----தோழியின் தோழன்----

------ தோழியின் தோழன் -----

அன்பில்
என் அன்னையை
தாண்டி விடுவாயோ
என்கிற அச்சம்
வருகிறபோது
நட்பைத் தாண்டி விடாமல்
பயணிக்கிறது நம் சிநேகம்....

காதலில் விழுந்துவிடாமல்
கவனமாக இருக்கும்
கவலை நமக்கில்லை
காரணம்
என் தாயை நீயும்
உன் தாயை நானும்
அம்மா என்று
அழைத்து கொள்கிறோம்.

உனக்கு வரும்
காதல் கடிதங்களில்
எழுத்து பிழைகளை
எடுத்துக் காட்டி
நகைத்துச் சிரிக்கும்
நண்பன் நான்.

நாம் இருவரும்
அருகே அமர்ந்து பேசிக்கொள்வதை
காதல் என்று
உறுதி செய்துவிடுகிறது
உலகம்.
பார்வையற்ற உலகம் மீது
பரிதாபம் கொள்கிறது
பக்குவமடைந்திருக்கும்
நம் நட்பு.

என் விரல்களைப் பிடித்து
ஆறுதல் சொல்லும்
உன் விழிகளைப் பார்க்கும் பொழுதுதான்
வீட்டில் எனக்கு
சகோதரி இல்லையென்ற
சங்கடம் வலுக்கிறது.

உன் முகத்தைத் தாண்டதாவாறு
என் பார்வைக்கு
வேலி அமைத்திருக்கிறது
நம் நட்பு....

உன் உறவுகளிடம்
நம் உறவை
ஒளித்து வைக்க வேண்டிய
அவசியம் உனக்கில்லை.

அளவுகடந்த அன்பு என்ற பெயரில்
போலியாக அடைகாக்கும்
கோழியாக
நம் நட்பு
நடந்து கொண்டதில்லை.

என் சுதந்திரம் உன்னிடமோ
உன் சுதந்திரம் என்னிடமோ
இல்லை என்பதை
புரிந்து வைத்திருக்கிறது நட்பு.

உலக அழகி தேடுதலற்று
உருவம் கடந்து
ஊடுருவி
உள்நுழைந்து
உன்னில் இருக்கும்
அன்னை திரசாவை
அங்கீகரித்து வைத்திருக்கிறது
என் நட்பு.

உன் தொடுதலில் மட்டும்தான்
மதனம் சுரக்கும்
ஹார்மோன்கள் கூட
மலடாகி விடுகிறது.


---தமிழ்தாசன்---

எழுதியவர் : ----தமிழ்தாசன்---- (9-Mar-12, 2:29 am)
பார்வை : 4895

மேலே