நான் செய்த சப்பாத்தி
அன்று அக்கா,மாமா வர
இருந்தனர்.எத்தனை நாட்கள் ஆயிற்று ஒன்றாக கூடி.இரண்டு நாட்கள் முன்பே கூறி விட்டதில் அன்றிலிருந்தே ஒரே பரபரப்பு என்னில்.அதை சரிசெய்,இதை மாற்று,அங்கே வைக்காதே அதையும் வைக்காதே என்று ஒரே ஆர்ப்பாட்டம் மனதில்.இரண்டு நாளாய் சரிசெய்து மீண்டும் கலைத்துவிட்டதற்காய் அவருடன் வேறு மெளனம்.அதுதான் தொலைகிறது என்று திரும்பினால் மதியம் நெருங்கிவிட்டது. மாலையில் வரவேற்க வேண்டும்.
11:59-
எழுந்ததிலிருந்து யோசித்து-பழைய சாதத்தை சேமித்து காலை சிற்றுண்டிக்கு தாளித்து மிச்சமிருந்த கோபத்தை தாளிட்டு... பயத்தம்பருப்பு மசாலா சப்பாத்தி செய்வதென திட்டமானது.தேவையான பொருட்களை முதலிலேயே தேடி வைத்துக்கொண்டால் பின் கடைசிநேர சிணுங்கல் இராது என்று பயத்தம்பருப்பு,கோதுமை மாவு வெங்காயம், மிளகாய்,மசாலாத்தூள்,உப்பு எடுத்து வைத்தால் பொட்டுக்கடலை 'பாட்டில்' 'கடலுக்கு திரும்பிவிட்ட அலை போக நுரை'யாய் என்னை நோக்கியது. மற்றவற்றை தயார் செய்வதற்குள் ஒருநடை போய் இவரை வாங்கி வரச் செய்தால் போயிற்று என்றால் மிச்சமிருந்த கோபம் வேறு தாள்திறந்தது.யோசிக்க நேரமில்லை. செல்லலாம் என்று மாடியறையை அணுகுகிறேன்.
அடைத்த கதவுக்குப்பின் வீரம் காட்டி"என்ன" என்கிறார்.என் மெளனத்தை கதவால் திறந்தால் ...அரசர் முன் தருமியைப் போல் நிற்கிறேன்.
12:30-
வாசல்மணி அடிக்கிறது.பரபரப்புடன் திறந்து,கையை நீட்டுகிறேன்-காரியத்திலே குறி என நினைத்து விடக்கூடாதென படி தா...ண்டுமட்டும் பொறுத்துப்...பெற்று கொள்கிறேன்.பொட்டுக்கடலையுடன் தேவையான அளவுகளை எடுத்து வைத்துவிட்டு,மதிய சமையலை கவனிக்கிறேன்.சாம்பார்,ஒரு பொறியல் என முடிக்க 01:30 ஆகிவிட்டது.இனி இன்னொருமுறை சென்று கவிபாட வேண்டி இருக்...இல்லை சாம்பார் வாசனையே பரிசில் பெற முன் செல்ல இறங்கி வருகிறார் இதோ...
02:30-
முடிந்தது உணவு கதை.இப்பொழுதே சாமானையும் கழுவிவிட்டால் முடிந்தது வேலை என அதை இழு..த்துப்போட்டு முடிக்க 02:45 ஆகிவிட்டது.சன் டிவியில் என்ன படம் என்று பார்க்க ஆரம்பித்து பல சேனல்களை மாற்றி வந்ததில்தான் தெரிந்தது அதில் மனம் பதியவில்லை!? மீண்டும் சன் டிவியில் முடிக்கும்போது வாசல்மணி அடித்தது. மணி 4:15.இது பால்காரி!
04:30-
மேலிருந்து அப்பொழுதுதான் இறங்கி வந்த அரசர் டிவி-முன் கொலுவீற்றார். இனி உங்கள் பாடென்று'வழக்கை'அவர்முன் வைத்தேன்; எனதறைக்கு நகர்ந்து - கையில் கிடைத்த புத்தகம்.ஞாயிற்றுகிழமையும் அலுவலகம் திறந்திருக்கலாம் அவருக்கு என்று ஞானோதயம் வேறு.
05;00-
ஏதோ நினைவுக்கிடையிலும்'இந்த புத்தகத்தில் ஒன்றுமே இல்லைபோல'தோன்றுகிறது கடைசி பக்கத்தையும் மற்றதைப்போல புரட்டிவிட்டு.அதை வைத்துவிட்டு அடுத்து சமையலறையை எனதாக்குகிறேன்.சூடான காபியை அவர்முன் வைத்துவிட்டு அடுத்து விருந்தாளிகளுக்குமாடியறையில் படுக்கையை மீண்டும் சரிபார்த்து(கொசுவர்த்திச் சுருள் வைத்து),திரும்பி வந்து தயார் செய்கிறேன்'முருங்கைக்காய்-கேரட் ராய்த்தா' நல்ல 'சைட் டிஷ் 'என்று.
06:00-
'ஹாலில் சத்தம் கேட்கவில்லையே,மேலே சென்றுவிட்டாரோ?ஆமாம்,'அவர்கள்முன் இப்படித்தான் கவிழ்ந்துவிடப்போகிறது கர்நாடக அரசை போல.அதைப் பற்றி நம் அர்சருக்கென்ன அவர் ஆட்சி நடந்தால் போதும்'.
'சரி,இதென்ன வீண் யோசனை?எதற்காகவோ சண்டை போட்டுவிட்டு-உப்பை கவனிக்க வேண்டும்.'
சப்பாத்திக்கு மாவை பிசைந்து வைத்துக் கொண்டு,பயத்தம்பருப்பை குக்கரில் வேகவைக்கிறேன்.
06:45-
அடுத்து வெங்காயத்தை எடுத்துக் கொண்டு உட்காருகிறேன் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ள.'இதற்கு முன்னென்றால் ஏதோ சாக்கிட்டு அழைத்துக் கொண்டு கோயில்வரை சமாதானப்படுத்திக் கொண்டே சென்றார்.இரண்டு நாட்களில் ஒரு நகையும் (ஹாஹா...)கிடைத்தது.ஒவ்வொரு முறையும் அதையே நினைத்துக் கொள்ள முடியுமா?இந்த முறை இன்னொன்று வாங்கித்தராவிட்டால் ஒப்பக்கூடாது.ஆகா!இன்னும் கோபிக்கலாம் போல!சரி சரி இன்றைய கதை என்ன?'
06:50 -
யோசனையூடே வெங்காயத்தைப் பார்த்தால்-தெரியவில்லை! அட கண் கலங்கிவிட்டது. என்னதான் செய்கிறாரோ தனியே! மீண்டும் தெரியவில்லை இந்த வெங்காயம்.இந்தமுறை கண்ணீரால் இல்லை!?..
06:51-
தலைசுற்றல்.மயக்கமா? -இங்கே விழுந்து யாருக்குத் தெரியும்?எழுந்துவிட வேண்டும். மாடியில் அவர்-அங்கெப்படி சொல்வது?எழவே முடியவில்லை,சென்றுபின் சொல்ல...முடியாது; முடியாது போலிருக்கிறதே! அக்கா,மாமா,இவர்... எதையோ செய்ய வேண்டுமே?..
06:52-
எழுந்து நின்றால் கைபட்டு பாத்திரம் விழுந்துவிட்டது.எங்கிருந்தோ வந்து சேர்ந்தார்.ஆச்சரியம்தான் எனக்கு-அவர் கைகளில் நான்.கடைசியான வார்த்தை "கேஸ் கே...ஸ்!"
08:45-
ஸ்ரீராம் மருத்துவமனை- "இதற்காகவா இவ்வளவு ஆர்ப்பாட்டம், ஸார்? சரி; அழைத்து செல்லுங்கள். இனிப்பு எங்கே?",புன்னகைத்து விலகுகிறார் அந்த நடுத்தர வயது நர்ஸ்.பின்னோடே சென்று டாக்டரிடம் விசாரித்துவிட்டு வந்தார்.புன்னகையுடன் அருகில் அமர்ந்து கொண்டார்.செல்போனில் மாமாவைத் தொடர்பு கொண்டு, இரவு தங்குமாறு கேட்டுக்கொண்டார். அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்.செல்போனை வாங்க-சில நிமிட விசாரிப்புகள்.கவலையுடன் இரவு உணவிற்கான செய்முறை விளக்கம்"வேகவைத்த பயத்தம் பருப்பு,கோதுமை மாவுடன்..."
செல்போனை அணைத்தவுடன் குனிந்து வாங்கிக்கொண்டு கள்ளச்சிரிப்பு வேறு."எப்படி அங்கே வந்து சேர்ந்தீர்கள்?", ‘ காலையிலிருந்தே உன்னுடைய அசைவுகளை தொடர்ந்து கொண்டுதானிருந்தேன் ‘ என்கிறார்.அட கோபம் எங்கே போயிற்று? இருந்தாலும் இந்த சிணுங்கலுக்கும் இன்னொரு நகை நிச்சயம் உண்டல்லவா?இரண்டு நாட்கள் பொறுப்போம்...
சக்தி..
12.01.08.