[169 ] அவருள் வாழ்வாய்..!
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னுள் இருக்கும் திறமைகள் தம்மை
.....உணர்ந்து பெருக்க வேண்டும்!
உன்னை மட்டும் உயர்த்திட எண்ணி
.....உழைத்தல் தவிர்க்க வேண்டும்!
தன்னை மட்டும் வளர்ப்பதை நல்ல
.....தகப்பன் விரும்ப மாட்டான்!
தன்னோடு உலகைத் தாங்கும் செயலைத்
.....தலைவன் வெறுக்க மாட்டான்!
கள்ளமும் கபடும் உழைப்பில் காட்டிக்
.....கைத்திறன் அழிக்காதே!
பள்ளமும் மேடும் பார்த்திட மாறும்
.....படைத்தவன் விளையாட்டே!
உள்ளதைப் பெருக்கி உலகுக்கும் கொடுக்க
.....உண்மையில் மறவாதே!
தள்ளியும் சேர்த்தும் வைப்பவன் கைகளில்
.....தண்டனை தப்பாதே!
உலகுக் காக வாழ்வதை விரும்பு!
.....உனக்கென வாழாதே!
கலகக் காரர் கைகளில் உன்னைக்
.....கருவிகள் ஆக்காதே!
பலவகைத் தாலந் துகளின் நல்ல
.....பலன்களை மறுக்காதே!
பலனைக் கேட்டு வருவார் படைத்தவர்!
.....பயம்,உனைக் காவாதே!
பின்னால் எல்லாம் விட்டே போவோம்,
.....பிறருக்கு ஈவாயோ?
உன்பால் எதுவும் ஒட்டாது ஓடும்
.....உண்மை அறியாயோ?
தன்னால் ஏதும் வந்ததும் இல்லை;
.....தந்தை தந்தாரே!
அன்பால் கூடி ஒன்றாய் வாழ
.....அவருள் வாழ்வாயே!
-௦-