சோறு வேண்டாம் – வேலை வேண்டும் !
இலை முழுக்க பதமாய்நீர் தெளித்திட்டு,
இடப்புறம் உப்பினை ஒருகரண்டி அளவிட்டு,
இனிப்பினை மனதார வலப்புறம் வைத்திட்டு,
இனிய பலசுவைப் பொறியல் கூட்டிட்டு,
இளஞ்சூட்டுக் குழம்பை வெண் சோறிலிட்டு,
இதமாய்ப் பின்னர் தயிர்சாதம் உண்டு
இளைப்பாறும் ஒருசுகம் எந்நாளும் கிடைக்க
இரக்கமுடன் ஒருவேலை தந்தால் நன்று !
இந்த விழாச்சோறும் வேண்டாம் – ஏனென்றால்
இதேபோல நாளைக்கும் எங்குமென் நெஞ்சு,
இதையெனக்குத் தரவந்த தங்களுக்குச் சொல்கிறேன்
இதயத்திலிருந்து ஒரு மன்னிப்பும் நன்றியும் !
இச்சை உண்டு உனக்கு உதவ – ஆனால்
இதர காரணங்கள் இடம்தரவில்லை மன்னித்துவிடு !
இருந்தும் மனமில்லை இப்படியே அனுப்ப,
இம்சையென எண்ணாதே, என்வேண்டும் கேளென்றேன் ?
இங்கே குப்பைத்தொட்டி இடம் காட்டுங்கள்,
“நாய் வரும்முன்னே நான்செல்ல வேண்டுமங்கே” என
சொல்லிவிட்டு மறைந்தே விட்டான்..!!