பெண்ணே!!

கற்பு என்றால்
கண்ணகி என்றாய்
உன் பெயர் இல்லையா?
அந்த பட்டியலில்!

உற்றுஉற்று பார்க்கிறான் - என்று
உண்மைதனை மறைத்தாயே!
மனசாட்சியை கேட்டுப்பார்
அவனை உறுத்துவது யார் எனச் சொல்லும்

பெண்களுக்கு எதிரியல்ல - நானும்
பெண்புலிக்கு பிறந்தவள்தான் - இப்போதும்
பெண்ணியம் தான் பேசுகிறேன்
பெண்மைதனை எடுத்துரைக்க!

அயல்நாடு சென்றிடுவோம்!
அங்குள்ள நாகரீகம் படித்திடுவோம் - என்
பெண்ணல்ல இவளென்று
பெற்றோரே சொல்லும் அளவல்ல!

அனைத்து மொழிகள் கற்றிடுவோம்!
தமிழ் மொழியில் பேசிடுவோம்!
அந்நியனாய் எவனும் வந்தால்
அக்னியால் சுட்டிடுவோம்!

திருமணமும் செய்திடுவோம்!
கணவனயே காதலிப்போம்
ஒரு குழந்தை பெற்றிடுவோம்
பெற்றால் தான் பிள்ளையா? - இன்னொன்று
தத்துக் கூட எடுத்திடுவோம்!

படிப்புடன் பண்பினையும் கொடுத்திடுவோம்!
வீரத்துடன் பகுத்தறிவும் ஊட்டிடுவோம்!
அன்பொன்றே சிறந்ததென
அதன் வழி நடக்க செய்திடுவோம்!

அடுப்படியில் ராஜாங்கம்
அறுசுவையும் சமைத்திடுவோம்!
என் ராஜாத்தி பெண்ணென்று
மறுஅன்னை(மாமியாரை) சொல்ல வைப்போம்!

கூட்டுக்குடும்பம் தனில் வாழ்ந்து
சொந்தங்களோடு சிரித்திடுவோம்!
நிறை குறைகள் எதிலும் உண்டு
அதை நட்போடு சரி செய்வோம்!

சீதை என நீ இருந்தால்
தீக்குளிக்க தேவையில்லை!
முண்டாசு கவி சொன்ன
முறைப்பற்றி வாழ்ந்திடுவோம்!

கணிணி மட்டும் கல்வியென்ற
கருத்துதனை மாற்றிடுவோம்!
விவசாயம் அதில் சேர்ந்து
வருங்காலத்தை பலம் செய்வோம்!

தாய்மை மட்டும் பெண்ணல்ல
தாய்நாட்டிற்கும் வளம் சேர்ப்போம்!
அரசியலில் நுழைந்திடுவோம்
அசிங்கங்களை களைந்திடுவோம்!

ஏழைகளும் மனிதரென
எடுத்துணர செய்திடுவோம்!
எளியவர்க்கு வேலை தந்து
இலவசங்கள் அழித்திடுவோம்!

விண்வெளியும் சென்றிடுவோம் - அங்கும்
விருந்தோம்பல் தனை செய்வோம்!
ஆடவர்க்கு நிகரெனவே
அனைத்தையுமே கற்றிடுவோம்!

காலடித் தடம் பதிக்க
கடல்தாண்டி சென்றிடுவோம்!
விதிவிலக்கும் சிலர் உண்டு - அவர்களை
விடைப்பெறவே செய்திடுவோம்!

சிவனின்றி சக்தியில்லை
எனும் கருத்தில் நாட்டமுண்டு
தோழமையுடன் நீ இருந்தால்
தோல்விக் கூட சீண்டாது!

பெருநிம்மதி எனக்குண்டு
உங்களில் நானும் ஒன்றென்று
பெண்மையினை எடுத்துரைக்க
நல்ல சந்தர்ப்பம் இதுவென்று!

எழுதியவர் : உமா ராஜ் (12-Dec-11, 11:44 am)
சேர்த்தது : umaraj
பார்வை : 225

மேலே