[171 ] எழுவீர்! எழுப்பிடுவீர்!..

பட்டப் படிப்பு மாணவரே!
.....பள்ளி முடித்த தோழர்களே!
நட்டப் படும்,இந் நாட்டினரின்
.....நலிவை போக்க எழுந்திடுவீர்!
பட்டுச் சிறகு மனங்களையே
.....பலவண் ணத்துக் கொடிமீது
கட்டு விரித்துச் சாய்த்திடுவீர்!
.....கைகள் கொடுத்துத் தூக்கிடிவீர்!

கொட்டிக் கிடக்கும் வளங்களினைக்
.... கொள்ளை யடிக்க நினைப்போர்முன்
பட்டி ஆடாய்ச் செல்லாமல்
.... பலதே சத்துப் பூமியின்மேல்
முட்டி மோதி முன்னேற
.... முயற்சி தூக்கும் ஒருநாடாய்த்
திட்ட மிட்டுச் செயல்செய்யத்
.... திடமாய் எழுந்து வாரீரே!

மொழிகள்,நதிகள் போன்றவையே!
.... முடக்கி வைக்க நினையாதீர்!
வழிகள் கூட்டி நமக்கவைகள்
.... வாய்க்கா லாக இருக்கட்டும்!
பழிகள் சேர நமை,மீண்டும்
.... பழைய குடிகள் ஆக்காமல்
இழிவை நீக்கித் தெளிவுடனே
.... எழுந்து நடக்க உதவட்டும்!

கொழித்துக் கிடக்கும் நலங்களெலாம்
.... கூட்டுச் சொத்தாம்! இவைகளினை
வழித்துக் கொண்டு சுயநலத்தை
.... வளர்க்க எண்ணி வருவோரின்
ஒழித்து மறைத்த உணர்வுகளை
.... ஓர்ந்து, தெரிந்து, தடுத்திடவே
விழிப்புக் கூட்டிப் படியுங்கள்!
.... வெறுப்பு நீக்கிப் படியுங்கள்!

நாட்டு வளங்கள் நமக்காக!
.... நாமேல் லோரும் ஒன்றாகக்
கூட்டுப் பொறுப்பில் அவைகாப்பீர் !
.... கொள்ளை யடித்து வெளிநாட்டில்,
போட்டு வைப்பார் சொல்கேட்டுப்
....பொதுநல மற்றப் பிரிவினையுள்
மாட்டி யழிந்து போகாமல்
.... மகிழ்பா ரதத்தை எழுப்பிடுவீர்!

-௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (24-Mar-12, 7:18 am)
பார்வை : 158

மேலே