ஒத்தையடி பாதை

கால்கள் வரைந்த
ஓவியம்

அடிமேல் அடிவைத்து
கால் அடிமேல் அடிவைத்து
அடிபிரலாமல்
போடப்பட்ட ஓரடி நெடுஞ்சாலை

கால்நடையாய் போவவனும்
கால்நடை மேய்ப்பவனும்
நடந்து போகும் தினம்
கடந்து போகும் ஒத்தையடி பாதை

காடுமேடு எங்கும்
கால்கள் நீட்டி
நீட்டி படுத்துருக்கும்
கைகளை நீட்டி கூப்பிட்டாலும்
எழுந்து வராது

வயது வந்த பெண் போல்
வளைந்து நெளிந்து
வயலோடு நாணப்பட்டு
வெயிலோ மழையோ
மண்ணோடு கிடக்கும்

காலோடு ஒட்டி
கதைகள் சொல்லும்
மண் வாசம் வீசி
வீடு வரை வரும்

நிழலுக்கும்
மழைக்கும்
மரம் குடை பிடிக்கும்
புற்களும் பூக்களும்
வழிவிட்டு படர்ந்திருக்கும்

மழைவெள்ளம் வந்தாலும்
கரைந்து போகாது
மந்திரிகள் போட்ட
பாலம் போல்
இடிந்தும் விழாது

காலம்காலமாய்
பல கால்கள் சேர்ந்து போட்டது
தடம் மாறினாலும்
தயங்காமல் போகலாம்
இந்த கிராமங்களை இணைக்கும்
ஒத்தையடி பாதையில்....

எழுதியவர் : பாலமுதன் ஆறுமுகம் (8-Feb-12, 4:47 pm)
பார்வை : 521

மேலே