[167 ] பரிந்தெடுத்துக் காப்பாற்றப் பார்!

[அறுசீர் விருத்தப் பாக்கள்]

துறக்கின்றேன் இல்லை,இவ் வுலகத்துத்
.....துன்பங்கள்; துறவாப் போதும்
மறக்கின்றேன் இல்லை;அது மனத்தெண்ணி
.....நொந்திடுவேன்; மதியுள் நீயோ
'பிறக்கின்றேன்' என்றில்லை, பிரிந்தனை,யான்
.....பிறந்தபயன் பேச வுண்டோ?
இறக்கின்றேன் இறைவா!நீ எனையாள
.....விட்டதனால் , இன்னும் இங்கே!

பழிகூட்டும் வினைதீர்க்கப் பாராமல்
.....பாடாமல், பக்தி என்னும்
வழிகூட்டும் இன்பபுரி வாராமல்,
....நின்னருளை வேண்டி நாளும்
விழிகூட்டும் ஆனந்த வெந்நீரில்
.....உடல்கழுவ விருப்ப மின்றிக்
குழிகூட்டும் பற்றுக்கோ குலைகின்றேன்!
.....குக்கலேனக் குறித்திட் டாயோ?

வாடி,மிக வதங்கி,உயிர் வாழ்க்கைதனைத்
..... துயரமென வந்த டைந்து,
கூடிமிக வாழ்த்தியுனைக் குறித்துனது
..... நல்லருளைக் கொள்ள வென்று
பாடி,மிக வருந்திடுவார் பார்த்து,அவர்கள்
..... துயர்கேடச்,செம் பாதம் தூக்கி
ஓடிவரு வாயென்ற உன்னடியார்
.....கூற்றிலெதும் உண்மை இன்றோ?

தேடிவரு கின்றவரைத் தேற்றுபவர்!
..... தினம்,பாவத் தீயி னின்றும்,
மூடியவ ராய்க்காத்து முன்னேற்றி
..... இகபரத்தில் , முடியா இன்பம்
கூடிவரச் செய்பவர்!,தம் குற்றமெல்லாம்
..... உணர்ந்துரைத்துத் திருந்தி வாழ,
நாடிவரு வோர்க்கருளும் நாயகன்!கை
..... விடவோ?நான் நலியத் தானோ?

நீடிய,வெம் பாவமெலாம் நிஞ்சிலுவைக்
..... கீழ்மடியும்! நெருங்கா மீண்டும்!
ஓடியதன் கைதப்ப வேண்டாமே!
..... உன்குருதி ஒழுகும் பாதம்
தேடிவரக் கிட்டிடுமே தினமென்னுள்
..... ஆறுதலும், அமைதி தானும்!
கொடிகொடுத் தாலுமினிக் கொள்வதற்கோ?
..... எனையுனக்குக் கொடுத்த பின்னும்!

நினைக்கின்றேன் இலையோ,இந் நீணிலத்தில்,
..... பலதுன்பம் நேரக் கண்டும்?
நினைக்கொன்றேன் நெஞ்சுள்ளே நீர்க்கின்றேன்,
..... எனநீயும் நினைத்துத் தானோ
'நனைக்கின்றேன், இலையுன்னை நம்மருளால்'
..... என்றிருந்து நலிய விட்டாய்?
வினைக்கின்றே ஆளானேன்! வேதனையில்
..... நான்மாண்டு வேகத் தானோ?

அறிந்துணர வல்லேன்,இவ் வுலகத்தில்
..... எல்லாமே அழியு மென்று!
தெரிந்தும்,உணர் வில்லேன்,இத் திடவுடலும்
..... மண்ணுக்குள் திரும்பு மென்று!
புரிந்துணர வல்லேன்,உன் புகழ்பேசி
..... நல்லறங்கள் பேணி னாரை!
பரிந்தெடுத்துக் காப்பாற்றப் பாராயோ
..... கண்?என்ன பாவி யோநான்?

-௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (21-Mar-12, 6:36 am)
பார்வை : 340

மேலே