அடையாளம் என்ன
விதைகள் முளையிடும் போது அறியாது
அவை விருட்சங்கள் ஆகுமென்று
பிறக்கையில் யாருக்கும் தெரியாது
நாம் என்னவாகப் போகிறோமென்று
எங்கிருந்து எதற்காக வந்தோம்
இங்கிருந்து எங்கு செல்வோம்
தங்கு தடையின்றி பயணம்
தீங்கும் நன்மையும் அறிந்தும்
அடையாளபடுத்த ஏதுமில்லை
அடையாளங்கள் அடையாளமிழக்கும்
நாம் அறியப்படுவது எச்சங்களால்
நம்மோடு வராத மிச்சங்களால்
இலை தழை மலர் காய்கனி வேர்
நிலையாக இல்லங்கள் தாங்கும்
நிலைகள் ஜன்னல்கள் மரசாமான்கள்
விலைமதிப்புமிகு அகில் சந்தனம்
நாமும் வாசம் செய்யலாம் பலர் மனங்களில்
விட்டுச் செல்லும் வாசங்களால்
ஆவேசமும் பொறாமையும் துவேஷமும்
வாழ்வில் என்றும் அர்த்தமில்லாதவை
வாழ்க்கை நமக்கு கற்று தருபவை-என்றும்
அன்பும் நட்பும் வாழ்வில் சுவையானவை