கோவிலுக்கு ஏன் போக வேண்டும்?.. இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன கதை இது.

ஒரு ஊரில் இராமு, சோமு என்று இரு நண்பர்கள் இருந்தார்கள். இருவருமே மிக நெருங்கிய நண்பர்கள். எல்லா நேரங்களிலும் சேர்ந்தே இருப்பார்கள். ஒரே ஒரு நேரத்தைத் தவிர. இராமுவுக்கு இறைபக்தி கொஞ்சம் அதிகம். அதனால் எப்போதும் கோவில், குளம், சமயப்பேருரைகள் என்று செல்ல விரும்புவான். சோமுவுக்கோ தெய்வபக்தி இருந்தாலும் இராமு அளவிற்குக் கிடையாது; எப்போதும் திரைப்படம், கேளிக்கை என்று வாழ்க்கையை உல்லாசமாகக் கழிக்க வேண்டும்; ஒரு நாளைக்கு ஒரு முறை இறைவன் திருவுருவப் படத்தின் முன்பு நின்று ஒரே ஒரு நிமிடம் இறைவனை வணங்கினால் போதும்; எப்போதும் என்னை வணங்கிக் கொண்டே இரு என்றா இறைவன் கேட்கிறார்? என்று நினைப்பவன். இந்த விதயமாக இருவர் நடுவிலும் விவாதங்கள் வந்து கொண்டே இருக்கும்.

ஒரு முறை இராமு கோவிலுக்குச் செல்கிறேன் என்று சென்ற நேரத்தில் சோமு அன்று வந்த ஒரு புதிய திரைப்படத்திற்கு சென்றான். கோவிலுக்குச் சென்ற இராமு திருச்சுற்றைச் சுற்றி வருகையில் கல்லில் தடுக்கி கால் விரலில் அடிபட்டு குருதி வந்து நொண்டிக் கொண்டே வீட்டைச் சென்று அடைந்தான். சோமுவோ திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்த பிறகு வீட்டிற்கு வரும் வழியில் தெருவில் ஒரு பத்து ரூபாய்த் தாளைக் கண்டெடுத்து மிக மகிழ்ச்சியாக வீட்டை அடைந்தான்.

மறுநாள் இராமு நொண்டிக் கொண்டே வருவதைப் பார்த்து சோமு என்னவென்று விசாரித்து அறிந்து கொண்டான். உடனே கேலியாக 'பார்த்தாயா உன் கடவுள் உன்னைக் காப்பாற்றியதை? நீ திரைப்படத்திற்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டுக் கோவிலுக்குச் சென்றாய். நானோ திரைப்படத்திற்குச் சென்றேன். உனக்குக் காலில் அடி. எனக்கு பத்து ரூபாய் லாபம். இதிலிருந்தே தெரியவில்லையா எப்போதும் சாமியைக் கும்பிடனும்ன்னுத் தேவையில்லைன்னு. உன் சாமி அடடா இவன் நம்ம பரமபக்தன்னு உன்னை அடிபடாம பாத்துக்கிட்டாரா? இல்லையே? நான் கோவிலுக்கு வரலைன்னு என்னைத் தண்டிச்சாரா? இல்லையே? எனக்கு பரிசு தானே கொடுத்தார்?' என்று கேட்டான். இராமுவுக்கும் சோமு சொல்வது சரியாகத் தான் பட்டது. ஆனால் இறைவன் தன்னைக் கைவிட்டுவிட்டான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குழப்பத்துடன் ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டான்.

சில நாட்கள் சென்றது. அந்த ஊருக்கு ஒரு பெரும் புகழ் பெற்ற சோதிடர் வந்தார். அவர் ஜாதகத்தைப் பார்த்து உள்ளதை உள்ளபடியே எடுத்துச் சொல்வதில் வல்லவர் என்று பெரும் பெயர் பெற்றிருந்தார். சோமுவுக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம். இராமுவுக்கு அதில் நம்பிக்கை உண்டு; இல்லை என்ற எந்தச் சார்பும் இல்லை. சோமு அந்தச் சோதிடர் பொய்யானவர் என்பதை நேரடியாகச் சென்று சோதித்து நிறுவிவிட வேண்டும் என்று எண்ணி இராமுவையும் வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.

சோமுவும் இராமுவும் தங்கள் ஜாதகங்களை எடுத்துக் கொண்டு சோதிடரிடம் கொடுத்துப் பலன்களைக் கணிக்கச் சொன்னார்கள். அந்த ஜாதகங்கள் தங்கள் ஜாதகங்கள் என்று சொல்லவில்லை. முதலில் இராமுவுடைய ஜாதகத்தை எடுத்தச் சோதிடர் சிறிது நேரம் ஆராய்ந்து விட்டு ஒன்றும் சொல்லாமல் அதனைக் கீழே வைத்துவிட்டார். பின்னர் சோமுவுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் பார்த்துவிட்டு 'இந்த ஜாதகம் ஒரு கோடீஸ்வரனுடையது' என்று தொடங்கினார். இதனைக் கேட்ட நண்பர்கள் இருவருக்கும் சிரிப்பு தாங்கவில்லை. அவர்கள் சிரிப்பதைப் பார்த்து என்ன என்று கேட்டச் சோதிடரிடம் சோமு 'ஆமாம். அந்த இன்னொரு ஜாதகத்தை ஏன் கீழே வைத்துவிட்டீர்கள்? ஒன்றுமே அதனைப் பற்றிச் சொல்லவில்லையே?' என்று கேட்டான். அதற்கு அந்தச் சோதிடர் 'அந்த ஜாதகக்காரர் உயிரோடு இல்லை. அதனால் அந்த ஜாதகத்தை இனிமேல் பார்த்துப் பயனில்லை என்று கீழே வைத்தேன்' என்றார்.

இதனைக் கேட்ட இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். 'ஆகா. வகையாக மாட்டிக் கொண்டீர்கள் ஐயா. இந்த ஜாதகங்கள் எங்களுடையது தான். நான் கோடீஸ்வரன் இல்லை. என் ஜாதகத்தைப் பார்த்து அது கோடீஸ்வரன் ஜாதகம் என்கிறீர்கள். என் நண்பன் இதோ உயிரோடு இருக்கிறான். அவன் ஜாதகத்தைப் பார்த்து அது இறந்தவருடைய ஜாதகம் என்கிறீர்கள். நீங்கள் சரியான ஏமாற்றுப் பேர்வழி என்பது இதிலேயே நன்றாகத் தெரிகிறது' என்றான் சோமு.

இந்த மாதிரி துள்ளுபவர்கள் எத்தனை பேரைப் பார்த்திருப்பார் அந்த சோதிடர். எந்த ஊருக்குச் சென்றாலும் ஊருக்கு ஒருத்தராவது இந்த மாதிரி வந்து அலம்பல் பண்ணுவது தானே வழக்கம். தான் கற்ற வித்தையில் தளராத நம்பிக்கை கொண்ட அந்தச் சோதிடர் கொஞ்சமும் அசராமல் 'தம்பி. நீங்கள் முடிவுக்கு வருவதற்கு முன் நான் சில கேள்விகள் கேட்கிறேன். அதற்குப் பதில் சொல்லுங்கள். பின்னர் நான் சொல்வது தவறா இல்லையா என்று நீங்கள் முடிவு செய்யலாம்' என்றார்.

இருவரும் 'சரி. கேளுங்கள்' என்றனர்.

இன்னும் கொஞ்ச நேரம் இராமுவின் ஜாதகத்தைப் பார்த்து ஏதேதோ கணித்து விட்டு 'சரி. இரண்டு வாரத்திற்கு முன் வெள்ளிக்கிழமை ஆறு மணியளவில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் இராமு?' என்று கேட்டார். சற்று சிந்தித்த இராமு, 'நினைவிற்கு வந்துவிட்டது. அந்த நாளை மறக்க முடியாது. அப்போது நான் கோவிலுக்குச் சென்றிருந்தேன்' என்று சொன்னான். 'அப்போது அங்கே என்ன நடந்தது?' 'என்ன நடந்தது என்றால்? நான் கோவிலுக்குப் போனேன். சாமி கும்பிட்டேன். அவ்வளவு தான் நடந்தது. வேறு என்ன?' 'வேறு ஏதாவது குறிப்பிடும் படியா நடந்ததா?' 'ம்ம்ம். அப்படிப் பாத்தா என் கால்விரல் ஒரு கல்லுல தடுக்கி அடிப்பட்டு குருதி வந்தது. அவ்வளவு தான்.'

பின்னர் சோமுவுடைய ஜாதகத்தையும் கொஞ்ச நேரம் கணித்துப் பார்த்து விட்டு 'சோமு. அதே நாள் அதே நேரம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?' 'நான் இராமுவுடன் கோவிலுக்குப் போகாமல் திரைப்படம் போனேன்'. 'சரி அங்கே ஏதாவது குறிப்பிடும் படியா நடந்ததா?' 'அப்படி ஒன்னும் இல்லை. திரும்பி வரும்போது வழியில் ஒரு பத்து ரூபாய்த் தாள் ஒன்று கிடைத்தது'.

'இப்போது எனக்கு புரிந்துவிட்டது. நான் சொன்ன பலன்களில் தவறில்லை. உங்கள் இருவரின் ஜாதகப்படி கிரக நிலைகளின் படி நான் சொன்ன பலன்கள் தான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்த செயல்களால் அந்த பலன்களில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. கவனமாகக் கேளுங்கள். இராமுவின் ஜாதகப்படி அந்த நேரத்தில் ஒரு விபத்தில் அவர் உயிர் போக வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் அவர் கோவிலில் இறைவனை வணங்கிக் கொண்டிருந்ததால் இறைவன் அருளால் அவர் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது. அந்த நேரத்தில் விபத்து என்று பயன் கொடுக்க வேண்டிய வினைகள் இறைவன் அருளால் சிறு காயத்துடன் போனது. அதே நேரத்தில் நண்பனுடன் கோவிலுக்குப் போகாமல் கோவிலுக்குப் போகிறவர்களைப் பற்றி ஏளனமாகப் பேசி கேளிக்கையில் ஈடுபட்டதால் சோமுவுக்கு அவர் ஜாதகப்படி கிடைக்க வேண்டிய கோடி ரூபாய் கிடைக்காமல் வெறும் பத்து ரூபாய் மட்டுமே கிடைத்தது. இது தான் நடந்திருக்கிறது.

நாம் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப தான் ஜாதகப் பலன்கள் அமைகின்றன. ஜாதகப் பலன்கள் என்ன நடக்கலாம் என்று சுட்டிக் காட்டுபவை. சாதாரணமாக அவை அவ்வாறே நடக்கும். ஆனால் மழை பொழியும் போது குடை பிடித்துக் கொண்டு மழையிலிருந்து தப்புவதைப் போல ஏதாவது பிராயச்சித்தம் செய்தாலோ இல்லை இறையருளாலோ அந்த ஜாதகப் பலன்கள் தங்கள் வலிமையை இழக்கும். தீயவை நடக்க வேண்டிய நேரம் அதன் தாக்கம் குறைவாக இருக்கும். நல்லவை நடக்க வேண்டிய நேரம் அதன் தாக்கம் பலமடங்கு அதிகமாகக் கிடைக்கும். இதுவே ஜாதக பலன்கள், பிராயச்சித்தம், இறையருள் போன்றவற்றின் இரகசியம்.'

சோதிடர் சொன்னது இரு நண்பர்களுக்கும் ஏற்றுக் கொள்ளும் படி இருந்தது. அன்று இறைவன் தன்னைக் கைவிட்டுவிட்டாரோ என்று தான் குழப்பம் கொண்டது இராமுவின் நினைவிற்கு வந்தது. உண்மையில் தனக்கு நேர வேண்டிய மரணத்திலிருந்து தன்னை இறைவன் காப்பாற்றியிருக்கிறார் என்று புரிந்தது. சோமுவும் அன்று முதல் இராமுவுடன் சேர்ந்து அடிக்கடி கோவில், குளம் என்று சுற்றத் தொடங்கினான்.


செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யா செந்தில், (4-Mar-12, 4:52 pm)
பார்வை : 781

மேலே