நீ என்ன செய்வாய்.? . பொள்ளாச்சி அபி

இங்கு
கற்பிக்கப்பட்டதே
அனைத்துமானது..!

எப்படியெனில்
பூனைகளின் மேல்
பிரியமாயிருந்த
வாத்தியார் ஒருவர்
பிள்ளைகளுக்கு
சொல்லித்தரும்போது
குறுக்காய் அலைந்து
குறுக்கீடு செய்த
பூனைக் குட்டியை
பாடம் நடத்தும்போது
தான்,அமரும் நாற்காலியில்
கட்டிவைத்தார்.

காலம் உருண்டோடியது
காலனோடு அவர்
கலந்துவிட்டார்.

பொறுப்புக்கு புதிதாய்
அவர் மகன் வந்தார்.
வந்த முதல் நாள்
எனக்கு ஒரு பூனைக்குட்டி
வேண்டும் என்று கேட்டார்.
அது எதற்கு..?
பெற்றோர்கள் வினாத் தொடுக்க
என் தந்தையைப் போல
எனது நாற்காலியில்
அதனைக் கட்டிவைக்கவேண்டும்
என்றானாம்..

அப்படித்தானிருக்கிறது
நாம் கற்றுக் கொண்டதும்..!
வரலாறும் தெரியவில்லை
புவியியலும் புரியவில்லை
அறிவியலுக்கும் நமக்கும்
அறவே ஆகாது..!
வகுப்புக் கணக்கே தவறாய்
போடும்போது-இவன்
வாழ்க்கைக் கணக்கை
சரிசெய்யத் தெரியுமா..?

மிச்சமிருப்பது மொழி
ஒன்றுதான்..!
அதனையென்ன செய்வாய்.?

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (28-Jan-12, 4:02 pm)
பார்வை : 260

மேலே