உயிர் இறைவன்
அண்டத்துக்கு எல்லாம் ஒருவனே தலைவன்
அண்டத்தைக் காட்டிலும் உயர்ந்த இறைவன்
அனைத்தையும் ஆளுகின்ற ஒரே சக்தி
அவனை அடைந்திட செய்க பக்தி
ஆயிரம் ஆதவன் தருகின்ற ஒளி
ஆனந்தம் தருகின்ற இறைவனின் விழி
ஆகாயத்தைத் தாண்டியும் விரிந்து நிற்பவன்
ஆழ்கடலின் ஆழத்தையும் கடந்து நிற்பவன்
இருக்கிறான் இறைவன் எல்லா இடத்திலும்
இதையே சொல்வர் எல்லா மடத்திலும்
இதயத்தில் உணர்ந்திடு இறைவன் இருப்பதை
இன்றுடன் நிறுத்திடு இருப்பதை மறுப்பதை
ஈசனும் அவனே ஏசுவும் அவனே
ஈர்க்கும் கண்ணுடைய புத்தனும் அவனே
ஈர நெஞ்சுடைய அல்லாவும் அவனே
ஈரேழு உலகத்தில் எல்லாமும் அவனே
உதவுதல் பிறருக்கு இறைவனை வணங்குவது
உனக்கும் அவ்வாறே உதவிகள் வருகிறது
உள்ளத்தில் இருக்கின்ற அறியாமை இருளை
உதறிட பெற்றிடு இறைவனின் அருளை
ஊழ்வினை அவனே ஊர்வன அவனே
ஊற்றும் அவனே காற்றும் அவனே
ஊரும் அவனே உலகமும் அவனே
ஊக்கமும் அவனே ஏக்கமும் அவனே
எல்லா மதத்திலும் கூறப்படும் உண்மை
எல்லாரும் மதித்தால் ஏற்படும் நன்மை
எதுவும் இல்லை இறைவனைத் தவிர
எதையும் நம்பாதே இவ்வுண்மையைத் தவிர
ஏதுமறியா பச்சிளங் குழந்தையாய் பிறந்து
ஏகப்பட்ட பகுத்தறிவுடன் முதியவனாய் இறந்து
ஏழு பிறவிகளிலும் சாமியை உணராது
ஏன் சுழல்கிறாய் பூமியில் அயராது
ஐயம் கொள்ளாதே தெரியவில்லையே என்று
ஐயமில்லை இறைவனை நம்பினால் நன்று
ஐயமில்லா நம்பிக்கையை கண்களாய்க் கொள்வாய்
ஐயனின் உருவத்தை எளிதாய் காண்பாய்
ஒழுக்கம் முதலிய உயரிய பண்பு
ஒருவருக்கும் தீமை நினையா அன்பு
ஒருமுறை இறைவனை உணர்ந்தால் வரும்
ஒருவரும் பெற்றிடாத பேரின்பம் தரும்
ஓதும் மந்திரத்தின் அர்த்தமாய் இருக்கிறான்
ஓடும் இயந்திரத்தில் எதார்த்தமாய் இருக்கிறான்
ஓயாமல் உழைத்தாலும் இறைவனை அடையலாம்
ஓர் மனதாய் நினைத்தாலும் இறைவனை அடையலாம்
- கலைசொல்லன்