உடையாத அணை நம் ஒற்றுமை
இன்னா நைனா துணிய
யேன் ஊட்டு சொவர்ல காய வைக்கியே..?
எடுத்துடு சும்மான்னாச்சி பேஜாரு பண்ணாதே..!
இன்னாத்துக்கு நான் எடுக்கோணும்
எனக்கும் பங்கு இருக்குதுப்பா......
சும்மா நீயி கத்தாமே ஓரமா குந்து......!
பக்கத்து வீட்டுக் காரனோடு
படுபயங்கர சண்டை போட்டோம்
பொதுச்சுவர் பங்கு புரியாமல்
பொறுமை இன்றி காரி உமிழ்ந்தோம்...!
போட்டான் பக்கத்து நாட்டுக் காரன் குண்டு
பொதுச் சுவரோடு பொணமாய் எல்லோரும்
மனித நேயம் செத்துவிட்ட பிறகு
மார் தட்டா விட்டால் என்ன ஒற்றுமை என்று
செப்பு மொழி பதினெட்டுடையாள் என்றானே
செந்தமிழ் வீரக் கவிஞன் - நல்லவேளை
சென்று விட்டான் இன்று அவன்- இல்லையேல்
சிங்கநடை தொலைத்திருப்பான் இந்தச்
சின்னப் புத்தி மாந்தர் கண்டு....!
ஒற்றுமை தொலைத்தாயே தமிழா
ஒன்றும் இல்லாமல் போகப் போகிறாயோ
உடைப்பான் உன் ஒற்றுமை அணையை அவன்
உள்ளத்தால் இனியாவது நீ ஒன்று படடா