[72] பாரத விடியலில் பாரதி..(கூட்டணிக்கு ஒரு அழைப்பு !)

வீர சுதந்திரம் வேண்டி நின்றாய் -நாங்கள்
வேறொன்று கண்டோமோ? -மொழி
கூறி நிற்பார் நாட்டைக் கூறிடுவார் -அந்தக்
கூட்டம் தவிர்க்கிலமோ?

புகழுநல் லறமுமே யன்றிஎல் லாம்வெறும்
பொய்யுரை என்றனையே -நாங்கள்
இகழுறு செயல்கள் எண்ணிடார் தமையே
இருக்கையில் வைத்தோமோ?

பிறந்தவ ரெல்லாம் இறப்பதன் பெற்றியைப்
பேசி நீ சென்றாயே! -நாங்கள்
இறந்தபின் சந்ததிக்கு எண்ணிலாச் செல்வமே
இருந்திட வாழ்வோமோ?

மானிடப் பிறப்புமே பெருவதற் கரிதெனும்
மாண்பினைப் பாடினையே! -நாங்கள்
ஊனுடல் விற்றுமே உறவுகட் காகவே
ஊரினைச் சுரண்டுவமோ?

விண்ணிடை இரவியை விற்றுவிட் டாலினி
விடியலுக் கென்ன செய்வோம்? -நாங்கள்
மண்ணிதில் இருப்பதை, மக்களைச் சுரண்டுவோம்,
மாற்றிதற்கு உண்டு மோ சொல் ?

மண்ணினின் பங்களை விரும்பியே சுதந்திர
மாண்புகள் பேசி னோம்தான்!
கண்ணிரண் டும்விற்றுக் கஞ்சிக்கு நிற்பவர்
கண்டுளே கூசி னோமோ?

வந்து ,ஏ மாற்றுவோம் என்றுதான் கூவினோம்!
வாய்ப்புகள் தேடி நின்றோம்!
தந்தனர் மக்களும்! தன்நிறை வுக்குத்தான்
தவிக்கிறோம் ! உழைக்கி றோமே!

வந்திடு பாரதி! வாக்குகள் கேட்கலாம் !
வாய்ப்புகள் கிட்ட லாமே!
இந்தவோர் பாரத விடியலை யும்தான்
எடுத்திட ஒட்ட லாமே!
-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (16-Feb-12, 9:25 pm)
பார்வை : 220

மேலே