இந்த புத்தாண்டையாவது இருப்பில் வைப்போமா .... ??
இதோ .......
இன்னும்
சற்று நேரத்தில்
இன்னொரு ஆண்டின் துவக்கம்..
அதே பழைய மனிதர்கள்....
ஆண்டுகள் மட்டும்
புதிது,புதிதாய்..
மூக்குகண்ணாடியை
தள்ளிவிட்டுக்கொள்கிற
போதெல்லாம்
கைகளில்
வீசும்
புதினாசட்னியின்
வாசத்தை
புறந்தள்ளிவிட்டு....
எப்போதும்போலவே
நாளைக்கும்....
”என்ன இழவுடீ
சமைய’லென்று
பெண்டாட்டியை
பழிப்பீர்கள்........
எதற்கும்
எரிந்துவிழும்
அப்பாவை
பார்க்கிறபோதெல்லாம்
எப்பொழுதாவது
”எதிர்த்தவீட்டு
மணியின் அப்பா”மாதிரி
நம்மோடு
ஸ்நேகமாவார்
நம் அப்பாவும்
என்கிற
நம்பிக்கையில்
பாடப்புத்தக மயிலிறகாய்
ஏக்கங்களை
பத்திரப்படுத்தி
வைக்கும்
உங்களின்
குழந்தைகள்......
இரவு
முழுதும்
தூங்கவிடாமல்
இருமிக்கொண்டிருக்கும்
வயதான
அப்பாவை
தெய்வமாக்குவீர்கள்
”சனியனே”யென்று...
குளிருக்கு
துவங்கமறுக்கும்
மோட்டார்வாகனத்தை
தாறுமாறாய்
உதைக்க
கட்டைவிரல்
நகம்
பெயர்ந்துபோனதில்
’’அம்மா”வென்று
அழைப்பீர்கள்
வாய்நிறைய
இறந்துபோனபிறகாவது.....
அலுவலகத்தில்
சகாக்கள்
யாருமே
உங்களைபோல்
வேலை செய்வதில்லையென்று
அரை மணி நேரமாக
புலம்பிக்கொண்டிருப்பீர்கள்
தொலைபேசியில்
யாரோடோ....
உங்களின்
மேஜைமீது
ஆறுமாதமாக
காத்திருக்கும்
ஓய்வூதிய கோப்பில்
அழிந்துபோயிருக்கும்
அனுப்பியவரின் பெயர்....
சாலையில்
அடிபட்டுக்கிடக்கிறவனை
ஒருகணம்
உற்றுப்பார்த்து
”தனக்கு தெரிந்தவர்
இல்லை”யென்ற
நிம்மதியில்
வேகமாக
நகர்வீர்கள்
ரயில் பாலம்
மூடிவிடுவானோவென்ற
அவசரத்தில்
எப்பொழுதோ....
யாருக்கோ ......
செய்த
ஆயிரம் ரூபாய்
உதவியை
ஆயிரம் முறையாவது
சொல்லி, சொல்லி
நூறு ரூவாய்
கைமாற்று
கேட்டுவந்த
நண்பரிடம்
”இப்போ ரொம்ப
சிரம”மென்று
மறுத்துக்கொண்டிருப்பீர்கள்....
எப்படியும்
எப்படியும்...
நீங்கள்
மாறுவதுமில்லை...
மாறப்போவதுமில்லை..
ஆண்டுகள்
மட்டும்
மாறி, மாறி
ஆவதுதான் என்ன.... ?
இதயச்சன்னல்களை
இறுக்க
அறைந்து மூடியாயிற்று....
உறவுப்பாலங்களை
எதில்
இணைப்பது.....
ஒட்டடையில்தானே...???
கடந்துபோன ஆண்டுகளை
கழித்துவிட்டு...
இந்த புத்தாண்டையாவது
இருப்பில் வைப்போமா .... ??
கொஞ்சமே
கொஞ்சம்தான்
மாறுவோமே.....
கதவுக்குபின்
தலையை நீட்டி
மெல்ல
எட்டிப்பார்க்கும்
குழந்தையை
பார்த்து
கண்சிமிட்டுங்களேன்..
கை நீட்டிக்கொண்டு
பறந்து வருகையிலே..
மேகமாய் மிதக்கும்
உங்கள் மனசு.....!!!!