எம்ரி மருத்துவமனை தீ விபத்து
எம்ரி மருத்துவமனை 9th டிசம்பர்
திரவம், குருதி சுமந்த எண்ணற்ற குழாய்கள்,
கருவிகளின் முட்கள் படபடக்க பிராணவாயுக் கலன்கள் பல,
சுவரோர கடிகாரம் நிசப்தமதை நிலைக் குலைக்க,
மேசையதில் தாதியவள் வேறுலகத்தில் சஞ்சரிக்க,
பணிபுரியும் ஏவலரும் போதையில் நினைவிழந்து,
மருத்துவமனை எமரியின் இருதய பிரிவதனில்,
சாவை தடுக்க நான் பாடுபட்டு படுத்திருந்தேன்;
கதவின் கீழிருந்து கருவண்ண புகையது,
காலனின் கயிறு போல என்னோக்கி வருகிறதே!
நெஞ்சம் படபடக்க உரத்தக் குரலில்
தாதியை அழைக்க நான் முயல,
தனித்து நான் இருந்தேனோ என,
குரலது எனை விட்டகல மறுத்தெதிர்த்து,
சன்னலது திடீரென மின்னல் போல் ஒளி வீச,
தப்பி ஒளிந்த எனை அந்த காலன் கண்டு கொண்டானோ என,
அஞ்சி பரபரத்து குழாய்களை பிடித்திழுத்து
எழ நான் முயற்சிக்க, காலனவன் கருணையுடன்,
"இவ்விடமே நரகம் மற்றும் என்னுலகம் சொர்க்கம் என"
அன்புடனே அழைத்து சென்றான்;
சம்பத்