என் மகன் இனியன்...
ஆம் .
அவன் பெயர் மட்டுமல்ல
அவனே இனியன் தான்.
அவ்வப்போது
அவன் அழுகையும்
பிடிவாதமும் –எனக்கு
கோபமேற்றும் .....
நானும் அப்படித்தான் என
அம்மா சொல்வாள் ...
அதில் எனக்கொரு பெருமை .
நான் சொல்வதொன்றையும்
அவன் கேட்க மாட்டான் ..
அந்த கணம்
கண்ணாடி முன் நிற்பதைப் போல்
தோன்றும்.
அவன் குறும்புகளை
நினைத்து மகிழ
எனக்கு இன்னும்
இரண்டு பிறவிகள் வேண்டும் ...
அயர்ந்துறங்கும்
பொம்மைகளை
வேண்டுமென்றே வம்பிற்கிழுப்பான்
அடங்கியவைகள் தப்பித்தன
அடங்காதவைகளை உடைத்தெரிவான் ...
அவைகளின் கதறல்
கல்நெஞ்சையும் கரைக்கும் ...
என் மனைவியின் கூந்தல்
அவன் பிய்த்து விளையாடும்
மயிலிறகு ...
அவன் சிரித்தால்
கன்னத்தில் குழி விழும்
அதிலிருந்து இறைவன்
எட்டிப் பார்ப்பான் ...
என்னை அடக்கி ஆள
ஒருவன் பிறந்துவிட்டதாய்
எல்லாரும் சொல்கிறார்கள் ....
இல்லையில்லை ....
என் மகன் இனியன்...
-எபி