[92] எம் கோல், எழு(த்)துச் செங்கோல் ஆகுமோ?

கனவுகளைப் பாடிடவோ கவிதை? - நடப்பைக்
கண்பொத்தி மூடிடவோ கவிதை?
நினைவுகளில் மயங்கிடவோ கவிதை? -தெரு
நிழலோரக் கடைச்சரக்கோ கவிதை?

'புருடல்கள்' அளப்பதுவோ கவிதை? - நாளும்
'பொய்'விதைத்தோ 'மெய்'யறுக்கும் கவிதை?
நெருடல்கள் மறைப்பதுவோ கவிதை? -ஒளியை
நெருப்பென்றே அணைப்பதுவோ கவிதை?

எங்கோல் எழுது செங்கோல் ஆயின்

துங்கக் கல்வியும் துட்டுக்கு விற்குமோ?
மங்கித் தமிழும் மதுக்கடை நிற்குமோ?
பொங்கி, மது, குடி புழக்கடை ஓடுமோ?
சங்கம் முழக்கிச் சாதிகள் ஆடுமோ?
வங்கத் தமிழராய் வாழ்ந்தவர் மாய்வரோ?
சிங்கம் இறக்குமோ ? சிறுநரி ஆளுமோ?

எங்கோல் எழுது செங்கோல் ஆயின்

எங்கும் எதிலும் இலஞ்சம் இருக்குமோ?
இங்குளோர் இலவயம் எங்கென அலைவரோ?
பொங்கு ஏர் உழவரும் பொழுதுமே மடிவரோ?
அங்கம் விற்பவர் அழகுற வாழ்வாரோ?
தங்கம் உயருமோ? தாயினம் தாழுமோ?
பங்குபோட்டு ஆளுவோர் பாரதத்து இருப்பாரோ?
திங்களும் பாடித் தினவுகள் தீர்க்கவோ?

எங்கோல் எழுது செங்கோல் ஆகிட
இங்கு இச் சங்கிலி இனி,அறப் போகுமே ?
உங்கள் குழந்தைகள் உவப்புடன் வாழுமே?
எங்கணும் உலகினில் ஏற்றமே காணுமே!
எங்கள் எழுத்துச் செங்கோல் ஆகுமே!
எங்கள் எழுத்துச் செங்கோல் ஆகுமே!
-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (21-Feb-12, 8:32 pm)
பார்வை : 319

மேலே