அம்மா

அம்மா ஐயிரண்டு திங்கள் அங்கமெல்லாம்
நொந்து என்னை ஈன்று எடுத்தாய்.
அன்பைக் கொட்டி அரவணைத்து
ஆதரித்தாய்.
நல்லறிவு புகட்டி நானிலத்தில் நான்
ஆசிரியராய் விளங்கும் வண்ணம்
வளர்த்துவிட்டாய்.
நற்பண்புகளைப் புகட்டி பேரும்
புகழும் பெறச் செய்தாய்.
நான்கு குழந்தைகளை ஈன்றும்
நால்வராலும் அவர்களின் வாழ்க்கையாலும்
ஒருநாளும் மகிழ்ந்தாய் இல்லையே....
நல் வாழ்க்கைத் துணை என்று நம்பி
என் இனிய வாழ்க்கையைத் தொலைத்த போதும்
மகளே கலங்காதே காலம் மாறும்
கனவு பலிக்கும் என்று ஆறுதல் மொழிந்தாய்.
உன்னைக் கொண்டவன் உனக்கு
இழைத்த பலப் பலக் கொடுமைகளைப்
போராடி முறியடித்தாய்
நானறிந்து ஒருநாளும் மனதார
மகிழ்ச்சி எய்தி மனம் விட்டு சிரித்தாயில்லை
கண்ணீரையே கண்டாய் பரிசாக உன்
வாழ்நாள் முழுதும்
மாற்றார் துயர் களைய மறுமொழி கூறாமல்
மனமுவந்து உதவி செய்ய முன்வந்தாய்
காது கேட்க்க வில்லையே என்ற
கவலையிலும்
கேட்ட காலத்தில் நாங்கள் இசைத்த இசையை
நினைத்து நினைத்து உள்ளம் உருகினாய்
அன்ன நடை பயிலும் உன் அழகிய
கால்கள் முடக்கு வாதத்தால் முடங்கியபோதும்
நான் நடப்பேனா? கடைக்குச் சென்று
விதவிதமான பொருட்கள் வாங்கி
வகை வகையாய் உணவு சமைத்து
என் குழந்தைகளுக்கு வூட்ட மாட்டேனா?
என்றாயே?
உன்னை மகிழ்விக்க இல்லத்தையே
ஒரு கலைக் கூடமாக்கி பாடி ஆடி
களிப்பூட்டினோம்.
ஆனால் உன் மனச் சுமையை இறக்க
மருந்தேதும் அறிந்திலோம் அம்மா
விஜயா சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானைப் பார்க்க வேண்டும் எனக்
கூறினாய் நான் அதற்க்கு
அம்மா நீஏன் இத்தனை உடல் உபாதைகளுடன்
அவனக் காண அங்கு செல்ல வேண்டும்
இதோ அந்த சிதம்பரேசனை நீஇருக்கும்
இடத்திற்கே அழைத்து வருகிறேன் என்று
கூறி சின்னத் திரையில் அவனைக்
காண்பித்தேன்
அன்னையே என்னால் இயன்ற வரை
உனக்கு வேண்டியவைகளை
இயற்றினேன்
படுத்தபடியே என்மடியில் உன் வைர விழாவாகிய சதாபிஷேகத்தையும்
கண்டு மகிழ்ந்தாய் முடியா நிலையிலும் கூட
அந்தகன் வரும்போது அவனியில் யார்துணை
என்று பாடுவாய்
உன்னைச் சுற்றி நாங்கள் மூவரும்
இருந்தோம்
ஆயினும் அத்திருடன் (அந்தகன்) தைரியம்
இல்லாதவன் பேடி
எங்கள் கண்களைக் கட்டி உன்னைக்
கட்டிக் கொண்டு போனானே அம்மா
எங்கள் கண்ணீரின் வலியறியாதவன்
எங்கள் மன வேதனையைத் தாங்கும்
வலிமையற்றவன் கோழை
உன்னை எங்களிடமிருந்து பிரித்து விட்டதாக
எண்ணி இறுமாப்புடன் இருக்கிறான்
பைத்தியக் காரன்
எங்கள் ஊன் உடம்பு யாவும் எங்கள் உள்ள உணர்வு யாவும் எங்கள் உலகமே நீதான்
என்று அறியாதவன்
அவனிடம் நான் சவால் விடுகிறேன்
அடேய் மடையா என் உள்ளில் உள்ள
ஒவ்வொரு நாடி நரம்பிலும்
என் உடம்பில் ஓடும் குருதியிலும் என் உணர்வுகளாய்
என் மூச்சாய்
என் பேச்சாய்
யாவுமாய்த் திகழும்
என் அன்பு அன்னையை
நான் இவ்வுலகை விட்டுச் செல்லும் வரையில்
என்னிடமிருந்து யாராலும் பிரிக்க இயலாது
என் நினைவுகள் என்னை விட்டு நீங்கும்
வரை என் அன்னையை அங்கிருந்தும்
உன்னால் திருட முடியாதடா என்றேன்.
ஆம். நான் கூறியது முற்றிலும் உண்மை .
என் அன்னை என்னை விட்டு எங்கும்
செல்லவில்லை செல்லவும் முடியாது.
செல்ல நானும் அனுமதி தரமாட்டேன்.
அம்மா இவ்வுலகோர் உனக்கு திதி செய்கின்றனர் நீ இல்லை என எண்ணி
நானே நீயாக இருக்கும்போது. (என் உள்ளத்தில்)
என்னே அவர்கள் அறியாமை.
அம்மா அம்மா அம்மா கூக்குரல் இட்டு
அழைக்கிறேன் .
புன்முறவல் பூக்கிறாய் புகைப்படத்திற்குள்
இருந்து. பார்ப்பவர்க்கு புகைப் படம்.
எனக்கோ .............அம்மா அம்மா அம்மா