நிராகரிப்பு
ஏம்மா தினமும் எனக்கு மாத்திர தர?
எய்ட்ஸ் உனக்கென்று எப்படி சொல்வது
என்னவெனக் கேட்டால் என்னவென்று சொல்வேன்?
காய்ச்சல் வரக்கூடாதுல்ல அதுக்குத்தான்
பாட்டு நல்லா படிச்சா
கன்னத்தில் முத்தம் தரும் பவானி டீச்சர்
நா பாடினா மட்டும்
சிரிப்போடு நிறுத்திக்கிறாங்க ஏம்மா?
என்னோட விளையாட கூடாதுன்னு
கணேஷ் அம்மா சொன்னங்களாம்
தொட்டா நோய் ஒட்டிக்கிடுமோ?
எல்லாரும் ஒன்னா சாப்பிடைல
என்கூட மட்டும் யாரும் இல்ல
என்ன தப்பு நா செஞ்சேன்?
வேணுமுன்னு இழுத்துக்கல
வேண்டாத பயபுள்ள
ரத்தத்தால வந்ததடா
ஊமை கண்ணீர் வடிச்சப்படி
உண்மைய எப்பிடி எடுத்துரைக்க?
பாவி என் வயித்தில் பொறந்ததால
சாபக்கெடு வந்திருச்சு
ஆத்தா காளியாத்தா நீயாவது எடுத்து சொல்லேன்
எங்கள ஒதுக்கவேண்டாமுன்னு