கவிதைகொண் டினியும் வெல்வேன்!
கடைவிழி காட்டும் செய்தி
கருத்தினில் இன்பம் சேர்க்கும்
இடைவெளி காட்டும் செய்கை
எதுவுமே இனிமை கூட்டும்;
தொடைநயம் காட்டும் பாக்கள்
தூக்கலாய்த் தோன்றும்; உங்கள்
நடைநயம் அறிந்த பேர்க்கு
நட்பு,மெய் இன்பம் தோய்க்கும்!
எழுதிநான் அனுப்பும் எல்லாம்
எங்குதான் போகு மாமோ?
முழுதுமே ஒதுக்கி வைக்க
முடிவதும் எங்ஙன் ஆமோ?
தொழுதுமே வேண்டத் தானோ?
துவண்டுமே வீழத் தானோ?
வழுவிடுத்து உதவி யாக
வார்த்தைகள் சொல்ல இன்றோ?
நம்பிக்கை தளர மாட்டேன்!
நல்லநாள் வரத்தான் செய்யும்!
வெம்பிக்,கை சோர மாட்டேன்!
வேண்டுதல் நிறுத்த மாட்டேன்!
தும்பிக்கை ஒன்றைக் கொண்டே
தூசினை, உணவைக் காற்றைக்
கம்பமா தேடிக் கொள்ளும்!
கவிதைகொண் டினியும் வெல்வேன்!
< † >