[160 ] மெய்ப்பொருள் தெளிவோமோ?

வானை முட்டும் மலைகளும் -அதில்
....வளரும் தேக்கு மரங்களும் ,
தானே அழியும் நாள்வரும்! -அன்றுத்
....தரைப்பட்டு அவையும் மறைந்திடும் !
'நானே எழுப்பிய கோபுரம்' -'இவை
....நம்மால் எழுந்த படைக்கலம்'!
ஏனோ இந்த ஆணவம்? -இவை
....எல்லாம் அவர்முன் பொடிபடும்!
பானைக் குள்ளே வெந்திடும் -அரிசி
....பாய்ந்தோ தீயை வென்றிடும்?
மீனை வளர்க்கும் நீரிலே - அந்த
....மீனும் தானே வெந்திடும்?!
ஊனை வளர்க்கும் பொருட்களும் -அந்த
....ஊனால் வளரும் பொருட்களும்
தானே அழியும் நாள்வரும்! -அந்தத்
....தலைவன் உயர்வும் வெளிப்படும்!
...........................(வேறு)
கைகளை நம்பிக் கடவுளை மறந்து
.....கலைகளை வளர்த்திடலாம்! -அதிலே
.....கைப்பொருள் மிகுந்திடலாம்!
பொய்களும் அங்கே பிறந்திடும், வளர்ந்திடும்
.....புதுமைகள் போல்வரலாம்! -நமக்குள்
.....புதுப்புதுச் சுவைதரலாம்!
கைப்பொருள், நம்முள் கர்த்தரு மாகக்,
.....கண்டுளம் தெளிவோமோ? -அதிலே
.....களித்துளம் மகிழ்வோமோ?
மெய்ப்பொருள் அவரை மறந்தவ ராக
.....மேன்மைகள் காண்போமோ? -மேதினி
.....மீதுமே அழிவோமோ?
-௦-