இளந்தலை வங்கிகளுக்கு..! [49 ]

செய்வன திருந்தச் செய்யும்
சிந்தனை உளத்து வேண்டும்!
மெய்வருந் திடஉ ழைக்கும்
மேன்மைநீ ஏற்க வேண்டும்!
போய்வரும் போது கண்டு
புனைந்துரை களைதல் வேண்டும்!
கைவரும் செயல்கள் தேர்ந்து
கடிவினை முடிக்க வேண்டும்!

ஐய நின் அடிக்கண் ஏவல்
அறிந்துசெய் பவரி டத்தும்
பையவே பேச வேண்டும்!
பண்புடன் உறுதி சேர்த்தே
ஐயமில் குறிப்புக் காட்டி
அவருடை நன்மை கேட்டுச்
செய்வதில் தயக்க மில்லா
செயலினில் ஒங்க வேண்டும்!

தானையர் போலில் லாத
தலைவனென்று உன்னைத் தானே
ஏனையோர் கருதும் வண்ணம்
ஏற்புடன் நடக்க வேண்டும்!
வானவர், தொழிலைக் கூட்ட
வந்தவர், என்றே எண்ணி
மானமும் பரிவும் காட்டி
மதிப்புடன் நடத்த வேண்டும் !

அண்டினோர் இடத்தே யன்றி
அறிவகை இல்லார் ,வங்கி
கண்டிலா ரிடத்தும் சென்று
கனிவுடன், சேமிக் கின்ற
பண்டமும் விரித்துக் கூறிப்
பணமவர் கொடுக்கப் 'பெற்றுக்
கொண்டவன் வைப்பு'ச் சேர்க்கும்
கொள்கையன் ஆதல் வேண்டும்!

உள்ளிடை ஊர்க்கண் கேட்டும்
உரைமொழி தெரியத் தேர்ந்தும்
தெள்ளிய வகுப்பால் கேட்ட
தேவையை அளந்தும் பின்னர்க்
கொள்வான ஈடாய்க் கொண்டும்
கொடுப்பான அளவில் நல்கும்
உள்ளமும் உவக்கக் காட்டி
உறுதொழில் வளர்க்க வேண்டும்!

கிளர்ந்துஎழு! சோர்வு அறு! கிளைநடத் திடுஉடன்
வளர்ந்தெழு! வாமனன் மாநிலம் அளந்தவாறு
இளந்தலை வங்கிகள் இனிவரும் நாட்களில்
ஒளிர்ந்திடும்!உயர்ந்திடும்உடன்வரும்இறையருள்!

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (11-Feb-12, 7:06 am)
பார்வை : 181

மேலே