சில ஹைக்கூ கவிதைகள்

 இனித்தது
கரும்புக்குள்ளிருக்கும்
உழவனின் வியர்வை.


 புன்னகை செய் பூமியே
உன்னை புகைபடம் பிடிக்கிறது
பளிச்சென மின்னல்.


 தலைக்கணம் மிகுந்தவன்
அழிந்துபோவான்
தீக்குச்சி.


 முன்னேற்றம்தான்
பின்னோக்கி சென்றாலும்
கயிறு திரிப்பவன்.


 மசூதியின்மேல்
இளைப்பாறுகிறது
கோயில்புறா.


 தொட்டாலும் விரிகிறது
தொட்டா சுருங்கி
தொடுவது அவள்.


 சுற்றிலும் முட்கள்
நடுவில்ரோஜா
வெற்றி.


 தலைகுனிந்ததுதானாக வேண்டும்
மாடி வீட்டுக்காரன்
குடிசையை பார்க்க.


 புதுவருடம்
காலண்டர் மாற்றப்பட்டது
ஆணிமட்டும் அப்படியே.


 ஒரே விலங்கில் பிணைக்கப்பட்டிருக்கும்
கைதியும் காவலனும்
சரி தண்டனை யாருக்கு?


 சமுதாயத்தை தலைநிமிர்த்தியது
எழுதுகோல்
தலை குனிந்து.


 சின்ன ஓட்டையில்
பிரபஞ்சமே தெரியும்
ஹைக்கூ


 சோகமான கவிதை
மைதீர்ந்து போன
பேனா.


 மழை வருகிறது
எங்கேயாச்சும் ஒடு
வயற்காட்டு பொம்மையே.


 என்ன திட்டடினாலும்
கூடவே ஓடிவரும்
நிலா.


 எதிர்காலம் சொல்லும்
ஜோசியக் கிளியே!
உன் விடுதலை எப்போது.


 "பணக்காரனாவது எப்படி? "
புத்தகம் விற்கிறான்
ஏழைச்சிறுவன்.


 கிழிந்த இதயங்கள்
முறிந்த சிறகுகள்
அன்பின் சின்னங்கள்.


 பூமிக்கட்டிலின்
ஒரே கால்
மனிதன்.


 காலைக்கழுவாமலே
கடற்கரையை விட்டு திரும்புவார்
மனது எப்படி நனையும்?


 பரணில் போடப்பட்ட
கைராட்டையில்
சிலந்தி வலை.


 கைகள் பின்னி
சோம்பல் முறிக்குமவள்
நரம்புகளறுபடுமெனக்கு.


 ஒல்லியாய்தான் இருந்தது
பெயர் என்னவோ
குண்டூசி.


 தாத்தாவின் கம்பீரத்தை
இன்னும் நினைவுபடுத்தும்
தேக்கு மரக்கட்டில்.


 இன்று
நாளை மாறும்
நேற்றாய்.


 பஞ்சு மெத்தை
முள்ளாய் குத்தியது
மனைவியின் பிரிவு.

 பாமரன் வரைந்த
மாடர்ன் ஆர்ட்
கைநாட்டு.


 அதில் கூடுகட்டாதே கருவியே!
கொன்றுவிடப் போகிறார்கள்
ஆளுங்கட்சி கொடிமரம்.


 விசா இல்லாமலேயே
வெளிநாடு போனது
பறவை.


 புதைந்துபோன விதையின்
சரித்திரம் சொல்லும்
முளைத்துவரும் செடி.


 கடற்கரையில் யாருமின்றி
வீனாய் போனது
அலைகள்.


 பூவிலிருந்து இதழ்களல்ல
இதழ்களிலிருந்து உதிரும் பூக்கள்
புன்னகை.


 எத்தனை கவிதை உதிர்ந்ததோ
வெள்ளைப் புறாவின்
சிறகடிப்பில்.


 வெள்ளைநிறத்தை இழத்ததும்
கருப்பானது தேசம்
பாபர் மசூதி.


 டெக்ஸ்டைல் சைன்சே
கைகட்டி பிரமிக்கும்
சிலந்திவலை.


 சும்மாதான் கிடக்கின்றன
கூண்டுக்குள் அடைபட்ட
கிளியின் இறக்கைகள்.


 எந்த கான்வெண்டில் படிக்கிறது
மூட்டை சுமந்துபோகும்
இந்த நத்தை.


 பட்டணத்தில் ஆளானயெங்கள்
பழங்கதையை சொல்லும்
பரண்மேலிருக்கும் டிரங்குபெட்டி.


 நேற்றைய மழையில்
குளமான பள்ளம்
அட . . . மீன்கள் எப்படி?


 வந்து போவதை தவிர
வேறு வேலையே இல்லையா
அலைகளே.


 வார்த்தையை மாற்றுங்கள்
ஒட்டாமாலே போகிறது உதடுகள்
காதலென சொல்லும்போது.


 நேற்று புதைந்தது
இன்று புதையலாய்
கவிதை.


 தலைகுனிந்தே கிடக்கும்
தண்ணீர் குழாய்கள்
பயன்படாமல் போன வருத்தம்.


 தாயின் முகம்
பேயின் நகம்
மதம்.


 ஓயாமல் எதையாவது
கத்திக்கொண்டே இருக்கும்
ரேடியோவும் அப்பாவும்.


 விழுந்து செத்தது
சித்தெறும்பு
விரும்பி குடித்த தேனிலேயே.


 உதவும் மனது
ஒழிந்து போனதோ
கேரியரில்லாத சைக்கிள்.


 பாவம்
மழையில் நனையும்
குடை.


 வியாபாரம் இல்லாமல்
அலுத்துக்கொள்ளும் கடிகார கடைக்காரர்
"சே நேரமே சரியில்லை".


 நடுக்கடலில் புயலாம்
சேதி சொல்ல வருகிறது
அலை.


 இறந்தவன் கட்டியிருந்த
கை கடிகாரம்
டிக். டிக்.. டிக்...



 கோடுகள் போட்டு
வானத்தையும் பிரித்தான்
ஜெட் விமானம்.


 மதுக்கடை நோட்டுகளில்
இயலாமையால் சிரிக்கும்
மகாத்மா.


 பருவ பள்ளிக்கூடத்தில்
கவிதை ஆசிரியர்
காதலி.


 சாத்தி கிடக்கும் கதவுகள்
வாசல்கோலம் சொல்லும்
"நல்வரவு"

 எத்தனை முகம் தாங்கியும்
முகமிழக்காமல்
கண்ணாடி.


 உதிர்கிறேனென்பது உண்மைதான்
ஆனால் சருகாயல்ல
விதையாய்.


 வேலை கிடைத்தது
"வேலை காலியில்லை"
போர்டு எழுத.


 மதங்கள்தோறும்
மாறி மாறி பிரசாரம்
மூச்சு திணறும் கடவுள்.


 கட்டை விரல்முதல்
சுண்டு விரல்வரை
குடும்பம்.


 எரிந்து சாம்பலான குடிசை
உள்ளே இருக்கும்
குடம் குடமாய் தண்ணீர்.


 காகித நிலத்தை உழுது
(க)விதை விதைக்கும் கலப்பை
பேனா.


 பட்டபகலில்
இரவை நினைவுபடுத்திகொண்டிருக்கும்
நிழல்.


 புழுக்கமாயிருக்கும்
நீர்க்குமிழிக்குள்ளிருக்கும்
காற்றுக்கு.


 திருட்டுபயமோ
வீட்டையும் கொண்டுபோகிறது
ஆமை.


 கண்ணாடியாய் கவிதை
உள்ளே தெரிந்தது
சமுதாயம்.


 என்னவரம் வேண்டி
ஒற்றைக்கால் தவம்?
பரந்த மணலில் பனைமரம்.

 துணியாலான
வெள்ளைத் திரையில்
துணியின்றி நடிகை.


 எழுந்து நின்றிருக்கும் நான்
நீளமாய் விழுந்து கிடக்கும்
என் நிழல்.


 உதறாதே பேனாவை
ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு கவிதை.


 என்ன குற்றத்திற்காய்
கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறாய்
ஜோசிய கிளியே!


 புடம்போடப்படும் தங்கம்
பட்டை தீட்டப்படும் வைரம்
தோல்விகள் பழகும் மனிதன்.


 பெயர் பொருத்தம் சரிதான்
உயிரை கத்தரித்தது
சிசர் சிகரெட்.


 நாட்களை விழுங்கி கொண்டே போகும்
தினமும் தோலுரித்து கொள்ளும் பாம்பு
சுவரில் தொங்கும் காலண்டர்.


 துவைக்கப்படாமல்
அழுக்கு மண்டி கிடக்கிறது
வண்ணானின் வாழ்க்கை.


 தேன்குடிக்க வந்து
உட்கார்ந்து ஏமாறும் வண்டு
விரைப்பாக நிற்கும் பிளாஸ்டிக் பூ.


 மக்களிடம் ஏன் கையேந்துகிறான்
மந்திரத்தால் பணம்வரவைத்த
தெருவித்தைக்காரன்?


 ஜாக்கிரதையை உணர்த்துவது
நமக்கா? நாய்களுக்கா?
"நாய்கள் ஜாக்கிரதை" போர்டு.


 ஆனந்தத்தில் குதித்து குதித்து
முன்னால் ஓடிவரும் அலைகள்
கடற்கரையில் நிற்கும் அவள்.


 உள்ளங்கைக்குள் உலகம்
சின்னதாய் நின்று சுழலும்
ஹைக்கூ.


 புத்துணர்ச்சி எப்படிதரும்
புது உடையே என்றாலும்
ஈமச்சடங்கு வேஷ்டி.


 யார் வரைந்தது
பட்டாம்பூச்சி இறக்கைகளில்
மாடர்ன் ஆர்ட்.


 வீட்டுக்குள் செல்லவே
பயமாய் இருக்கும்
வாசலில் அப்பாவின் செருப்பு.


 வெற்றித்தோல்விகள் குறித்த
தராசு நிறுத்தல்
ஒடிந்துப்போகும் நான்.


 முதுகு வளைந்து
சம்மட்டி அடிக்கிறான்
கம்பியை நீட்ட.


 ஏய்! காலைக்கழுவாதே அதில்
இந்த நதியில்தான் கரைத்திருக்கிறேன்
என் அம்மாவின் அஸ்தியை.


 கொடுத்து வைத்த குடும்பம்
அழுகையற்ற வாழ்க்கை
டிவியில்லா வீடு.


 கூண்டுக்குள் அடைபட்டு கிடக்கும்
இனிமையாய் பேசிய கிளி
அட கிளியும் வாயால் கெடும்.


 எத்தனை சுருக்கங்கள்
இஸ்திரி செய்யும்
கிழவனின் முகத்தில்.


 நிழல் - குளிர்ச்சி
நெருப்பு - சூடு
நெருப்பின் நிழல்?


 திருடிகொண்டு திரும்புகையில்
கடைவாசலில் தொங்கும் போர்டு
"நன்றி மீண்டும் வருக".


 எத்தனை சோகங்களோ
எத்தனை சந்தோஷங்களோ
தபால் பெட்டிக்குள்.


 கருப்பாய்தான் இருக்கிறது
தரையில்படிந்த நிழல்
சிகப்பு மனிதருக்கும்.


 கவிதையெழுதினேன்
சின்னக்குழந்தையின் கண்ணத்தில்
முத்தம்.


 மரம் வெட்டும் கோடாரியின்
கைப்பிடியாய் இருக்கும்
மரம்.


 சீரான பாதை
கரடுமுரடான பயணம்
நகர வாழ்க்கை.


 பார்த்து ரசிக்கிறோம்
பக்கத்திலேயே உட்கார்ந்து
தொலைக்காட்சியை.


 மாறிமாறி வரும்
பகலும் இரவும்
சபாஷ் சரியான போட்டி.


 பிரிந்து போகும் பிள்ளைகளை
எரித்தே அனுப்பும்
தீப்பெட்டி.


 அலங்காரம் செய்து கொள்ளுமவள்
மெருகேறிகிகொண்டே போகும் அழகு
பொறாமை கொள்ளும் கண்ணாடி.


 நேற்று எடுத்துபோன செருப்பை
கொண்டு வருமா
அலைகள்?


 வாழ்க்கை புத்தகம்
இரண்டே வார்த்தைகள்
பிறப்பும் இறப்பும்.

 அதிகாரிகளின் நெற்றியில்தான்
தொங்கவேண்டுமிந்த போர்டு
"தினமும் என்னை கவனி".


 காற்றுக்காதலன் உரசல்
மேகப்பெண்ணின் கண்ணீர்
மழை.


 நிகழ்காலமென
உச்சரித்த நொடிகூட சேர்ந்துவிட்டது
இறந்தகால கணக்கில்.


 பகலில் விரிக்கப்பட்ட
சின்னஞ்சிறிய இரவு
குடை.


 அணிகலனா? அறிவிப்பு மணியா
காட்டி கொடுக்கும்
கால் கொலுசு.

 காதலின் கண்ணாமூச்சு
தேடித்திரியும் எனக்குள்ளேயே
ஒளிந்து சிரிக்குமவள்.


 அழகானயெதையும்
கண்ணில் காட்டாதீர்கள்
நினைவில் வரும் அவள்.


 வருத்தம் கொள்ளச் செய்யும்
வறண்ட என் வாழ்க்கை பூமி
நீர்ச்சுனையாய் கிளம்பும் நீ.

 ஆறறிவும் ஐந்தறிவும்
மூர்க்கமாய் மோதிக்கொள்ளும்
ஜல்லிக்கட்டு.

 காற்றிலா கரைகிறது
நாளுக்குநாள் இந்த கற்பூரம்
நிலவு.

 துருத்தி நிற்கும்
இளமையின் முத்திரை
சதைப்பந்துகள்.

 விர்ரென்று பாய்கிறது
நரம்புகளில் மின்சாரம்
தயவு செய்து கண்களை மூடடி.

 காதலர் பூங்கா
கை வைப்பாள் அகலிகை
கல்லாவான் ராமன்.

 என்ன யாசிக்கின்றன குளங்கள்
திருவோடுகளை ஏந்தி?
அடடே தாமரைகள்!


 மரமாய் விரிந்திருக்கும் உலக வரைபடம்
கிளையாய் படர்ந்திருக்கும் இந்தியா
தேன்கூடாய் தொங்கும் இலங்கை.


 எந்த மரங்கொத்தி
இப்படி கொத்தி சென்றதோ
செதுக்கப்பட்டிருக்கும் காதலியின் பெயர்.

 கருப்பு நிறத்தில்
இரண்டு வானவில்
புருவங்கள்.

 கொத்தாமல்
தயங்கி திரும்பும் மரங்கொத்தி
பெயர் செதுக்கிய மரம்.

எழுதியவர் : சுந்தரபாண்டி (16-Jan-12, 3:16 am)
பார்வை : 1953

மேலே