட்டு திரும்பினான்.

திரும்பிய அந்த ஒரு நொடியில், மரகதம் அவளுக்கான இடத்திலிருந்து மறைந்திருந்தாள்.

"அம்மாவை காணும்!" பதறிய குமாரை "கோயிலுக்கு போயிருப்பாங்க!!" என்று சமாதானப் படுத்தினாள் சுதா.

பத்து நிமிடமாகியும் மரகதம் திரும்பாததால், குமார் அம்மாவை தேட கிளம்பினான்.

அவன் அம்மாவை தேடி செல்லவும், ரங்கராஜன் விட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது. மரகதத்தை கண்களால் தேடுவதை உணர்ந்த சுதா, தயன்கீயபடி அத்தை, இவ்வளவு நேரமும் இங்கேதான் இருந்தார்கள். இவர் சமையலறை வந்து சென்ற ஒரு நொடியில்...., அத்தையை காணவில்லை. அவர் தேடிட்டு போயிருக்கார்." என்றாள்.

"எங்கே போயிருக்கப் போறா? கோயிலுக்குப் போயிருப்பா!! நானும் பார்த்து விட்டு வருகிறேன்" என்றபடி சென்ற ரங்கராஜனிடம் பதற்றம் தொற்றிக்கொண்டது .

நெடுநேரமாகியும் யாரும் திரும்பாததால், சுதா பொறுமையிழந்து, குழந்தையை தூக்கிக்கொண்டு கிளம்பினாள். இரண்டொரு தெரு தாண்டி நடந்தவள், ஒரு தெரு முனையில், தன் மாமனார் மிதிவண்டியில் வருவதைப் பார்த்தாள்.

"கோயிலில், அத்தையைக் காணும். நடந்து தேட முடியாது. அதான் வாடகைக்கு சைக்கிள் எடுத்தேன். ரெம்ப இருட்டிவிட்டது. நீ வீட்டிற்குப் போம்மா! அவள் பஸ் ஸ்டாண்ட் பக்கமாகத்தான் போயிருப்பாள். நான் போயி கூட்டிட்டு வர்றேன்" , என்றபடி சைக்கிளளை வேகமாய் ஓட்டியபடி அவள் கண்களில் இருந்து மறைத்தார், ரங்கராஜன்.

வீட்டிற்க்கு வந்த சுதா, பதற்றத்துடன் பல தெய்வங்களையும் வேண்டியபடி காத்துக்கொண்டிருந்தாள்.

மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

கதவு தட்டும் ஓசை கேட்டு ஆவலுடன் கதவை திறந்தாள், சுதா.

ரங்கராஜன் மட்டும் இறுக்கமான முகத்துடன் நின்றுகொண்டிருந்தார்.

"என்ன மாமா? அத்தை எங்கே? " சுதாவின் வார்த்தைகள் காதில் விழாதவராய், தளர்ந்த நடையுடன், கட்டிலில் பொத்தென்று அமர்ந்தார்.

சுதா, ஒன்றும் புரியாதவளாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சட்டென்று சத்தமாய் அழ ஆரம்பித்தார், ரங்கராஜன்.

" ஐயோ ! என் மரகதத்தை காணோமே !! அவளை தொலைப்பதற்க்கா அங்கு போனேன். கோழி குச்சு போல இத்தனை வருசம் பொத்தி பாதுகாப்பா வச்சிறிதேனே. இப்படி ஒரு நொடியில் தொலைப்பதர்க்கா?

அட கடவுளே! , அவளுக்கு பேரு, ஊரு சொல்ல தெரியாதே! ஒரு வேளை பசி தாங்க மாட்டளே. கடலில் ஊசி போட்டு தேடுவதைப்போல, எங்கே தேடுவேன்? அவளை!! " - மன நிலை சரியில்லாத தன் மனைவியை தொலைத்த அதிர்ச்சியில், தலையில் அடித்துக்கொண்டு , அழும் தன் மாமனாரைப் பார்த்து, சிலையாக உறைந்தபடி நின்றிருந்தாள், சுதா!

எழுதியவர் : உஷா (30-Nov-11, 11:15 pm)
பார்வை : 1280

மேலே