!!! காதலியைத்தேடி ஒரு காதலன் !!!

அதிகாலை நேரம்
மார்கழி மாதம்
உடம்பை உலுக்கும் குளிரில்
வீதியில்
நடந்து சென்றேன்
அவள் வீட்டை தேடி...
எல்லோருடைய வாசலிலும்
தண்ணீர் தெளித்து
அழகாய் பெருக்கி
வண்ண வண்ண கோலங்கள்
போடப்பட்டு இருந்தன...
சிலர் கூட்டமாக சேர்ந்து
கோலம் போட்டுக்கொண்டும்
இருந்தனர்...
இதோ ஒரு
கோலத்தில் கண்டுபிடித்துவிட்டேன்
என்னவளை...
அழகான புள்ளிகளில்
நேர்த்தியான கோடுகளால்
இணைக்கப்பட்ட ஒரு
பூக்கோலம் அதன்
மத்தியில் மாட்டு சாணியை
திரட்டி வைத்து அதில்
அழகாய் குத்தி
வைக்கப்பட்டிருந்தது
ஒரு பூசணிபூ.....
புள்ளிகளில்
அவள் கண்கள்...
கோடுகளில்
அவள் விரல்கள்...
மாட்டு சாணியில்
அவள் கைரேகைகள்...
பூசணிபூவில்
அவள் முகம்...
கோலத்தில்
அவள் வாசணை...
சந்தேகமே இல்லை - என்
தேவதை வாழும்
கோவில் இதுதான்...
அம்மா கொஞ்சம்
பிச்சை போடுங்க - என்று
கேட்க்க தோன்றியது
ஆனால்!
அவளைத்தவிர வேறு
யாராவது
பழைய சோற்றோடு
வந்துவிட்டால்
என்ன செய்வது
என்ற அச்சத்தில்
அவள் போட்ட கோலத்திற்கு
காவலாய் என்னை
அங்கேயே விட்டுவிட்டு - நான்
வெறுமனே
வீடு சென்றேன்...!!!